Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2019
S M T W T F S
« Mar    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 73 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொடர்வண்டி

http://www.tamilvu.org/courses/hg200/hg211/html/hg211tsk.htm

தொடர்வண்டி பாடம்

Lesson

சிக் புக் சிக் புக்
கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ

கட கட கட கட கட என்ற பின்னணி ஒலி செவியில் கேட்டவுடன் தொடர்வண்டி வருகின்றது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். தொடர்வண்டியின் பழைய பெயர் புகைவண்டி.
தொடக்கத்தில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு புகைவண்டி ஓடியது. நிலக்கரியை எரியவைத்து அதன் மூலமாக நீரைச் சுடவைத்து வெளிவரும் நீராவிச்சக்தி கொண்டு
ஓடியது. இந்த நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர் சேம்சு வாட் என்பவர் ஆவார். ஆனால், இப்போது டீசல்மூலம் ஓடுவதாலும், மின்சாரம்மூலம் ஓடுவதாலும் புகையை
அதிகமாக வெளியிடுவது இல்லை. எனவே இன்றைக்குப் பொருத்தமானப் பெயர் தொடர் வண்டி என்பதுதான். ஏனென்றால் தொடர்ந்து பல பெட்டிகளை இணைத்து இழுத்துச்
செல்வதால் இது தொடர்வண்டி என்றானது.

தொடர்வண்டிக்குத் தலை போன்று இருப்பது எஞ்சின் எனப்பெறும் இழுவை இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தில் மற்ற பெட்டிகள் தொடராக இணைக்கப் பெற்றுள்ளன. வால்போன்று கடைசியாக இருப்பது காவல் பெட்டி எனப்பெறும். இது தொடர்வண்டியின் ஓட்டத்தைக் கவனிக்கும் அலுவலர் பெட்டியாகும். தலைப் பெட்டிக்கும் வால்பெட்டிக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். அந்தத் தொடர்பே இதனைத் தொடர்வண்டி என அழைக்கவைக்கின்றது. தொடர்வண்டி மக்களை ஏற்றிச் செல்கின்றது. சுமைகளைச் சுமந்து செல்கின்றது. தொடர்வண்டி இப்படிப் பல வகைகளில் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது.

தொடர்வண்டி எப்படி உண்டானது தெரியுமா?

இதனை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் தன் சிறுவயதில் இருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய வேண்டும் என்ற துடிப்புடன் விளங்கினார். இவரின் தந்தையுடன் இணைந்து இவர் பல இயந்திரங்களை இயக்கக் கற்றுக் கொண்டார். பின்பு இவர் ஒரு பெரிய நிலக்கரிச் சுரங்கத்தினுள் இயந்திரங்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். அப்போது இவருக்கு, நிலக்கரியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டி தேவைப்பெற்றது.

அந்தச் சிந்தனையில்தான் தொடர்வண்டியின் தொடக்கமே உருவானது. அந்த நிலையில் மரக்கட்டைகளையும், நிலக்கரியையும் எரித்து அவர் புகைவண்டியை ஓடவிட்டார்.

புகைவண்டி தோன்றியபின் உலகில் பல மாற்றங்கள் உருவாகின. எளிதில் சரக்குகளைக் கொண்டு செல்ல முடிந்தது. போக முடியாத இடங்களுக்கு எல்லாம் புகைவண்டி எளிதில்
செல்லும் வண்டியாக மாறியது. இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சுற்றுலா இடமான உதகை என்ற மலையிலும் புகைவண்டி ஊர்ந்து ஏறுகின்றது. முந்தைய நீராவி இயந்திரமாகத்தான் அங்கு இன்றும் பயன்படுகின்றது.
அந்த மலையில் புகைவண்டி பயணம் செய்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் ஆகும். நீங்களும் உதகைக்குச் சென்றால் இந்த இனியப் பயணத்தை மேற்கொண்டு மகிழ்ச்சி
அடையலாம்.

இது ஓடும் பாதைக்குத் தொடர்வண்டிப் பாதை அல்லது இருப்புப்பாதை என்று பெயர். இரும்புத் தண்டுகள் இரண்டுக்கு இடையில் இது ஓடுகின்றது. இந்த இரண்டு இரும்புத்
திரயங்களுக்குத் தண்டவாளம் என்று பெயர். ‘இரயில் எஞ்சின்’ கண்டிபிடிப்பதற்கு முன்பே இந்த இருப்புப் பாதை கண்டுபிடிக்கப் பெற்றது. குதிரைகளை வைத்து இழுக்கும் வண்டிகள்
பழைய காலத்தில் இதுபோன்ற ஒரு இருப்புப் பாதையில் சென்றன.

இன்னொரு அதிசயம் உங்களுக்குத் தெரியவேண்டும். இது கடலில் கூட செல்லும். தமிழ்நாட்டின் தெற்குத் திசை ஓரத்தில் இருக்கும் இராமேசுவரம் என்ற ஊருக்குத் தொடர்வண்டி கடலில் போகின்றது. கடலில் பாலம் கட்டி அதில் போகின்றது. அப்போது மேற்கொள்ளும் பயணம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். கப்பல் வரும்போது அந்தப் பாலம் திறந்து வழிவிடும். இது போகின்றபோது அதுவே மூடி வழிதரும். இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் இல்லை.

தொடர்வண்டியின் தேவை பற்றித் தற்போது உலகம் நன்குத் தெரிந்து இருக்கிறது. தொடர்வண்டிகளில் பலவகை உண்டு. நிலக்கரி ஆற்றலில் ஓடிய தொடர்வண்டி அதன்பிறகு
டீசல், மின்சாரம் ஆகிய எரிபொருள்களில் ஓட ஆரம்பித்தன. எரிவாயு, இயற்கை எரிவாயு ஆகியவற்றிலும் தொடர்வண்டி ஓட முயற்சிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. இந்தியாவில்
காட்டு ஆமணக்கு என்ற செடியில் இருந்து எடுக்கப்பெறும் எண்ணெய் எரிபொருளாக தொடர்வண்டி இயங்க வழிவகை காணப் பெறுகின்றது. இவ்வாறு எரிபொருளை வைத்தும்
தொடர்வண்டியைப் பலவகையாகப் பிரிக்கலாம். புகைவண்டி, தொடர்வண்டி, மின்தொடர் என்று இதற்குப் பல பெயர்கள் உண்டு. ஏற்றிச் செல்லும் பொருளை வைத்தும் பல வகைகளில் தொடர்வண்டியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். மக்களை ஏற்றிச் செல்லும் தொடர்வண்டி, பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்குத் தொடர்வண்டி என இரு பெரும் பிரிவுகள் இதனுள் உண்டு.

மக்களை ஏற்றிச் செல்லும்போதும் அதிலும் பலவகைகள் உண்டு. விரைவு வண்டி, அதி விரைவு வண்டி, நகரங்களை இணைக்கும் புறநகர் வண்டி முதலான பல வகைகள் இதில்
உண்டு. விரைவு வண்டி ஓரளவிற்கு வேகமாகச் செல்லும். அதிவிரைவு வண்டி மிக வேகமாகச் செல்லும். நகரங்களை இணைக்கும் வண்டி பெரிய நகரங்களை இணைக்கும். மீ
விரைவு (Super fast) வண்டிகளும், தரையைத் தொடாமல் காந்தத்தில் மிதந்து செல்லும் தொடர்வண்டிகளும் உண்டு.

பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் சரக்கு வண்டிகள் எனப்பெறுகின்றன. தொழிற்சாலைகளுக்கு வேண்டிய பொருள்களை அந்தந்தத் தொழிற்சாலைக்கே எடுத்துச்
செல்லும் நல்ல வசதி இதில் உண்டு. கடிதங்கள் அனுப்பச் சரக்கு வண்டிகள் மிகவும் பயன்படுகின்றன. இவைத் தவிர, புதிய தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கத் தேவையான
பல பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளும் உண்டு.

அடுத்துப் பயணத் தொலைவு, பயண நேரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொடர்வண்டிகளைப் பலவகைப்படுத்தலாம். பல நாள் செல்லும் வண்டிகளும் உள்ளன. அவற்றில் தூங்கும் வசதி, உணவு வசதி போன்றவை இருக்கும். வீட்டில் இருப்பது போலவே அனைத்து வசதிகளோடு இதனுள் பயணம் செய்ய இயலும். குறைந்த நேரம் செல்லும் வண்டிகளில் பெரும்பாலும் உணவு வசதி, தூங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்றவை இருக்காது. இவை ஒரு மாநகரத்துக்குள் மட்டும் செல்லப் பயன்பெறும் வண்டிகள் ஆகும்.

தொடர்வண்டிக்குரியப் பாதையை வைத்தும் இருப்புப்பாதைகளை வகைப்படுத்த முடியும். மீட்டர் பாதை, அகலப்பாதை என்ற இரு நிலையில் இந்தியாவில் தொடர்வண்டிப் பாதை
இருவகைபெறும். தற்போது எல்லாப் பாதைகளும் அகலப்பாதைகளாக மாற்றப்பெற்று வருகின்றன.

இவை தவிர, சுரங்கப் பாதை, உயரப் பாதை ஆகிய பாதைகளிலும் தொடர்வண்டிகள் சென்றுகொண்டு உள்ளன. சுரங்கப் பாதை என்பது நிலத்தை அல்லது மலையைக் குடைந்து
அதிலேயே செல்லக் கூடியதாகும். இது பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ளது.

இந்தியாவில் பறக்கும் தொடர்வண்டிகள் தற்போது அதிகமாகப் பயன்படுகின்றன. இவை நிலத்தின் மேலே பாலம் போன்ற அமைப்பைக் கட்டி அதன் வழியாகச் செல்லக்
கூடியனவாகும். சென்னையில் இது மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.

தற்போது அறிவியல் தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, குண்டுவேகத் (புல்லட்) தொடர் வண்டிகள் வந்துவிட்டன. இவை ஒரு மணிநேரத்திற்கு
முந்நூற்றைம்பது கிலோ மீட்டர் பயணத் தொலைவைக் கடக்கக் கூடியன. சப்பான், செர்மனி, பிரான்சு நாடுகளில் இவ்வகை வண்டிகள் அதிகம். காற்றைவிட வேகமாக இவை
பறக்கும். மின்னல் வேக வண்டிகளாக, மிதக்கும் தொடர் வண்டிகளாக மாறி காந்த ஆற்றலினால் தண்டவாளத்தைத் தொடாமலேயே ஓடுபவையும் உண்டு என்பது முன்பே
கூறப்பெற்றது. இவை சப்பானிலும் செர்மனியிலும் அறிமுகமாகியுள்ளன. ஒரு மணி நேரத்தில் 300/400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செல்லவும் முடியும்.

இது தவிர பூங்காக்கள் ஆகியவற்றில குழந்தைகள் ஏறும் பொம்மைத் தொடர்வண்டிகளும் உண்டு. இவை குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும். வண்ணப் படங்கள், கவர்ச்சிகரமான வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த வண்டிகள் அமைந்திருக்கும். இதனுள் குழந்தைகள் மகிழ்ச்சியாக ஏறுவார்கள். மனங்குளிர பூங்காவைச் சுற்றிப் பார்ப்பார்கள். சிறார்களுக்கு மிகப் பெருமையானச் செய்தியாகும். ஏனெனில் குழந்தைகள்தான் எதிர்கால உலகம். அவர்கள் மிக நல்லவர்கள். அவர்களை நன்னெறியால் உருவாக்கி மகிழ்விப்பதைவிட உலகில் வேறு என்ன மகிழ்ச்சியானச் செயலாக இருக்க முடியும்?

தொடர்வண்டியைப் பயன்படுத்தி விடுகதை ஒன்று உருவானது. “ஊரைச் சுமப்பான், பெருமூச்சு விடுவான், தொடர்ந்து போவான் அவன் யார்?” என்பதுதான் அது.

பச்சைக்கொடி காணநேர்ந்தால் அல்லது பச்சை விளக்கு எரிந்தால் தொடர்வண்டிக் கிளம்பலாம் அல்லது செல்லலாம் என்று பொருள். சிவப்புக்கொடி அல்லது சிவப்பு விளக்கின் சைகை காணநேர்ந்தால் தொடர்வண்டி நிற்கும் அல்லது கிளம்பக்கூடாது என்று பொருள்.
சிக் புக் சிக் புக்
கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ
கட கட கட கட கட