- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி… இப்படி!

    p29 [1]‘கறுப்புப் பணம்… கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் பொதுமக்களின் கூட்டம் இன்னமும் அலைமோதுகிறது. தினக்கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர், ஒழுங்காக வரி செலுத்தும் வியாபாரிகள் ஆகியோர்தான் வங்கிகளிலும்  ஏ.டி.எம் வாசல்களிலும் நிற்கின்றனர். இந்த இடங்களில், கோடி கோடியாய் குவித்துவைத்துள்ள அரசியல்வாதிகளையோ, பெரும் பணக்காரர் களையோ காணவில்லை. கமிஷன் வாங்கி கல்லா கட்டிய அதிகாரிகள் யாரும் வரிசைக்கு வரவில்லை. கறுப்புப் பணத்தையே மூலதனமாக வைத்துள்ள சினிமா பிரபலங்களையும் வங்கிகளிலோ, ஏ.டி.எம் வாசல்களிலோ பார்க்க முடியவில்லை. இரண்டாம் நம்பர் பிசினஸ் மட்டுமே செய்யும் வட இந்தியத் தொழிலதிபர்கள் எவரையும் இங்கு காணவில்லை. அவர்களிடம் கறுப்புப் பணமே இல்லையா? அல்லது, இருந்த கறுப்புப் பணத்தை வங்கியில் செலுத்தி, வரி கட்டி நியாயமானவர்களாக மாறிவிட்டார்களா? இல்லை, அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதை மாற்றிக் கொடுப்பதற்கு பல நூறு புரோக்கர்கள் இருக்கின்றனர். அந்த வழிகளில், அவர்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்த கறுப்புப் பணம், இப்போது, புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக பத்திரமாக உள்ளன. அல்லது தங்கமாக மாறி உள்ளன. இன்னும் ஆழமாகப் போனால் கடல் கடந்துவிட்டன. என்னென்ன வழிகள் யார் யாருக்கு?

40 சதவிகிதம் கமிஷன் !

சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தொழில். ஒரு லட்சம் ரூபாய் பழைய செல்லாத நோட்டுகள் கொடுத்தால், 40 சதவிகிதம் வரை கமிஷன் எடுத்துக் கொண்டு 60 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளாகக் கொடுத்துவிடுகின்றனர். இவ்வளவு நாட்களாக வட்டிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது இந்தப் புதிய தொழிலில் குதித்துள்ளனர். அவர்களுக்கு இவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்றால், வங்கி அதிகாரிகளின் உதவியால் வங்கிகளில் இருந்து கிடைக்கின்றன. இந்தத் தொழிலில் வங்கி அதிகாரிகளின் தயவின்றி, ஒரு அணுவும் அசையாது. 40 சதவிகித கமிஷனில், வங்கி அதிகாரிகளுக்குக் கணிசமான தொகை போகிறது. வங்கி அதிகாரிகள், தங்களிடம் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க கையிருப்பில் இருக்கும் லைசென்ஸ் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றின் நகல்களைப் பயன்படுத்தி, 4 ஆயிரம், 2 ஆயிரம் கொடுத்ததாக கணக்குக்காட்டி, இந்த கமிஷன் ஏஜென்டுகளிடம் கொடுக்கின்றனர். அவர்கள், அதை வைத்து கமிஷன் வியாபாரம் செய்கின்றனர்.

 

p29d [2]வடக்கில் 20-க்கு வாங்கி… தெற்கில் 40-க்கு விற்பனை!

ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளை 20 சதவிகித கமிஷனுக்கு வாங்குகின்றனர். அங்கு எப்படி அவ்வளவு புதிய நோட்டுகள் புழங்குகின்றன என்றால், மேற்கு வங்கத்தில் குடிபுகுந்த பங்களாதேஷ் அகதிகளின் அடையாள அட்டைகள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 23 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. இங்கு நடக்கும் அதே வேலைதான் அங்கும் நடக்கிறது. மக்களின் வாக்காளர் அடையாள அட்டை, லைசென்ஸ் ஜெராக்ஸ், பான் கார்டு வைத்து, வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு வங்கி அதிகாரிகளுக்கு 10 சதவிகிதம் கமிஷன் கொடுக்கிறார்கள். பிறகு, அங்கிருந்து 20 சதவிகிதம் கமிஷனுக்கு தென் இந்தியாவுக்குள் வருகிறது. இங்கு 40 சதவிகிதம் கமிஷனுக்கு இங்குள்ளவர்களுக்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் விற்கப்படுகின்றன. முக்கியமான பஜார்களில் நடப்பது எல்லாம் இந்த வேலைகள்தான். இதில் பணத்தை எடுத்துக்கொண்டு போவது, அவரவர் சொந்த ரிஸ்க். இதில் டோர் டெலிவரி கிடையாது.

கோயில்கள் மூலம் வெள்ளை!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு அர்த்தம், பலருக்கு இப்போதுதான் புரிகிறது. அந்த அளவுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கோயில்கள் உபகாரம் செய்கின்றன.  உண்டியல் காணிக்கையாக வந்த தொகை என்று நாள்தோறும், வாரம்தோறும், மாதம்தோறும் கணக்குப் பார்த்து வரும்தொகை, தற்போது பழைய நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்ற மட்டுமே பயன்படுகிறது. ஆனால், தனியார் கோயில்கள் இதையும் தாண்டி கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கின்றன. கோயில் காணிக்கையாக வந்த தொகை என்று நாள்தோறும் லட்சக்கணக்கில் மாற்றுகின்றனர். சின்ன கோயில்களை இப்படி என்றால், பெரிய கோவில்கள்  எல்லாம் எத்தனை லட்சங்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு காணிக்கையாக வந்த தொகை என்று சொல்லி, பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்கின்றனர். அதில் வரி பிடித்தம் செய்ய வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், கோயில் செலவு என்று சொல்லி நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ஒரு சிறப்பு யாகம் நடத்தினோம், அதில் 1,000 பட்டுப் புடவைகளை யாக குண்டத்தில் போட்டோம், ஆயிரம் லிட்டர் நெய் ஊற்றினோம். தங்கத்தை இறைத்தோம். சுவாமிக்கு 100 டின் வெண்ணெய் சாத்தினோம் என்று செலவுக் கணக்கை எப்படி வேண்டுமானாலும் நீட்டி முழக்கலாம். அது எல்லாம் பிற்காலத்தில் வேண்டுமானால் பிரச்னையாக எழும். ஆனால், இப்போதைக்கு எழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், p29c [3]புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற கோயில்கள் தான் இப்போதைக்கு சிறந்த தலம்.

 

அரசியல்வாதிகளுக்கு அரசுத் துறைகள்!

‘புதிய பாட்டிலில் பழைய ஒயின்’ என்ற கதைதான். அரசு கருவூலம், போக்குவரத்துத் துறை, டாஸ்மாக் போன்ற துறைகளில் வசூல் ஆன தொகை அப்படியே கறுப்புப் பணத்தை மாற்றுவதற்குத்தான் பயன்பட்டன. இந்த யோசனைகள் எல்லாம், மோடி அறிவிப்பு வெளியானதுமே இவற்றின் மூலம் அள்ளிக் கொண்டு போய்விட்டனர் முக்கியமான அரசியல்வாதிகள். அதுபோல, இப்போது பெட்ரோல் பங்குகளில், நூறு ரூபாய் நோட்டுகள் அல்லது புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழங்குகின்றன. அவர்களிடம் இருக்கும் தொகையை கமிஷன் அடிப்படையில் அப்படியே வழித்துக்கொண்டு போய்விடுகின்றனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அவர்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை அப்படியே அவர்கள் கணக்கில் வங்கியில் வரவு வைத்து, நல்ல நோட்டுகளாக மாற்றிக்கொள்கின்றனர்.

450 கிலோ தங்கம்!

கறுப்புப் பணத்துக்கும் தங்கத்துக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான், மோடி அறிவிப்பு வெளியான  சில  நேரங்களில்  சௌகார் பேட்டையில் மட்டும் 450 கிலோ விற்றதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் தங்கம் கிலோ கணக்கில் விற்றுக்கொண்டே இருந்தது. நிறைய கறுப்புப் பணத்தில், தங்கக் கட்டிகளை வாங்கினார்கள். பில் இல்லாத வியாபாரம் அப்படியே பிளாக் மணியாக கைமாறியது. தங்கக் கட்டிகளை விற்றவர்கள், அதை நகைகளாக விற்றதாகக் கணக்குக் காட்டுவார்கள். கட்டிகளின் விலை வேறு. நகைகளாக மாறும்போது அதன் விலை வேறு. அதில் செய்கூலி, சேதாரம் என எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வார்கள். இந்தவகையில், கறுப்புப் பணம், வெள்ளையாக மாறும். தங்க வியாபாரத்தில் இதுபோல, கறுப்பை வெள்ளையாக மாற்ற ஏராளமான வழிகள் இருக்கின்றன.

கல்லூரிகளில் வெள்ளையாகும் கறுப்பு!

p29b [4]முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், கோடீஸ்வரர்களுக்கு கல்லூரிகள் இருக்கின்றன. அங்கிருக்கும் மாணவர்களின் கணக்கில் ஆயிரக் கணக்கில் டெபாசிட் செய்துவிடுகின்றனர். அதன்பிறகு, மாணவர்களிடம் அடுத்த ஆண்டு ஃபீஸ் கட்டும்போது, அவர்களுடைய ஃபீஸ் கட்டணத்தில் 10 ஆயிரம் அதிகம் என்ற விகிதத்தில் பலர் தங்களின் கறுப்புப் பணத்தை மாற்றிவிட்டனர். தனியார் நிறுவனங்கள் இதே யுக்தியைப் பயன்படுத்தி, அவர்களின் ஊழியர்களுக்குக் கடன், அட்வான்ஸ் என்ற பெயரில் அவர்கள் கணக்கில் பணத்தை வரவு வைத்துவிட்டன. அதன்பிறகு, அதை அவர்களின் அடுத்தடுத்த சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டன.

 

உயிர்பெற்ற டெட் அக்கவுன்ட்டுகள்!

p29ba [5]ஜன்தன் வங்கிக் கணக்குகள் இதற்கு மிகப் பெரிய உதாரணம். உருவாக்கப்பட்ட 23 கோடி வங்கிக் கணக்குகளில் எந்தப் பரிமாற்றமும் இல்லாமல் இருந்தது. அதுபோல, கடந்த முறை மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, அவர் தொகுதிக்குள் வீதிக்குப் பத்து ஏ.டி.எம்-கள், தெருவுக்கு 20 வங்கிகள் என்று வைத்து, அந்தத் தொகுதியில் இருக்கும் அனைவருக்கும் வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொடுத்தனர். இதுபோல பயன்படுத்தப்படாத அக்கவுன்ட்டுகள் கோடிக் கணக்கில் இருக்கின்றன. அவை வங்கி அதிகாரிகளுக்குத் தெரியும். அவற்றுக்கு உயிர் கொடுத்து, இப்போது செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படுகின்றன. அதோடு கறுப்புப் பணமும் ஆட்டோமேட்டிக்காக வெள்ளைப் பணமாகிறது.

 

புதிய தீவுகள்!

மிகப் பெரிய கோடீஸ்வரர்கள், தங்களிடம் இருந்த பணத்தை அவசர அவசரமாக  வெளிநாட்டுக்கு ஹவாலா முறையில் கொண்டு செல்கின்றனர். மேற்கு இந்தியத் தீவுகளில் புதிய புதிய தீவுகளாக மாறலாம். அதன்மூலம்  எப்படியோ அவர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வித்தைகளை அறிந்துள்ளனர். இவை எல்லாம் நாம் விசாரித்தவரையில் நமக்குக் கிடைத்த சில வழிகள்தான். ஆனால், கோடி கோடியாகக் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைக்கத் தெரிந்த பண முதலைகளுக்கு இதுபோல், பல வழிகள் தெரியும்.

– ஜோ.ஸ்டாலின், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

நன்றி  ஜூனியர் விகடன்