- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

அரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்!

சுகாதார நிலையம்


“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது மேலத்தானியம் கிராமம். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தக் கிராமம், முள்ளிப்பட்டி, உசிலம்பட்டி, உலியம்பாளையம் உள்ளிட்ட எட்டுக் கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள காரையூர் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கே செல்லவேண்டும். இது பல நேரங்களில் தாமதமாக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியின் இறப்புக்கும் வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள், தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழக அரசு, கடந்த வருடம், மேலதானியம் கிராமத்துக்கு மருத்துவமனை அறிவித்தது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி மேலதானியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய சமுதாயகூடக் கட்டடத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், தினசரி 90 பேருக்கு மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு இங்கு மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இந்தச் சுகாதார மையத்துக்கு நிரந்தரமான, புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து, அந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பஞ்சாயத்தார் ஆகியோர் புதிய கட்டடம் கட்ட இடம் தேடி அலைந்தனர்.

இம்மாதம் 1-ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த முகம்மதுசித்திக் என்பவரின் மனைவி ரஹமத் நிஷா, சுகாதாரப் பணித் துணை இயக்குநர் பரணிதரன்,  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திலகவதி முருகேசன், ஜமாத் பொருளாளர் அபிபுல்லா, மேலத்தானியத்தைச் சேர்ந்த மலைச்சாமி, வெள்ளைச்சாமி ஆகியோர் சகிதமாக வந்து, தனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 74 சென்ட் நிலத்தை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட நன்கொடையாக அரசுக்கு வழங்க விரும்புவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷிடம் கூறினார்.


ரஹமத் நிஷா நிலத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கணேஷ், “ரஹமத் நிஷாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களைப் போல அரசின் திட்டங்களுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முன்வர வேண்டும்” என்றார்.

ரஹமத் நிஷாவின் குடும்பம் இயல்பாகவே அந்தக் கிராமத்திலுள்ள எளியவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும் குடும்பம். அவர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மற்றவருக்கு உதவும் வகையில் செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில்தான், அந்த ஊர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான திலகவதியின் கணவர் முருகேசன் மற்றும் ஜமாத்தார்கள், கூடி தங்கள் கிராமத்துக்கு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைப்பதற்குத் தேவையான இடம் தேடியபோது, முகமது சித்திக் குடும்பத்தை அணுகினர்.

இது குறித்து ரஹமத் நிஷா பேசியபோது, “ஊருக்கு நடுவில் எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலம் எங்கள் தாத்தா வழிச் சொத்து என்பதால், அது என் பெயரில் இருந்தது. இந்நிலையில், எங்க ஊர் பெரியவர்கள் வந்து ஆஸ்பத்திரிக் கட்டுவதற்கு இடம் வேண்டும் எனக் கேட்டார்கள். எங்க வீட்டுல பேசினோம். ஆண்டவன் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துள்ளான். அந்த நிலத்தைக் கொடுத்தால் பல்லாயிரம் பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அதன்பிறகு நிலத்தை கவர்மெண்டுக்குத் தானமாகக் கொடுத்தோம். இன்று நானும், என் கணவரும் ஹஜ் பயணம் மேற்கொள்கிறோம். எங்களின் வாழ்வின் முக்கியமான நாளில், இப்படி ஒரு நல்ல காரியம் செய்யும் வாய்ப்பை ஆண்டவன் கொடுத்தில் சந்தோசம்” என்றார்.

நன்றி:    விகடன்