بسم الله الرحمن الرحيم

நூதன முறையில் வஸீலாத் தேடுவதும் ஷிர்க்கே...

Refer this Page to your friends

சிலைகளைப் புனிதப்படுத்துவதும், அவற்றை ஞாபகார்த்தமாக வைப்பதும் ஷிர்கே!

சிலைகள் எனப்படுவது மனிதனின் அல்லது விலங்குகளின் உருவத்தில் செதுக்கப்பட்ட முப்பரிமான உடலமைப்பைக் கொண்ட உருவங்களைக் குறிக்கும். அது மனிதனின் அல்லது மிருகத்தின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஞாபகார்த்தச் சிலைகள் எனப்படுவது பொது இடங்களிலோ, பூந்தோட்டம், மைதானம் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலோ வைக்கப்படும் சமூகத்தில் மதிக்கப்படுபவர், நல்லவர்களின் உருவச் சிலைகளைக் குறிக்கும். இவ்வாறான சிலைகளாலேயே பூமியில் சிலை வணக்கம் எனும் கொடிய ஷிர்க் பரவியது.

நூஹ் நபியின் சமுதாயம் நல்லவர்களின் நினைவாக செய்த சிலைகள் ஒரு சில காலம் செல்வதற்கு முன்பே வணங்கப்படக்கூடிய விக்ரஹங்களாகவும் கடவுள்களாகவும் மாறி விட்டன. இதன் காரணமாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலைகள் வடிவமைக்கப்படுவதையும் உருவங்கள் தொங்கவிடப்படுவதையும் தடுத்தார்கள்.

ஏனென்றால் அவைகள் ஷிர்கின் வாயல்களைத்திறக்கும். நபி (ஸல்) அவர்கள் உருவங்கள் வரைபவர்களைச் சபித்ததும் இதனால்தான். மறுமை நாளில் அவர்கள் கடுமையாக வேதனைச் செய்யப்படுவார்கள் உருவங்களை அழிப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏவினார்கள். இன்னும் எவர் வீட்டில் உருவங்கள் இருக்குமோ அவ்வீட்டுக்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனக் கூறினார்கள்.

நூதன முறையில் வஸீலாத் தேடுவதும் ஷிர்க்கே...
நபி (ஸல்) அவர்களின் பொருட்டாலோ படைப்பினங்களின் பொருட்டாலோ பிரார்த்தித்தல் அல்லது மரணித்தவர்களிடம் பிரார்த்தித்தல் பரிந்துரைக்குமாறு கோரல் ஆகிய அனைத்தும் ஷிர்க்கின் பால் இட்டுச்செல்லும் மார்க்க விரோத செயல்களாகும். ஒருவன் தனது பிரார்த்தனையில் யாஅல்லாஹ் உனது நபியின் பொருட்டால், இந்த மனிதனின் பொருட்டால், மரணித்த இம்மனிதனின் பொருட்டால் என்று கூறிப் பிரார்த்திப்பது அனுமதிக்கப்பட மாட்டாது.


இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா என்பது: அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளைக் கொண்டு பிரார்த்திப்பதாகும் அருளாளனே! எனக்கு அருள் புரிவாயாக! பாவங்களை மன்னிக்கக்கூடியவனே! எனது பாவங்களை மன்னிப்பாயாக! என்பது போன்ற துஆக்களாகும். இன்னும் (ஈமான்) இறைவிசுவாசத்தைக் கொண்டு நல்லமல்களைக் கொண்டு ஒருவன் யா அல்லாஹ் நான் உன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கொண்டு, உனது இறைத்தூதரை உண்மைப்படுத்தியதைக் கொண்டு, என்னை சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வாயாக! என்றும் கேட்கலாம்.

அதேபோல் உயிருடன் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் தனக்காகப் பிரார்த்திக்குமாறு கோரிவிட்டு அவர் தனக்காகக் கேட்ட துஆவின் பொருட்டால் பிரார்த்திப்தும் நபிவழியில் உள்ளதாகும். அதேபோல் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக மறைவில்(அவனுக்குத் தெரியாமல்) கேட்கும் பிரார்த்தனையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஹதீஸாகும். கப்ரில் அடக்கப்பட்ட ஒருவரிடம் பிரார்த்திக்க கோருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட அனைத்தும் ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். இவைகளை அல்லாஹ் அல்லாது வேறுயாருக்கும் செலுத்துவது கூடாததாகும்-தடைசெய்யப்பட்டவையாகும்.


ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டியவைகள் ..
ஈமான்(நம்பிக்கை)கொள்ள வேண்டிய முதல் அம்சம் அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கை கொள்வதாகும். அல்லாஹ் அனைவரினதும் இறைவன். வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அவன் மாத்திரமே! என உறுதியாக நம்புவதுடன் அல்லாஹ்வுக்கு உயர்ந்த பண்புகளும் பெயர்களும் இருக்கின்றன. 'அவனுக்கு ஒப்பாக எந்த ஒன்றும் இல்லை அவன் கேட்கக்கூடியவன் பார்க்கக்கூடியவன்'. (அஷ்ஷுரா 42: 11).

அல்லாஹ் எப்பொழுதும் எப்படியும் எதாலும் கதைக்க ஆற்றல் உடையவன் என நம்பவேண்டும்.


'இன்னும் அல்லாஹ் மூஸாவுடன் உறுதியாக பேசியுமிருக்கின்றான்'. (அந்நிஸா 4:164)


புனித குர்ஆனும் அதற்கு முன் அருளப்பட்ட ஏனைய அனைத்து வேதங்களும் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் நம்ப வேண்டும்... அல்லாஹ் தன் வடிவமைப்பாலும், பண்புகளாலும் மேலே இருக்கின்றான் என நம்பவேண்டும்.


அவன் வானங்கள் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். பின் அவன் அர்ஷின் மீது நிலைகொண்டிருக்கின்றான். அவன் அர்ஷில் நிலைகொண்டிருப்பதானது அவனுக்கே உரிய முறையில் அவனுக்கே உரிய அந்தஸ்திலாகும். அவனைத்தவிர வேறு எவரும் அவன் எப்படி இருக்கிறான் என்பதன் யதார்த்த நிலையை அறிய மாட்டார்கள். அவன் அர்ஷின் மீது உயர்ந்து நிலைகொண்டிருந்த போதிலும் படைப்பினங்களின் அனைத்து நிலைகளையும் அறிந்தவனாக, அவர்கள் பேசுவதை கேட்கக்கூடியவனாக அவர்கள் செய்வதை பார்க்கக்கூடியவனாக அவர்களது கருமங்களை திட்டமிடக்கூடியவனாகவே இருக்கிறான். மறுமை நாளில் முஃமின்கள் அல்லாஹ்வை தமது புறக்கண்களால் பார்ப்பார்கள் என நம்ப வேண்டும்.


அல்லாஹ் சொல்கிறான்: 'அந்நாளில் சில(ருடைய) முகங்கள் (மகிழ்ச்சியால்) மலர்ச்சியானவையாக இருக்கும். (அவை) தங்கள் இரட்சகனை நோக்கிக்கொண்டிருக்கும்' (அல்கியாமா 75:22,23)


அல்லாஹ் தனது வேதத்திலும் அறிவித்த, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபிமொழிகளிலும் இடம்பெற்ற அவனது பண்புகளை நாம் நம்பவேண்டும் அதன் உண்மையான யதார்த்தத்தை நாம் அறியாவிடிலும் அது எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறே உண்மைப்படுத்த வேண்டும். அவனுக்கே உரிய அந்தஸ்தில் அவை அமைந்திருக்கும் என ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வானவர்களை நம்புதல்
அல்லாஹ் வானவர்களை ஒளியால் படைத்தான், அவர்களுக்கு இடப்பட்ட பணிகளை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாத அவனது கட்டளைகளை முழுக்க முழுக்க நடைமுறைப் படுத்தக்கூடிய அடியார்களாவர். அவர்கள் எண்ணிக்கையில் நம்மைவிட பல மடங்காகும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு அதிகமாக வணக்க வழிபாடுகள் செலுத்தக்கூடியவர்கள். 'வானத்தில் ஒரு வீடு இருக்கிறது அதற்கு பைதுல் மஃமூர் என பெயர் சொல்லப்படும். ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குகள் அதனுள்; நுழைந்து தொழுகின்றனர் பின் வெளியேறுகின்றனர். மறுமை நாள் வரை அவர்கள் மறுபடியும் அதனுள் நுழையமாட்டார்கள்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).


'அல்லாஹ்வின் அர்ஷைச் சுமந்திருக்கும் வானவர்களில் ஒருவரைப்பற்றிப் பேசுவதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவரது காதுச்சோனைக்கும் தோற்புஜத்துக்கும் மத்தியில் உள்ள தூரம் எழுநூறு வருடம் நடக்கும் தொலைவாகும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானி).


ஒரு சில வானவர்கள் குறிப்பிட்ட சில பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஜிப்ரீல் (அலை)யிடம் இறைத்தூதர்களுக்கு இறைச்செய்தியை கொண்டு வரும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது, மீகாயில் என்பவருக்கு மழை பொழிவித்தல் தாவரங்களை முளைக்கச் செய்தல் போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ராபீல் மறுமை நாள் சம்பவிக்கும் போது ஸுர் எனும்(குழலை) ஊதுவார், மலகுல் மௌத் எனும் வானவர்கள் ஒவ்வொரு உயிரையும் கைப்பற்றுவதற்குப் பொறுப்பாக்கப்பட்டவர்கள், மாலிக் என்பவர் நரகத்துக்குப் பொறுப்பானவர்.


இன்னும் மலக்குகளில் ஒரு சாரார் பெண்களின் கர்ப்பத்திலுள்ள சிசுக்களின் விடயங்களைக் கவனிப்பதற்கும், வேறுசிலர் ஆதமுடைய மக்களாகிய எம்மை ஆபத்துக்களை விட்டும் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக்கப்பட்டிருக்கின்றனர். வேறு சிலர் ஆதமுடைய பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பதிவு செய்வதற்காகப் பொறுப்பானவர்கள். மற்றும் சிலர் மரணித்தவர்கள் கப்ரில் வைக்கப்பட்டதன் பின் அவர்களிடம் கேள்விகள் கேட்பதற்குப் பொறுப்பானவர்கள். இவர்களல்லாத இன்னும் ஏராளமான மலக்குகளும் அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.


வானவர்கள் நமது கண்களுக்கு தெரியாத ஒரு படைப்பினம் அவர்களை நாம் காணாவிட்டாலும் அவர்கள் இருப்பதை உறுதியாக நம்பவேண்டும். அது அல்லாமல் கண்களுக்குப் புலப்படாத இன்னுமொரு படைப்பினம் இருக்கிறது அவர்கள் ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள், மனிதன் படைக்கப்படுவதற்கு முன் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் ஆவார்.


அல்லாஹ் கூறுகிறான்: 'இன்னும் (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து மனிதனை (ஆதமை) திட்டமாக நாம் படைத்தோம். மேலும் ஜின்னை (அதற்கு) முன்னதாக கொடிய உஷ்னமுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்' (அல்ஹிஜ்ர் 15:26,27)


ஜின்கள் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்குப் பணிக்கப்பட்டவர்கள் அவர்களில் இறைவிசுவாசிகளும்(முஃமின்களும்) இருக்கின்றனர்இறை நிராகரிப்பாளர்களும் (காபிர்களும்) இருக்கின்றனர், அவர்களில் அல்லாஹ்வுக்கு வழிப்படக் கூடியவர்களும் இருக்கின்றனர் மாறு செய்யக்கூடியவர்களும் இருக்கின்றனர். மனிதர்கள் அவர்கள் மீது வரம்பு மீறுவதைப் போல சில வேளைகளில் அவர்கள் மனிதர்கள் மீது வரம்பு மீறுகின்றனர். மனிதர்கள்; மல சலம் கழித்ததன் பின் பிராணிகளின் எலும்புகளைக் கொண்டு சுத்தப்படுத்துகின்றனர். இது மனிதர்கள் அவர்கள் மீது செய்யும் எல்லை மீறலாகும். ஏனெனில் நபியவர்கள் இவ்வாறு செய்யக் கூடாதெனத் தடுத்திருக்கின்றார்கள்.


'எலும்புகளையும், பிராணிகளின் மலங்களையும் (விட்டைகளையும்) உபயோகித்து கழிவறைக்குச் சென்றதன் பின் சுத்தப்டுத்த வேண்டாம் ஏனெனில் அது உங்களது சகோதரர்களாகிய ஜின்களின் உணவாகும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


மனிதர்களுக்கெதிராகக் காணப்படும் ஜின்களின் செயல்கள் அவர்களை பயப்படச் செய்வதும் மனதில் ஊசலாட்டங்களை 'வஸ்வாஸ்' எனும் தேவையற்ற சந்தேகங்களைக் உறுவாக்கி விடுவதும், சிலசமயம் மனிதனின் உடலில் ஊடுருவிக் கொண்டு சில அட்டகாசங்களைப் புரிவதுமாகும்... ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் கற்றுத்தந்த திக்ருகள், ஆயதுல் குர்ஸி, முஅவ்விதாத் அத்தியாயங்கள், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இடம்பெறும் பிரார்த்தனைகள் இவைகளைக் கொண்டு இந்த கெட்ட ஜின்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும்.


ஆனால் அவர்களின் நெருக்கத்தைப் பெற அவர்களுக்காக அறுத்துப்பலியிடுவது, அவர்களின் தீங்குகளை அஞ்சி அவர்களிடம் பிரார்த்திப்பது அனைத்தும் ஷிர்காகும். ஜின்கள்-ஷைத்தான்கள் பலவீனமானவர்கள் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அவர்களது சூழ்ச்சிகளும் பலவீனமானவையே, எனினும் மனிதன் பாவங்களில் அதிகமாக மூழ்கி விடும்போது தடுக்கப்ட்டவைகளைப் பார்க்கும் போது, இசையைக் கேட்கும் போது அவனது ஈமான் பலவீனம் அடைந்து விடுகிறது, இறைவனுடனான தொடர்பு குறைந்து விடுகிறது அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் தூரமாகி விடுகிறான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த ஷைத்தான்கள் இவன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றன. மார்க்கம் பாதுகாப்பை பெற கற்றுத்தந்த திக்ருகள் அவர்களுக்கெதிராக ஆதிக்கம் செலுத்தப்பட சக்தி வாய்ந்தவையாகும்.


ஷைத்தானையும் அவர்களது கூட்டத்தைப் பற்றியும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 'அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்து இருக்கக்கூடியவர்கள் மீது (ஷைத்தானாகிய) அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவனுடைய அதிகாரமெல்லாம், அவனை நண்பராக எடுத்துக் கொள்கிறார்களே அத்தகையவர்கள் மீதும், அவனுக்கு இணை வைக்க கூடியவர்களாக இருக்கிறார்களே அத்தகையவர்களின் மீதும் தான்'. (அந்நஹ்ல் 16: 99, 100).
 


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ஷிர்கின் வாரிசுகள்

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends