- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை!

baskaran [1]இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 300 ரூபாய் கையூட்டு தர மறுத்த ராஜேந்திர பிரசாத் என்ற வலிப்பு நோய் கண்ட 18 வயது இளைஞர், அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டதால் இறந்தே போய்விட்டார். இந்தக் கொடுமை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்காக மாறியிருக்கிறது.

விசாரணைகள், அறிக்கைகள், வழக்குகள், தண்டனைகள் போன்றவற்றுக்குப் பிறகு இவ்விரு அவலங்களும் வழக்கம்போல ஆறிப்போனவையாக மாறிவிடும்.

அடிக்கடி நடக்கின்ற இத்தகைய நிகழ்வுகளிலிருந்து இதுநாள் வரை எவரும் எத்தகையப் பாடங்களையும் கற்கவில்லை. சில நேரங்களில், அரங்கேறுகின்ற அவலங்களுக்குத் தீர்வாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் கூடுதல் அவலங்களாக மாறிவிடுவதும் நடக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் சேவைத் துறைகளில் மிகவும் முதன்மையானவை, மருத்துவம், கல்வி, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளேயாகும். நமது தமிழ்நாட்டில் இந்த மூன்று துறைகளுமே உடனடியாக சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியாக வேண்டியவைகளாக இருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறைகளின் நோய்கள் முற்றிக் கொண்டே வருவதை புள்ளி விவரங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகளும் நோயாளிகளின் பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றன, மருத்துவப் பணியாளர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதன் விளைவாக சிகிச்சை பெற்று நலமடைவோரின் எண்ணிக்கையைவிட சிகிச்சை வேண்டி ஓலமிடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.

நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்குக் கடைசிப் புகலிடமாக இருப்பது அரசு பொது மருத்துவமனைதான். தனியார் மருத்துவமனைகளில் அவர்களால் நுழையவே முடிவதில்லை. ஒருவேளை நுழைந்து அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டாலும் அவர்களது பொருளாதாரம் மரணித்து விடுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதன் காரணமாகத் தங்களது வாழ்வாதாரங்களையே இழந்துவிட்ட குடும்பங்கள் ஏராளம்.

அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரம் உயராமல் போவதன் விளைவாகவே, ஏழை எளிய மக்களுக்கான உயிர் காக்கும் அறுவை சிகிச்சையில் தனியார் துறையின் காப்பீட்டுத் திட்டம் உள்ளே நுழைந்தது. இந்தத் திட்டம் தனியார் மருத்துவமனைகளுக்கே வளம் சேர்த்திருப்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அறுவைச் சிகிச்சைக்காக கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகளுக்குப் போய் சேர்ந்துவிட்ட ரூ.2,500 கோடி நிதியைக் கொண்டு தமிழகம் முழுவதும் 15 பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம். அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் அரசு மருத்துவமனைகள் பின்தங்கி விட்டன.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு மருத்துவமனைகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள ஊக்கமூட்டும் வகையில் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துவப் பணியாளர்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் 2011-ஆம் ஆண்டு பொருளாதார சலுகைகளை அறிவித்தது. அதன் பிறகு நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளே இத்திட்டத்தால் பெருமளவில் பணம் ஈட்டின.

தமிழ்நாட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அவை தமிழக மக்களுக்கான மருத்துவத் தேவையை நிறைவு செய்யப் போதுமானதாக இல்லை.

5,000 பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம், 20,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றெல்லாம் கணக்கிட்டு பல்வேறு தர நிலைகளில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டாலும், நோய்வாய்ப்பட்ட மக்கள் அங்கெல்லாம் தரையிலும், மரத்தடிகளிலும்தான் படுக்க நேர்கிறது. மருந்துகள், படுக்கைகள், மருத்துவ உதவி வாகனங்கள் பற்றாக்குறையும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் தமிழக மருத்துவ மையங்களுக்கு நிரந்தரப் பிரச்னைகளாக இருக்கின்றன.

தமிழக மருத்துவமனைகளில் 300-க்கும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 66 மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கான தேவை இருக்கிறது.

தகுதி வாய்ந்த மருத்துவர்களின் பற்றாக்குறைதான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் செழிக்கக் காரணமாக அமைந்தது.

அரசின் மருத்துவ மையங்கள் பெரும்பாலும் தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் தங்களின் இயலாமையை விவரித்து தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்பி வைக்கும் பரிந்துரை முகாம்களாகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவ மையங்களில் தரமான மருத்துவச் சேவையை எதிர்பார்க்கக் கூடாது என்கிற கருத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அரசு மருத்துவ மையங்களே அப்படிப்பட்ட கருத்தை உருவாக்கியிருக்கின்றன.

நோய்களுக்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டு தொலைநோக்குப் பார்வையுடன் நமது மருத்துவத் துறை செயல்படுவதாக தெரியவில்லை.

வாகன விபத்துகள், பிரசவங்கள், புகையிலைத் தொடர்பான நோய்கள், மதுப்பழக்க நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் எதிர்கொண்டு உரிய மருத்துவச் சேவைகளை அளிக்கும் நிலையில் நமது மருத்துவமனைகள் செயலாற்றவில்லை.

கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நோய்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, அவற்றுக்கு மருத்துவம் செய்ய முடியாத நிலையை நாம் அடைந்திருக்கிறோம்.

மற்ற நோய்களையெல்லாம் விட்டு விடுங்கள். தமிழ்நாட்டில் ஓர் ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் நாய்களிடம் கடிபட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 40 லட்சம் பேர் நாய்க்கடிக்கு மருத்துவம் பெற அரசு மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். இவர்களில் 40 விழுக்காட்டினர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 பேர் நாய்களிடம் கடிபட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் (தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வோர் கணக்கு தனி).

2015-ஆம் ஆண்டில் மட்டும் நாய்க்கடி மருந்துக்காக அரசு 12 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறது. நாய்களையும் மருந்து விற்பனையையும், ஒரே நேரத்தில் களத்தில் இறக்கி விட்டு விட்டு, கடிபட்ட குடிமக்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்வதே நமது மருத்துவமுறை.

இதைவிடக் கொடுமை, கல்லீரல் நோய் பிரச்னை. தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் அதிக அளவில் உள்நோயாளிகளாகச் சேருகிறவர்களும், வெளிநோயாளிகளாக வந்து செல்பவர்களும் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள்தான். அரசின் மது விற்பனைத் தொகை ஆண்டுதோறும் உயர்வதற்கு ஏற்ப கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது.

2008-ஆம் ஆண்டு மதுபான வகைகள் விற்பனை சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாயாக இருந்தபோது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்பிற்குள்ளான வெளி நோயாளிகளாகவும், 7,500-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் என்றும், 22,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் என்றும் உயர்ந்துவிட்டது. மது விற்பனை அளவும் அந்த ஆண்டு 23,000 கோடிக்கும் அதிமாகத் தாண்டியது.

கல்லீரல் அதிக அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிக அளவாக சென்னை அரசு மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர். மாவட்ட மற்றும் உள்ளூர் மருத்துவமனைகள் அவர்களைக் கைவிட்டு விட்டதே இதற்கான காரணமாகும்.

கல்லீரல் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருவதால், தமிழகத்தில் 12 கல்லீரல் சிறப்பு சிகிச்சை மையங்களை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. 6,800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளுக்கும், அவற்றின் 23 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட விற்பனைத் தொகைக்கும் முன்னால் இந்த 12 கல்லீரல் சிகிச்சை மருத்துவமனைகள் எந்த மூலைக்கு எனும் கேள்வி நம் மனதில் எழுவது இயல்பே.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளுக்கு உடனடித் தேவை தொலைநோக்குடன் கூடிய நிர்வாக நடவடிக்கை. அத்தகைய நடவடிக்கையே நமது நாட்டின் கோடிக்கணக்கான ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களை வாழவைக்கும்!

கட்டுரையாளர்:  எழுத்தாளர் -ஜெயபாஸ்கரன்