بسم الله الرحمن الرحيم

வேதங்களை நம்புதல்

Refer this Page to your friends

வேதங்கள் எனப்படுவது அல்லாஹ் தனது நபிமார்களுக்கு அருளிய இறைவாக்கிய நூல்களாகும். மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவே அல்லாஹ் அவைகளைஅருளினான், இவ்வாறு அதிகமான வேதங்கள் அருளப்பட்டன. அவைகள் அனைத்தையும் நம்பிக்கைக் கொள்வது நம்மீது கடமையாகும். அதில் நான்கு வேதங்களைப் பற்றி அல்லாஹ் நமக்கு அறிவித்துத் தந்துள்ளான்:

  • புனித அல்குர்ஆனை முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் அருளினான்,
  • தௌராத் மூஸா நபிக்கும்,
  • இன்ஜீல் ஈஸா நபி மீதும்,
  • ஸபூர் தாவூத் நபிக்கும்

அருளப்பட்டன.  அவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதங்களாகும். அல்குர்ஆன் இறுதியானதும் உயர்ந்ததும் பாதுகாக்கப்பட்டதுமாகும். அதற்கு முன்னுள்ள வேதங்களின் செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: 'மேலும் (நபியே! முற்றிலும்) உண்மை யைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இற க்கிவைத்துள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்ப தாகவுமிருக்கின்றது'. (அல்மாயிதா 5:48)

நபிமார்கள், ரஸுல்மார்கள் மீது நம்பிக்கை கொள்ளுதல்
அல்லாஹ், ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அவனுக்கு எந்தவொரு இணையும் கற்பிக்காமல் அவனை மாத்திரம் வணங்க வேண்டும் என்பதற்காக இறை செய்தியைக் கொடுத்து இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ரஸுல்-மார்களில் ஆரம்பமானவர், நூஹ் (அலை), இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்கள். இறைத்தூதர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும், அதில் சிலரின் பெயர்களை மட்டுமே அல்லாஹ் அல்குர்ஆனில் அறிவித்துள்ளான். அவர்களுடைய வரலாற்றுச் செய்திகளை நமக்குக் கூறியுள்ளான். நமக்கு அல்லாஹ்வால் கூறப்படாத இறைத்தூதர்களும் இருக்கின்றனர் அனைவரையும் நம்பிக்கைக் கொள்வது நம் மீது கடமையாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் '(நபியே) திட்டமாக நாம் உமக்கு முன்னர் பல இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியிருக்கிறோம். இன்னும் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்கு நாம் கூறவில்லை' (ஆபிர் 40: 78)

இறைதூதர்களும்; மனிதர்களே. சாதாரன மனிதர்களுக்கும், அவர்களுக்கும் மத்தியில் இறைச்செய்தி வருவது தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை.

'நபியே நீர் கூறும் நானும் உங்களைப் போன்ற மனிதனே எனக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வருகிறது'. (அல்கஹ்ப் 18:110)

ஆம் அவர்கள் சாப்பிடக்கூடியவர்களாக, பருகக்கூடியவர்களாக, நோய் வாய்ப்படக் கூடியவர்களாக, மரணிக்கக்கூடியவர்களாக இருந்தனர். இது அனைத்தும் அவர்களுக்கு இருப்பதாக நம்புவது கடமையாகும். அவர்களில் ஒரு இறைத்தூதரை நிராகரித்தாலும் அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரித்ததைப் போல் ஆகிவிடும்.

நூஹ் நபியின் சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது: 'நூஹுடைய சமூகத்தார் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்' என்றும் (அஷ்ஷுஅரா 26:105).
ஹுத் நபியின் சமுதாயத்தை பற்றி கூறும் போது: ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களை பொய்பித்தனர். (அஷ்ஷுஅரா 26:123)என்றும் கூறுகின்றான்.

ஓவ்வொரு நபிமாருக்கும் வழங்கப்பட்ட சட்டதிட்டங்களில் சிலவேறுபாடுகள் இருப்பினும்; அனைத்து நபிமார்களும் கொண்டு வந்த அடிப்படைச்செய்தி ஒன்றேயாகும். அதில் ஒருவரைப் பொய்பித்தாலும் அனைவரையும் பொய்பித்தவராகக் கருதப்படுவார்.

கிறிஸ்தவர்கள் முஹம்மத் நபியின் தூதுத்துவத்தைப் பொய்பித்தனர். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றவில்லை, அதனால் அவர்கள் மர்யமின் மகன் ஈஸா (அலை) வின் தூதுத்துவத்தையும் பொய்பித்து விட்டனர். அவர் முஹம்மத் எனும் ஓர் இறைத்தூதரைப் பற்றி தனக்குப்பின் அவர் நபியாக வரவிருப்பதாக நன்மாராயம் கூறியிருந்தார். அவரை பின்பற்றுமாறும் ஏவி இருந்தார். ஆனால் அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. யூதர்களும் அவர்களைப் போன்ற மற்றவர்களும் அவ்வாறே முஹம்மத் அவர்களின் நபித்துவத்தைப் பொய்ப்பித்ததன் காரணமாக மூஸா நபி அவர்களையும் நிராகரித்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.

இறுதி நாளை நம்புதல்
அல்லாஹ்வின் வேதத்திலும் நபியுடைய வாக்கிலும் மரணத்திற்குப்பின் உள்ள நிலமைகளைப் பற்றி எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவைகளை முழுமையாக நம்ப வேண்டும். முதலாவதாக கப்றுடைய வாழ்க்கை அதன் தண்டனைகள் அல்லது அதன் அருள்களைப் பற்றி நம்பவேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையில்: மேலும் பிர்அவ்னைச் சார்ந்தோரைத் தீயவேதனை சூழ்ந்து கொண்டது. அந் (நரக) நெருப்பின் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள் மேலும் மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில் பிர்அவ்னைச் சார்ந்தோரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என மலக்குகளுக்குக் கூறப்படும்). (ஆபிர் 40: 46).
அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பற்றிக் கூறும் போது: 'அவர்களை இரு முறை நாம் வேதனை செய்வோம் முடிவில் கடுமையான வேதனையின் பால் அவர்கள் திருப்பப்படுவார்கள்' எனறு கூறுகின்றான்' (தௌபா 9:101).

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை விளக்கும் போது: முதல் தண்டனை உலகத்தில், இரண்டாவது கப்ரில், பிறகு அவர்கள் நரகத்தில். கடுமையான வேதனையின் பால் திருப்பப்படுவார்கள்.

கப்ரின் தண்டனைகள், அருள்கள் பற்றி இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏராளமாகும். இமாம் இப்னுல் கைய்யூம் (ரஹ்) மற்றும் ஏனைய அறிஞர்கள் அவைகளை முதவாதிரானது பல்வேறு நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளனர். நபிமொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் இது சம்பந்தமாக இடம்பெற்றுள்ளன.

புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸ், நபி (ஸல்) அவர்கள் இரு கப்றுகளுக்கு அருகாமையில் நடந்து சென்ற போது இந்த இரு கப்றுகளில் அடக்கப்பட்டவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பெரும் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது மறைத்துக்கொள்ளாதவர், மற்றவர் கோள் சொல்லித்திரிபவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிரார்த்தனைகளில் 'அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மின் அதாபில் கப்ரி' யா அல்லாஹ் உன்னிடம் மண்ணறையின் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். கப்றுடைய வாழ்கையில் இடம்பெறும் இன்பமும் துன்பமும் நமது புறக்கண்களுக்குப் புலப்படாத மறைவான விடயங்களாகும். அவற்றை நமது பகுத்தறிவைக் கொண்டு அறிய முடியாது.

இறுதி நாளை நம்புதல் :
ஸூர் ஊதப்படும் பொழுது மரணித்தோர் அனைவரும் அல்லாஹ்வால் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பிக்கை கொள்ள வேண்டும். பாதணி அணியாதவர்களாக, நிர்வாணமாக கத்னா(விருத்தசேதனம்)செய்யப்படாதவர்களாக மக்கள் அனைவரும் எழுப்பப்படுவார்கள்.
அல்லாஹ் தனது திருமறையில்: (மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக்கூடியவர்கள். பின்னர் மறுமை நாளின் போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள். (அல்முஃமினூன் 23:16,17).
அவ்வாறே அவர்களுக்கிடையே கேள்வி கணக்கு கேட்கப்பட்டு அவர்கள் புரிந்த நன்மை, தீமைகளுக்கேற்ப கூலி வழங்கப்படும் என்பதையும் நம்பவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான், 'நிச்சயமாக அவர்கள் நம் பக்கமே மீண்டுவர வேண்டும். பின்னர், நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நம் மீதேயாகும்' (அல்ஆஷியா 88:25,26)

சுவர்க்கம் நரகத்தை நம்புவதும், இறுதி நாளை நம்புவதிலேயே உள்ளடக்கப்படுள்ளது. சுவர்க்கம் இறையச்சமுடையோரின் வீடு எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்தாலும் கற்பனை செய்ய முடியாத பாக்கியங்கள் அங்கே நிறைந்துள்ளன.
நரகம் தண்டனைக்குரிய இடம் இதில் சிந்திக்க முடியாத அளவு தண்டனைகள் பாவிகளுக்காகச் சித்தப் படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே மறுமை நிகழ்வதற்கு முன் அறிகுறியாக சம்பவித்த, சம்பவிக்கவிருக்கும் சிறிய பெரிய அடையாளங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். தஜ்ஜால் வெளிப்படுவது, ஈஸா (அலை) வானத்தில் இருந்து இறங்குதல், சூரியன் மேற்கில் இருந்து உதித்தல், பூமியில் ஒரு பெரும் மிருகம் வெளிப்படல் போன்றன அவற்றில் முக்கியமானதாகும்.

மறுமையில் நபியவர்களின் பரிந்துரையைப் பற்றி, ஹவ்ல் எனும் தடாகம், நன்மை தீமை நிறுக்கப்படும் தராசு, அல்லாஹ்வைக் காணுதல் இது போன்ற மறுமை தொடர்பான விடயங்களையும் நாம் நம்ப வேண்டும்.

கழா-கத்ர் விதியை நம்புதல்
அதாவது நன்மை தீமை அனைத்தும் அவனது ஏற்பாட்டின் படி நடக்கின்றன என நம்புதல். அல்லாஹ்வின் அறிவு மிக விசாலமானது. காரியங்கள் நடப்பதற்கு முன் அவை பற்றி அறிந்து வைத்திருப்பவன். ஒவ்வொன்றையும் சுருக்கமாகவும் விரிவாகவும் அறியக்கூடியவன். அவன் அனைத்தையும் லவ்ஹுல் மஹ்பூல்-என்னும்பதிவேட்டில் பதிவுசெய்துள்ளான்;. மேலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அவனே சிருஷ்டித்தான்.
அல்லாஹ் கூறுகின்றான்...'அல்லாஹ் அனைத்தையும் படைத்தவன் அவன் அனைத்தின் மீதும் பொறுப்பாளன்' (ஸுமர் 39:62).
இப் பிரபஞ்சத்தில் அவனை அறியாமல் அவனது அனுமதியின்றி எந்த ஒன்றும் நிகழ்வதே இல்லை. அல்லாஹ் தனது திருமறையில், 'நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்'. (அல்கமர் 54:49) என்று கூறுகின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டம், சுயவிருப்பம் என அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். எனவே அல்லாஹ் உலகில் நடக்கும் அனைத்தையும் முன்னமே எழுதி விட்டாலும், ஒன்றைச் செய்வதையும் விடுவதையும் அவனது சுய விருப்பத்தின் பேரிலேயே விட்டு விட்டான். ஒருவன் விரும்பினால் வுழூச் செய்து தொழுகையை நிறைவேற்;றி நேர்வழியடையலாம். அவன் விரும்பினால் விபச்சாரம் செய்து வழிகெட்டும் போகலாம். எனவே அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பாளியாவான். அல்லாஹ்வால் அதற்காக அவன் விசாரிக்கப்பட்டு அதன்படி வெகுமதியளிக்கப்படுவான். எனவே கழாக்கத்ரைக் காரணமாகக் கூறிக் கொண்டு எந்தத் தீமையைச் செய்வதற்கோ, கடமைகளைச் செய்யாமலிருப்பதற்கோ அவனுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Refer this Page to your friends

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends