Chittarkottai.com

Home Quran Bukhari (English) தமிழில் புகாரி Mail Us

ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு

நூல் அறிமுகம்

மொழியாக்கம் : எம். எம். அப்துல் காதிர் உமரி (உத்தமபாளையம் - தமிழ்நாடு)

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...



ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே 'ஹதீஸ்' என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாகத் தொகுக்கப்பட்டதே, இந்த நபி மொழித் தொகுப்பாகும். ஒவ்வொரு நபிமொழியும் மிகக் கவனத்துடன் குர்ஆனுடன் ஒப்பிடப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே தொகுக்கப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புகாரீ என்ற இந்த நபி மொழித் தொகுப்பானது, நபிமொழித் தொகுப்பு நூல்களிலேயே மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், மார்க்க அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும்.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் முழுப் பெயர் அபூ அப்துல்லா முஹம்மது பின் இஸ்மாயீல் பின் இப்றாஹீம் பின் அல் முகீரா அல் ஜாஃபாய் என்பதாகும். இவர் ஹிஜ்ரி 194 ல் பிறந்து ஹிஜ்ரி 256 ல் மரணமடைந்தார். நபிமொழித் தொகுப்புகளிலேயே இதற்கு இணையாக வேறெதுவும் கிடையாது, என்ற பெருமையைப் பெற்றதாகும். இமாமவர்கள் இந்த நபிமொழித் தொகுப்பினை உருவாக்குவதற்காக 16 ஆண்டுகள் பாடுபட்டு, அதனை 2,602 ஹதீஸ்களாகத் தொகுத்திருக்கின்றார்கள். ஒரு ஹதீஸினை ஆதாரப்பூர்வமானது என ஒப்புக் கொள்வதற்கு, கடுமையான நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் அமுல்படுத்தப்பட்ட பின்பே, அந்த நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என ஏற்றுக் கொள்பவராக இருந்தார். இதுவே ஹதீஸ் கலைத் தொகுப்புப் பணியில் பின்பற்றத் தக்க நடைமுறையாகவும் பின்னாளில் பரிணமித்தது எனலாம். நபிமொழி பற்றியும், அது குர்ஆனுக்கு ஏற்றமுறையில் அல்லது மாற்றமான முறையில் இருக்கின்றதா என்பது பற்றியும், அறிவிப்பாளரின் தரம் பற்றியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என ஏற்றுக் கொண்டார். எனவே, இதில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஹதீஸும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முழுவாழ்வையும் பிரதிபளிக்கக் கூடிய அளவுக்கு, முழு வாழ்வையும் அது உள்ளடக்கி இருக்கவில்லை. புகாரீ தவிர ஏனைய ஹதீஸ் தொகுப்புகளிலும், ஸஹீஹுல் புகாரியில் விடுபட்டுள்ள ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் நாம் காண முடியும்.


மொழிபெயர்ப்பாளர் பற்றி.. சில வரிகள்

நமது இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் தமிழாக்கத்தை உத்தமபாளையம் எம்.எம். அப்துல் காதிர் உமரி அவர்கள் செய்திருக்கின்றார்கள். இதுமட்டுமல்லாது, தமிழுலகிற்கு பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்களை வழங்கியிருக்கின்றார்கள். குறிப்பாக 'பெருமானார் கண்ட போர்க்களங்கள்' என்ற நூல் இஸ்லாமிய நூல் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றது. இது தவிர ஏராளமான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார்கள். மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பள்ளியின் இமாமாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அல்ஜன்னத் என்ற ஏகத்துவப் பிரச்சாரப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கின்றார். மேலும் புலுகுல் மராம் என்ற நபி மொழித் தொகுப்பையும், குர்ஆன் பொருள் அட்டவணை (இன்டெக்ஸ்) ஆகியவையும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், இலகு தமிழில் திருமறைக் குர்ஆனை மொழியாக்கமும் செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது இணையத்தளத்திற்கு ஆரம்ப காலம் முதலே சிறப்பான சேவை செய்து வரும் சகோதரர் எம்.எம். அப்துல் காதிர் உமரி அவர்களின் பணி மென்மேலும் சிறக்கவும், இம்மை, மறுமை நற்பேறுகளுக்காகவும் சகோதர, சகோதரிகள் தங்களது துஆக்களில் நினைவு கூர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.


அன்பான சகோதர, சகோதரிகளே..! இந்த நபிமொழித் தொகுப்பின் மொழியாக்கத்திற்காக சகோதரர் அப்துல் காதிர் உமரி அவர்கள் மிகவும் பாடுபட்டுள்ளார்கள். இருப்பினும், கவனக் குறைவு மற்றும் மனிதன் என்ற ரீதியில் விடுபட்டுள்ள தவறுகள் ஏதுமிருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.


மேலும், இந்த நபிமொழித் தொகுப்பினை உள்ளது உள்ளவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து பொருளாதார நோக்கங்களுக்காக இதனைப் பிரதியெடுத்துப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களது துஆக்களில் எங்களையும் நினைவு கூர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம்.


 

புகாரியில் தேடல்

புகாரியின் தலைப்புகள்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...