அழைப்பு
பகிரங்க அழைப்பு
சமாதிகளை வழிப்படுபவர்களுக்குச் சொல்கிறேன்,
பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனை
விசுவாசியுங்கள்.
முன் சென்ற நல்லவர்கள்-ஸஹாபாக்கள் தாபியீன்கள் எல்லாம் கப்றுகளைக் கட்டினார்களா?
அல்லது அதன் மீது வெள்ளை(சந்தனம்)பூசினார்களா? மனிதர்களிடம் பிரார்த்தித்தார்களா?
அல்லது தர்ஹாவிடம், சமாதியிடம் தேவைகள் நிறைவேற இறைஞ்சினார்களா? சகலவற்றையும்
அறிந்து இறைவனை மறந்திருந்தார்களா? அவர்களில் எவராவது ஒருவர் நபியின் கப்ருக்கு
முன்னால் இருந்தோ, அல்லது ஒரு நபித்தோழரின் கப்றுக்கு முன்னால் இருந்தோ, அல்லது
நபியின் குடும்பத்தின் எவருடைய கப்றுக்கு முன்னால் இருந்தோ தங்களது தேவைகளை
நிறைவேற்றும் படியோ, அல்லது துன்பங்களைப் போக்கும் படியோ கேட்பதை நீர்
அறிந்திருக்கின்றீரா? செவியுற்றிருக்கின்றீரா? உம்மால் நிரூபித்துக் காட்ட
முடியுமா?
ரிபாயி, தஸ்ஸுகி, ஜீலானி, பஃதவி போன்றவர்கள் நபிமார்கள்
- இறைத்தூதர்கள், ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களைவிட
அல்லாஹ்விடத்தில் நெருக்கத்திற்குரியவர்களா?
பாருங்கள்! உமர் (ரலி) யின் ஆட்சி காலத்தில்; மழை பெய்யாமல் மதீனாவின் பூமி வரண்டு
காணப்பட்டபோது, ஸஹாபாக்கள் உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டார்கள. உடனே அவர்கள்
மக்களுடன் வெளியேறி மழைவேண்டித் தொழுதார்கள் 'யா அல்லாஹ் இவ்வாறான வறட்சிகள்
காணப்பட்டபோது நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது நபியின் பிரார்த்தனையால்
உன்னிடம் கேட்டோம், நீ மழையைப் பொழிவிக்கச் செய்தாய். நாயனே! இப்பொழுது நபியின்
சிறிய தந்தையின் மூலம் பிரார்த்திக்கிறோம், எனச் சொல்லிவிட்டு அப்பாஸ் (ரலி) பக்கம்
திரும்பிப் பார்த்து, அப்பாஸ் (ரலி)அவர்களிடம், அல்லாஹ்விடம் நமக்கு மழை
பொழிவிக்குமாறு பிரார்த்தியுங்கள் என வேண்டினார்கள், அப்பாஸ் (ரலி) எழுந்து
பிரார்த்திக்க மக்கள் அதற்கு ஆமீன் கூறினார்கள். உடனே அவர்களுக்கு மேலால் மேகம்
ஒன்றுசேர்ந்தது, பின் மழை பொழியும் வரை அழுது அல்லாஹ்விடத்தில்
பிரார்த்தித்தார்கள். அதற்குப் பின் மழை பொழிந்தது,
உயரிய நபித்தோழர்களைப் பாருங்கள், நம்மை விட எவ்வளவோ மார்க்க ஞானிகள், நபியின் மீது
எந்தளவு நேசம் கொண்டவர்கள், அவர்களுக்குத் தேவைகள் துன்பங்கள் ஏற்பட்ட போது அவர்கள்
நபியின் கப்ருக்குச் செல்லவில்லை, அல்லாஹ்வின் தூதரே! நமக்கு அல்லாஹ்விடத்தில்
பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்லவில்லை! மரித்தோரிடம் பிரார்த்திப்பது
எந்தப்பலனையும் தராது அது அல்லாஹ்வின் தூதரிடமாக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வுக்கு
நெருக்கமான நல்லடியாரிடமாக இருந்தாலும் சரியே! என்பதை அவர்கள் விளங்கி
வைத்திருந்தார்கள்.
அவர்களுக்குத் தேவைகள் வரும்போது, துன்பங்கள் ஏற்படும் போது அவைகள் நீங்குவதற்கு
அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஆனால் இன்றுள்ள அறியாதவர்கள் தங்களுடைய தேவைகளை,
கோரிக்கைகளை, பாவ மன்னிப்பை, மண்ணோடு உக்கிப்போன எழும்புகளிடம் முன் வைப்பதைக்
காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவங்களையும் சிலைகளையும் அமைப்பதைத் தடை செய்தது
வீணுக்கும் விளையாட்டிற்கும் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? ஆரம்ப அறியாமைக்
காலத்தின் சிலை, உருவ வழிபாடு மீண்டும்; நிகழ்ந்து விடக்கூடாது என்பதைப் பயந்துதான்
அதைத் தடைசெய்தார்கள்.
எனவே அன்றைய ஜாஹிலிய்யாக் காலத்தில் விக்ரஹங்களையும், உருவச் சிலைகளையும்
வழிபட்டவர்களுக்கும் இன்று கப்றுகளையும் தர்ஹாக்களையும் நோக்கிப்
படையெடுப்பவர்களுக்கும் மத்தியில் என்ன வேறுபாடு இருக்கின்றது . இரண்டுமே மக்களைக்
கொடிய ஷிர்க்கின் பக்கம் இழுத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் தவ்ஹீத்-ஓரிறைக்
கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றது.
அல்லாஹ் அல்லாதவர்
மீது சத்தியம் செய்வதும் ஷிர்க்கில் உள்ளதே
கஃபாவின் மீது, அமானிதத்தின் மீது, சிறப்பான பரகத்தான இம்மனிதர்
மீது, இம் மனிதரின் வாழ்க்கை மீது, நபியின் மீது, நல்லடியார் மீது, தாய் தந்தை மீது
சத்தியம் செய்வது அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும். சத்தியம் என்பது அவர்களை
மகத்துவப்படுத்துவதாகும்;. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் மகத்துவப்படுத்த
முடியாது.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள், 'எவர் அல்லாஹ்
அல்லாதவர் மீது சத்தியம் செய்வாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்'
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்).
'எவர் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது
மௌனமாக இருக்கட்டும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யும் ஒருவர் எதன் மீது சத்தியம் செய்கிறாரோ
அதை அல்லாஹ்வின் மகத்துவத்திற்குச் சமமாகக் கருதினால், அது மிகப்பெரிய ஷிர்காகும்,
அல்லாஹ்வை விடக் குறைந்ததாக மதிப்பிட்டால் அது சிறிய பாவமாகும். ஒருவரின்
வாயிலிருந்து தவறுதலாக எந்த நோக்கமுமின்றி இது போன்ற வார்த்தைகள் வெளியாகி விட்டால்
அதற்குரிய பரிகாரம் அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்வதே.
நபியவர்கள் கூறினார்கள், 'எவர் லாத், உஸ்ஸா போன்றவைகள் மீது சத்தியம் செய்து
விடுகிறாரோ அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லட்டும்' என நபிகளார் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (ஆதாரம்: புகாரி).
ஒருவனிடம் அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்தால் அவர் அதை
விடுவதற்கு முயற்சிப்பது கட்டாயமாகும். இன்னும் சிலர் அல்லாஹ் மீது துணிந்து
பொய்யான சத்தியம் செய்கின்றனர், அதேநேரத்தில் அவர் நம்பியிருக்கும் அவ்லியாக்கள்
மீது பொய்யாகக்கூட சத்தியம் செய்ய மாட்டார்கள். மக்களின் பேச்சு வழக்கில் இது போன்ற
சில ஷிர்க்கான வார்த்தைகள் தாராளமாகவே உபயோகப் படுத்தப்படுகின்றன. 'அல்லாஹ்வும்
நீங்களும் நாடினால்.., அல்லாஹ்வும் அவரும் இல்லையென்றால், அல்லாஹ்வையும் உங்களையும்
தவிர வேறுயாரும் எனக்கு இல்லை, இது அல்லாஹ்வினதும் உங்களினதும் அருளால்' போன்ற
வார்த்தைகள் அல்லாஹ்வின் அந்தஸ்த்தில் பிறருக்கும் கூட்டேற்படுத்தும்
வார்த்தைகளாகும். இவற்றின் சரியான முறை, அல்லாஹ்வின் நாட்டத்தின் படியும் பின்
அவரது நாட்டத்தின் படியும், அல்லாஹ் இல்லையென்றால் பின்பு அவர் இல்லையென்றால் என்று
கூறுவதாகும்.
தாயத்தும் ஷிர்கின்
பால் இட்டுச் செல்லக் கூடியதே
தாயத்துக்களையோ, கயிறுகளையோ, நூல்களையோ, வளையங்களையோ, கண்னேறுக்கோ அல்லது வேறு
ஏதாவது ஒன்றிற்குப்பயந்து யாரேனும் தன் கழுத்தில் தொங்கவிட்டு இவைகள் நோய்களை,
துன்பங்களை நீக்கக் காரணமாகும் என ஒருவன் நம்புவானாயின் அது சிறிய ஷிர்காகும்.
இவைகள் தொங்கவிடப்படுவதன் மூலம் தான் நோய்கள், துன்பங்கள் நீங்குகின்றன, இவைகள்
நோய்களை துன்பங்களை தனித்து நின்றே நீக்கும் ஆற்றலுடையவை என நம்பினால் அது பெரிய
ஷிர்க்காகும்.
ஏனெனில் அதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இந்த உலகத்தில் அல்லாஹ் அல்லாதவைகளுக்கும்
நோய்களை, துன்பங்களை நீக்கும் ஆற்றல் இருக்கின்றன என நம்புவதாக ஆகிவிடும்.
தாயத்து ,இஸ்ம், அஸ்மாக்கள் அணிவதை இரு வகைப்படுத்தலாம்:
1. முதலாவது வகை: குர்ஆனுடைய வசனங்களைத் தோலில், துணியில், தங்க-செப்புத்
தகடுகளில், தாள்களில் எழுதி குப்பிகளில் அடைத்து கழுத்திலோ, இடுப்பிலோ அல்லது
கையிலோ தொங்கவிட்டுக் கொள்வது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை. சிலவேளை இது அந்நபரை
ஷிர்க்கின் பால் இட்டுச் செல்லலாம்.(எனினும் இச்செயலால் அந்த நபர் ஷிர்க்கில்
ஈடுபட்டவராகக் கருதப்பட மாட்டார்.)
2. இரண்டாவது வகை: குர்ஆன் வசனங்கள் அல்லாத ஏதேனும் மந்திரங்களையோ ஜின்களின்,
ஷைத்தான்களின் பெயர்களையோ, சூனியத்திற்கென உள்ள சில குறிப்பிடப்பட்ட குறியீடுகள்
அடங்கிய தாயத்துக்களையோ தொங்கவிட்டுக் கொண்டால்;, அது கலப்பற்ற ஷிர்க்காகும்.
அல்லாஹ் இவைகளை விட்டு பாதுகாப்பானாக!
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள், 'ஒருவன் அணிந்திருக்கும் தாயத்தை யாரேனும்
துண்டித்தால் அவன் ஒரு அடிமையை விடுதலை செய்தவனைப் போலாவான்.
தனது கையில் இரும்பினாலான ஒரு வளையலைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை
ஹுதைபா (ரலி) அவர்கள் காண்கிறார்கள், அவனிடத்தில் இது என்ன? என கேட்கிறார்கள்.
அதற்கு அவன் இதனை நோய் நிவாரணிக்காக அணிந்திருக்கின்றேன் எனக்கூறினான். அதை கழற்றி
எறிந்து விடு, ஏனெனில் இது நோயை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது இது உனது
கையில் இருக்கும் நிலையில் மரணித்தால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய் என்று
கூறினார்கள்.
அதே போன்றுசில குறிப்பிட்ட வசனங்கள், வாக்கியங்களை உபயோகித்து ஊதிப் பார்த்து
மந்திரித்தல், ஒரு நோயாளிக்கு அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸில் காணப்படும்
திக்ர்-அவ்ராதுகளை அல்லது அல்லாஹ்வின் திருநாமங்களை உபயோகித்து ஓதிப்பார்த்தல்
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
உதாரணமாக பாதிஹா அத்தியாயம், முஅவ்விதாத (குல்-ஸூராக்கள்) அத்தியாயங்கள்
நபிமொழிகளில் வந்திருக்கும் பிரார்த்தனைகளை ஓதுவதற்கு அனுமதி இருக்கிறது.
உதாரணமாக நோயாளியின் மீது இவைகளை ஓதி ஊதுதல், அவற்றை ஓதி நீரில் ஊதி அதனை
நோயாளிக்குக் குடிக்கக் கொடுத்தல் போன்றவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகளாகும்.
இவை தவிர ஜின்களின் பெயர்கள் அல்லது வானவர்கள், நபிமார்கள்,
நல்லடியார்களின் பெயர்களை அழைத்து ஊதி(ஓதி)ப்பார்த்தல் இஸ்லாத்தில் தடை
செய்யப்பட்டதாகும். ஏனெனில் இது அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் பிரார்த்திப்பதாகும்
இது பெரும் ஷிர்காகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்... |