بسم الله الرحمن الرحيم

முன்னோர்களைப் பின்பற்றுதல்..

Refer this Page to your friends

ஜகாத் கொடுக்க மறுப்பதும் பெரும் பாவமே..
ஜகாத் இஸ்லாத்தின் மூன்றாவது அடிப்படையாகும். 'எவர் தங்கம் வெள்ளிக்குரிய (ஜகாத்தை) உரிமையை வழங்கவில்லையோ மறுமையில் அவரது சொத்துக்கள் நெருப்புத் தட்டுக்களாக மாற்றப்பட்டு அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றால் அவரது நெற்றியிலும், விலாப்புறத்திலும், முதுகிலும் சூடு போடப்படும் அதன் சூடு சற்றுத் தணிந்தாலே மீண்டும் நரக நெருப்பில் காய்ச்சப்பட்டு ஒத்தடம் போடப்படும். இவ்வாறே ஐம்பதாயிரம் வருடங்கள் வேதனை செய்யப்பட்டு அதன் பின்னரே படைப்பினங்களுக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பின்னர் அவர் (அவரது இதர செயல்களுக்கேற்ப) சுவனத்திற்கோ நரகத்திற்கோ செல்வார். (ஆதாரம் முஸ்லிம்)

சொத்து செல்வங்களுக்கு ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமை நாளில் அவர்களுடைய செல்வங்கள் கூரிய கொம்புகளைக் கொண்ட மொட்டைத் தலையுடைய ஒரு முரட்டு பாம்பாக உருமாற்றப்பட்டு மறுமையில் அவனைக் கொத்திக் கொண்டே இருக்கும். பின் அவனது இரு தந்தங்களிலும் பிடித்து அவனைத் தூக்கிய வாறே நான்தான் உன் செல்வம், நானே சேமித்த சொத்துக்கள் என்று கூறிய வண்ணம் அவனை வேதனை செய்யும். (புஹாரி)

இவ்வாறு கூறிய நபியவர்கள் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்...
'மேலும், அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்குக் கொடுத்தவைகளில் உலோபித்தனம் செய்கின்றார்களே அத்தகையவர்கள், அது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணி விடவேண்டாம், மாறாக, அது அவர்களுக்குத் தீங்காகும், எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள்'. (ஆலு இம்ரான் 3:180)

இறுதியாக ..
அன்பிற்குரிய சகோதர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வின் அழைப்புக்கு செவி சாயுங்கள் அவன் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள் அவன் உங்களது பாவங்களை மன்னிப்பான் கடுமையான வேதனையை விட்டும் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் மீதாணையாக நிச்சயமாக நான் உங்களுக்குப் போதகனாவேன், இது சத்தியம். உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது சத்திய மார்க்கம் ஒன்றென்பதை நீங்கள் அறிவீர்கள் அதுவன்றி வேறு மார்க்கம் கிடையாது. அல்லாஹ் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருக்கக் கூடியவன், அவன் ஏகன் எந்தத் தேவையுமற்றவன், அவனுடன் எந்த ஒன்றையும் இணையாக்குவதை அவன் பொருந்திக் கொள்ள மாட்டான்.
'நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு வழியில் (இருக்கக்) கண்டோம், நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளின் மீதே பின்பற்றிச் செல்பவர்கள்'. (அஸ்ஸுஹ்ருப் 43:23). என்று சொல்லக்கூடிய மூடர்களின் கூட்டத்தில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். உங்களது நாவுகள் முழங்க வேண்டியது, நாம் ஏகத்துவவாதிகள் என்ற ஒரே வார்தையைத்தான். நாம் ஓரிறைக்கொள்கையில் பிடிப்புள்ளவர்கள், அவனுக்கு மாத்திரம் வழிப்பட்டு அவனுக்கு மாத்திரம் கட்டுப்படக்கூடியவர்கள் என்ற ஒரே வார்தைதான் எமது கோஷமாகும்.

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சமாதிகளுக்காக அறுத்துப் பலியிடுவதைக் கண்டோ, அங்கு அல்லாஹ்வுக்கு பல இணைகளை ஏற்படுத்துவதைக் கண்டோ நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.... சமாதிகளுடன் தொடர்பு படுத்தி சொல்லப்படக்கூடிய பொய்யான கதைகளை-வலீமார்கள் துன்பங்களைப் போக்குகிறார்கள், பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பவைகளைக் கேட்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூ தாலிபின் நிலையைப் பாருங்கள், நபியை உண்மைப் படுத்திய, இஸ்லாத்தைச் சத்திய மார்க்கமென மனதால் ஏற்றிருந்த அவர் சிலைகளை வணங்கிக்கொண்டிருந்தார். அவரது வாய் மொழிந்த வார்தைகள் சிலவற்றைப் பாருங்கள்...
முஹம்மதே ..அல்லாஹ் மீது ஆணையாக குரைஷிக் காபிர்கள் அனைவரும் உனக்கெதிராக ஒன்று சேர்ந்தாலும் நான் இருக்கும் வரை-அல்லது நான் இறந்து மண்ணுள் புதைக்கப்படும் வரை அவர்களால் உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்த முடியாது...
நீர் என்னை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தீர். எனக்குத் தெரியும் நீர் என் நலனுக்காகவே அப்படிச் செய்தீரென்று! நீர் உண்மை பேசுபவர்! நம்பிக்கைக்குரியவர் எனப் பட்டம் வாங்கியவர்.
மக்கள் ஏற்றிருக்கும் அனைத்து மதங்களை விடவும் நீர் சொல்லும் மார்க்கம்தான் உண்மையென்பது எனக்கு நன்றாகவே தெரியும் ..
எனினும் மக்கள் என்னைப் பழிப்பார்கள் - இறுதியில் மதம் மாறி விட்டீரே என்று இகழ்வார்கள் என்று எண்ணுகின்றேன். அப்படி இல்லையெனில் நான்தான் முதலில் இஸ்லாத்தை ஏற்று அதைப் பகிரங்கப்படுத்தியிருப்பேன்...
என்று பாடியதாக வரலாற்றின் மூலம் நாம் அறிகின்றோம்.


எனினும் அவரை சத்தியத்தைப் பின்பற்றுவதையும் தடுத்தது மூதாதையர்களின் வழிக்கு மாற்றம் செய்துவிடுவேனோ என்ற அச்சம்தான். தன் முன்னோருக்கு மாறு செய்வதை அவர் பெரிய அவமானமாகக் கருதினார். சத்தியத்தை ஏற்பதை விட குலப்பெருமையைக் காப்பதே அவருக்குப் பெரிதாகிப் போய்விட்டது. எலும்புகள் வலுவிழந்து, உடல் பலகீனமுற்று வயது முதிர்ந்தவராக மரணப் படுக்கையில் இருக்கும் அவரின் தவணை நெருங்கியிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரது தலை அருகில் இருந்தவராக பெரிய தந்தையே 'லா இலாஹ இல்லலாஹ்' என்று சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டே இருந்தார்கள். அந்த ஏகத்துவ மந்திரத்தை அவர் மொழிய முயலும் போதெல்லாம் அவரது தலை அருகே நின்ற குரைஷிக்காபிர்கள் நீர் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை வெறுக்கின்றீரா? அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை வெருக்கின்றீரா? என்று அதட்டினார்கள். தொடர்ந்து நபியவர்கள் கலிமாவை மொழியச் செய்வதற்கு முயன்று கொண்டே இருந்தார்கள், குரைஷிக் காபிர்களோ அவரை அவரது மூதாதையரின் பெற்றோரின் மார்க்கத்தில் மரணிக்கும் வரை, சிலைகளை வணங்குவதில்-அரசர்களுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வுக்கு இணைகளை கற்பிப்பதில் தரிப்படுத்துவதில் முயன்று கொண்டிருந்தார்கள். மரணத்தைத் தழுவிய அவர் நரகத்தை தங்குமிடமாக்கியவராக இவ்வுலகத்திலிருந்து பயணமாகிறார். அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்கள் மீது சுவர்க்கத்தைத் தடைசெய்து விட்டான்.

ஒரு முறை நபியிடத்தில் கேட்கப்பட்டது...
அல்லாஹ்வின் தூதரே உங்களது பெரிய தந்தை உங்களுக்கு உதவியாக பக்க பலமாக இருந்தார். சிலைகளை உடைத்தெறிந்தார் இந்த நற்செயல்களால் அவருக்கு மறுமையில் ஏதேனும் பிரயோசனம் ஏற்படுமா? என வினவப்பட்ட போது, நபியவர்கள் ஆம்.. நான் அவரை நரகத்தில் இருக்கக் கண்டேன். அவரது இரு பாதங்களின் கீழும் இரு நெருப்புக் கட்டிகளைப் போட்டு வேதனை செய்யப் படுகின்றது. அதன் வெப்பத்தால் அவரது மூளை கொதிக்கின்றது. அவர் நான் கொண்டு வந்த இஸ்லாத்திற்கு உதவியளிக்க வில்லையெனில் நரகத்தின் அடிப்பாகத்தில் போட்டு வேதனை செய்யப் பட்டிருப்பார் என்று கூறினார்கள்.

இன்னும் சிந்தித்துப் பாருங்கள்! சிலைகளை உடைத்தெறிந்த புனித இறை ஆலயமான கஃபாவை நிர்மானித்தவர் தான் இப்றாஹீம் (அலை) ஆவார்கள். அவரது எஜமானான அல்லாஹ்வால் பல சோதனைகளுக்குற்படுத்தப்பட்டார்கள், அல்லாஹ்வின் பாதையில் வேதனை செய்யப்படுகிறார்கள். இவ்வளவு அர்ப்பணிப்புகள் செய்தவருக்கு மறுமை நாளில் தனது தந்தைக்கு எந்த ஒரு உதவியும் செய்ய முடியாது. ஏனெனில் அவரது தந்தை முஷ்ரிக்காக மரணித்து விடுகிறார்.

புஹாரியில் ஒரு செய்தி வருகிறது: 'இப்றாஹீம் (அலை) தனது தந்தை ஆஸரை கவலையால் முகம் கறுத்தவராகச் சந்திப்பார், இப்றாஹீம் (அலை) -அவரிடம் எனக்கு மாறு செய்யவேண்டாமென நான் உங்களிடம் கூறவில்லையா? எனக் கேட்க அதற்கு அவரது தந்தை நான் இன்றைய நாளில் உனக்கு மாறு செய்யமாட்டேன் எனக்கூறுவார், இப்றாஹீம் நபி ரப்பிடம் யா அல்லாஹ் நீ என்னை அனைவரும் எழுப்பப்படும் நாளில் சஞ்சலத்துக்குள் ஆழ்த்த மாட்டாய் என வாக்களித்துள்ளாய்;, எனது தந்தையை பீடித்துள்ள சஞ்சலத்தை கவலையை விட வேறு என்ன கவலை சஞ்சலம் எனக்கு இருக்கிறது? என வினவ அல்லாஹ் கூறுவான்: நான் இறை நிராகரிப்பாளர்கள் மீது சுவர்க்கத்தை தடை செய்து விட்டேன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

இந்த அனைத்தையும் மனக்கண் முன் நிறுத்தி நல்லுணர்ச்சி பெறுங்கள். அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டு, தன் தாயை விட்டு, தன் தந்தையை விட்டு தன் மனைவியை விட்டு, தன் மக்களை விட்டு வெருண்டோடுவான். அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரைத் திருப்பி விடும் ஒரு காரியம் உண்டு'. (அபஸ 80:34-37).

'செல்வமும், மக்களும் (யாதொரு) பயனுமளிக்காத (அந்த) நாளில், பரிசுத்தமான இதயத்துடன் (தன் இரட்சகனாகிய) அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றவருக்குப் பயனளிக்காத நாள்)'. (அஷ்ஷுஅரா 26: 88,89).

சத்தியத்தை ஆதரவு வைக்கக்கூடியவனாக, சத்தியத்தைப் பிறருக்கு உபதேசிக்கக்கூடியவனாக, ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுக்கக்கூடியவனாக நீ ஆகிவிடு. அனைவரும் நேர்வழி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்.
அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ்வின் தூதர் மீது அவனது அருளும், சாந்தியும், பரக்கத்தும் உண்டாவதாக. ஆமீன்..

Refer this Page to your friends

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends