அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து விரைவாக   கரைந்து கொண்டே இருக்கிறது.

இந்த மாறுதலின் தாக்கம் வெளி உலகத்தில் காணவேண்டிய அவசியம் இல்லை. ஒரு குடும்பத்தில், ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் காணமுடிகிறது.

தந்தையின் சொத்தை தனதாக்க தனயன் தகாத முறையில் திட்டம் தீட்டுகிறான். பங்காளியின் சொத்தை அபகரிக்க உடன் பிறப்புகளே உடன் பிறந்தவர்களை உண்டு இல்லையென்று செய்துவிடுகிறார்கள்.

படித்த குடும்பத்தில் கணவனைவிட மனைவி உழைப்பிலும், ஊதியத்திலும், அறிவிலும் ஆற்றலிலும் உயர்வது ஆணாதிக்க மனப்பான்மை உள்ள கணவனுக்கு பிடிக்காத குறுகிய மனப்பான்மை.

பேருந்து விபத்துகளில் சிக்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாத சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் அவர்களின் முதல்களை அபகரிப்பு செய்யும் அற்ப புத்தியில் ஈடுபடுவதை விபத்து நடக்கும் பகுதிகளில் அன்றாடம் காணமுடிகிறது.

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பொருளை பெற்றவர் அவர் அதை என்ன செய்ய வேண்டும்? அது விசயத்தில் அவர் எவ்வாறு பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூட அண்ணலார் நமக்கு அழகான முறையில் கற்றுத் தருகிறார்கள்.

சாலையில் விழுந்துகிடந்த பொருள் உணவுப் பண்டங்களாகவோ, பழங்களாகவோ இருந்தால். அதை கண்டெடுத்தவர் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதை பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைகிறது.

“பாதையில் கிடந்த ஒரு பேரீத்தம் பழம் குறித்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்கள் ‘இது தர்மப் பொருளாக இருக்குமோ எனும் அச்சம் இல்லாதிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என இவ்வாறு கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் விலைமதிக்க முடியாத பொருளாக இருந்தால் அது விசயத்தில் எவ்வாறு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

“ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சாலையில் கண்டெடுக்கும் பொருளைப் பற்றி கேட்கும் போது. ‘அதைப் பற்றி ஒரு வருட காலத்திற்கு நீர் அறிவிப்புச் செய்வீர்!; அதன் பையையும், முடிச்சையும் பாதுகாத்திடுவீர்!; பின்னர் அதன் உரிமையாளர் அதன் அடையாளத்தைக் கூறினால், அதை அவரிடமே ஒப்படைத்துவிடுவீர்! யாருமே உரிமை கோராவிட்டால் நீர் அதனைச் செலவழித்துக் கொள்வீராக! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்” (நூல்: புகாரி 6112)

கிடைத்ததெல்லாம் சொந்தம் என கொண்டாடும் இந்த காலத்தில் குறுகிய மனப்பான்மை கொண்ட மனித சமூகத்தில் எங்கே எது கிடந்தாலும் அதை கைப்பற்றி அதன் உரிமையாளரிடம் சேர்ப்பிக்கும் வழியினை கையாள வேண்டும். அது விசயத்தில் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்றே பரந்த மனப்பான்மையை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார்கள்.

அடுத்தவரின் நலன் மீதும், பொருள் மீதும் அக்கறை கொள்ளும் பண்பே பரந்த மனப்பான்மையாகும். இந்த பரந்த மனப்பான்ஆ ஒவ்வொரு மனிதனிடமும் பரந்து கிடக்க வேண்டும். நாம் இறைவனிடம் அருளையும், பொருளையும் கேட்கும் போதும் கூட நமக்கு மட்டும் கேட்டு சுருக்கிவிடக்கூடாது.

“ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நபித் தோழர்களும் நின்றனர். அப்போது ஒரு கிராமவாசி” இறைவா எனக்கும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மட்டும் அருள்புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே! என பிரார்த்தித்தார்.

தொழுகை முடிந்தபிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விசாலமான இறையருளை நீ குறுக்கிவிட்டாயே! என்றார்கள். (புகாரி 6010)

முஸ்லிம்களில் பெரும்பாலோனர் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இந்த போக்கு அபத்தமானதும், ஆபத்தானதும் ஆகும். பரந்த மனதுடன் நடந்து கொள்வதினால் நாம் சிறுமை அடையமாட்டோம். நாம் சிறுமை அடைந்ததற்கு பெருந்தன்மையை கை கழுவியது தான் நிஜம். அதுதான் உண்மையும்கூட.

    ஹாபிழ் அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்  – முஸ்லிம் முரசு நவம்பர் 2015