- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

பிளேஸ்மென்ட் ஏமாற்றம்!

17 [1]பிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்

“பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் காண்பித்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை ஈர்த்து வருகின்றன.

இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குப் படிப்பை முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்த பின்னர் அந்த நிறுவனத்திலும் பணிக்குச் சேர்ந்துவிடுவார். ஆனால், 6 மாதம் கழித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்து, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

இப்படி, “எல் அண்ட் டி இன்ஃபோடெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள்தான் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 1500-க்கும் அதிமான மாணவர்களை இந்த நிறுவனம் இதுபோல நிராகரித்துள்ளது. கடந்த 2014-இல் இந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கிய இந்த நிறுவனம் அதன் பிறகு, பணியில் சேருவதற்கான தேதியை மாணவர்களுக்குத் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. அந்தத் தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி இந்த மாணவர்கள் அனைவரையும் நிராகரித்துள்ளது.

“பிளேஸ்மென்ட்’ விஷயத்தில் இந்த ஒரு சம்பவம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பொறியியல் மாணவர்கள் இதுபோன்று வேலைவாய்ப்பை இழந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க இயலாது: “பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் நூதனமாக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பெரும்பாலான கல்லூரிகள் மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் கொடுத்தே நிறுவனங்களை வளாகத் தேர்வுக்கு கல்லூரிக்குள் அழைத்து வருகின்றன. அவ்வாறு வரும் நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தும் எழுத்துத் தேர்வில் மிக எளிமையான கேள்விகளையே கேட்கின்றன.

இதில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களும் தகுதி பெற்று, பணி வாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்று விடுகின்றனர்.

பின்னர் படிப்பை முடித்ததும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை அந்த நிறுவனம் நடத்தும். அப்போது மிகவும் கடினமான கேள்விகளை நிறுவனங்கள் கேட்கின்றன.

இதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் தோல்வியடைந்து, நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த மோசடி குறித்து மாணவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில், தெளிவாக தேர்வு வைத்து மாணவர்கள் அவர்கள் தகுதியிழக்கச் செய்கின்றனர்.
எனவே, பொறியியல் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து சிறந்த பொறியியல் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர் அண்ணா பல்கலைககழக பேராசிரியர்கள்.

எங்கு புகார் தெரிவிப்பது?: இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல மைய இயக்குநர் இளையபெருமாள் கூறியது:

சோழிங்கநல்லூரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மாணவர்கள் புகார் அளித்தால்தான், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவரும். கடந்த ஆண்டு, இதுபோல வளாகத் தேர்வே நடத்தாமல் வேலைவாய்ப்புக்கான போலியான கடிதத்தை மாணவர்களுக்கு அளித்தது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது.

எனவே, போலியான பணிவாய்ப்பு தொடர்பாக 044 – 22357080, 22357081 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். அல்லது dsa at annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.