- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.

[1]மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா  அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் பயன்பாடு வரவேண்டும்.

 துப்புரவு பணி

இருட்டான பாதாள சாக்கடை  தொட்டிக்குள் இறங்கி, அரைகுறை ஆடையில் கழிவுகளை வாளியில் அள்ளி வெளியில் போட்டுவிட்டு சில்லறை ஊதியம் பெற்று செல்கிறார்கள்.

பொதுப்பணித்துறையும், கல்வித் துறையும் சரியாக செய்யப்பட்டிருந்தால் சாக்கடை அடைப்பை எடுக்க தனியாக ஆள் தேவையில்லை. மேட்டில் இருந்து பள்ளத்தில் நீர் ஓடும் எனும் அடிப்படை அறிவே இல்லாமல் தான் சாக்கடைகள் ஊர் முழுவதும் கட்டப்பட்டுள்ளன.  சாக்கடையில் திரவ கழிவுகளை போட வேண்டும், குப்பை தொட்டியில் திட கழிவுகளை போட வேண்டும் எனும் அடிப்படை அறிவு இல்லாத மனிதர்களாகவே நாம் இருக்கிறோம்,

ஆக வேறு ஒரு நபர் வந்து சாக்கடையையும், குப்பைத்தொட்டியையும் கையாள வேண்டியுள்ளது. குறைந்த பட்ச பாதுகாப்பு உபகரணங்கள்(முகமூடி, நீர்புகா முழங்கால்வரை செருப்பு, கிருமி நாசினி, கையுறை, மாற்று ஆடை) என அனைத்தும் வழங்க வேண்டும். அடுத்ததாக தற்போது உள்ள இந்திய வகை கழிப்பறைகள் தானே காற்று அழுத்தப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் தேவை.

பிற பெரிய நகரங்களை போல கடல் நீரை கழிப்பறை பயன்பாட்டு நீராக பயன்படுத்தும் புதிய வகை நீர் மேலாண்மையை கொண்டுவர வேண்டும். சமூகத்தில் அவரவர் கழிவை அவரே சுத்தம் செய்வது இழிவானதல்ல அதற்கு வேறு ஒருவர் வரவேண்டும் என நினைப்பதே இழிவானது என உணரவேண்டும்.  சாக்கடை/ செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை எளிய எந்திரங்கள் மூலம் உரமாக.எரிவாயுவாக மாற்றும் எந்திரங்களை பொருத்தி, நவீன மனிதன் தானே தயாரிக்கும் தரமான பொருளான அவனது கழிவே அவனுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.

இந்த துறை பொருளாதார ரீதியில் பயன் தராமல் போனாலும், சமூகத்தில் மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க முயற்சிக்கும் முதல் படியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன்.  எவரும் போக விரும்பாத பாதாள சாக்கடையில் இருக்கும் மனிதர்களை வெளியேற்றி முழு எந்திரமயமாக்கல் வருவதே உளவியல் ரீதியான சாதி ஏற்ற தாழ்வை சமூகத்தில் இருந்து நீக்கும்.

Thanks to – ​TechTamil கார்த்திக்​