- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பறக்கும் குட்டி ரோபோட்

வெட்ட வெளியில் தானாக பறக்கும் ரோபோட் விமானத்தைப் பற்றியெல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ரோபோட் சற்று வித்தியாசமானது. இந்த ரோபோட் மிகவும் சிறியதுதான். இதன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே. ஆனால் பறக்கும் சக்தி கொண்டது.

[1]இதன் எடை மிகவும் குறைவு என்பதால் இதனை குட்டி ரோபோட் விமானம் என்று அழைக்கலாம். இதன் நீளத்தைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்? 80 சென்டி மீட்டர்தான் இந்தக் குட்டி ரோபோட்டின் நீளம். இதனை சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடிïட்டைச் சேர்ந்த ஜீன் கிரிஸ்டோப் மற்றும் டேரியோ ப்ளோரீனோ என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த குட்டி பறக்கும் ரோபோட் விமானம் மிகவும் சிக்கலான இடங்களில் அதாவது குகை, சுரங்க வழிப்பாதை போன்றவைகளில் எந்த இடத்திலும் மோதாமல் பறக்கும் தன்மைக் கொண்டது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி மற்றும் தேடும் பணிக்கு மிகவும் உதவிகரமாக இந்த மிகச்சிறிய பறக்கும் ரோபோட் இருக்கும். இதன் சிறப்பம்சமே எந்த இடத்திலும் மோதாமல் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல்தான்.

இதனை ஆராய்ச்சியாளர்கள் கார்பன் இழைகள், மிக லேசான பிளைவுட் மற்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பிலிம்களால் தயாரித்துள்ளனர். இதனுடைய வால் மற்றும் இறக்கைகள் பிளாஸ்டிக் ப்லிம்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இறக்கைகளின் முனைகளிலும் முறையே இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 30 கிராம் எடையுள்ள பறக்கும் ரோபோட்டின் இறக்கையில் கேமிரா என்றால் அது எவ்வளவு நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

விமானத்தின் முன்புறமும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமிரா ஒரு வினாடியில் 20ல் பங்கு நேரத்தில் எதிரே தட்டுப்படும் சுவரோ மற்றும் பொருளையோ படம் எடுத்து உடனடியாகக் கணக்கிட்டு மோதலை தவிர்க்கக்கூடியது. இதன் அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் இதைவிட மிகச்சிறிய அதாவது அதிகபட்சம் 12 கிராம் எடை மற்றும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள பறக்கும் மிகச்சிறிய ரோபோட்டை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.

விபத்தை தவிர்க்க வினோத கார்

[2]விபத்துக்கள் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையால்தான் நடக்கின்றன. இதை அன்றாடம் செய்திகளில் பார்க்கின்றோம். ஓட்டுனர் தூங்கியதால் கார் லாரி மோதல், காரில் பயணம் செய்தவர்கள் பலி என்றெல்லாம் தினந்தோறுளம் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கார் ஓட்டுபவர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதற்காகவே சிலர் டிரைவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வருவார்கள். கடைசியில் அருகில் இருப்பவரும் தூங்கி விபத்துக்கள் நேர்ந்ததும் உண்டு. சில வாகனங்களில் ஆடியோவில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டுவருவார்கள். ஆனால் இவையெல்லாம் அவ்வளவாக பயன்தருமா என்றால் சந்தேகமே!

தற்போது மோட்டர் நிறுவனம் ஒன்று இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே ஓட்டுபவரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் வண்ணம் ஒரு புதியவகை காரை தயாரித்துள்ளது.

சுவிஸ் கார் நிறுவனம் ஒன்று ஆபத்தை தவிர்க்கும் வினோத கார் ஒன்றை தயாரித்துள்ளது. `சென்சோ’ என்றழைக்கப்படும் இந்த கார் ஓட்டுநரின் தன்மையைப் பொறுத்து விபத்தைத் தவிர்க்க எச்சரிக்கை செய்யும். இதை இன்னும் சற்று விரிவாக காணலாம். கார் டிரைவர் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது அவரது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகின்றது.

அதாவது விளக்குகள் வண்ண ஒளிகளை உமிழ்தல், ஒலி ஏற்படுத்துதல் மற்றும் வாசனைகளை தெளித்தல் மூலம் ஓட்டுநரை எச்சரிக்கை செய்கிறது. கேமிரா, கைக்கடிகாரம், கம்ப்ïட்டர் இவைகளை உள்ளடக்கிய உணரி (சென்சார்) ஒன்று இந்தக் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் ஓட்டுபவரின் நாடித்துடிப்பை கணக்கிடுவதன் மூலம் ஓட்டுபவரின் உடல் நிலையை அறிந்து கொள்கிறது. கேமிரா ஓட்டுநரின் நடவடிக்கையை கண்காணிக்கிறது. கம்ப்யூடர் ஓட்டுநரின் மன நிலையை அறிகிறது. காரை ஓட்டுபவர் சற்று அயர்ந்தாலோ அல்லது அசதியில் கண்ணை மூட ஆரம்பித்தாலோ உடனே அவருடைய இருக்கை அவரை தானாகவே குலுக்கி எழுப்பிவிடும். இதனால் ஆபத்து தவிர்க்கப்படுகிறது. [3]

இந்த நவீன கார் விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்தக் காரின் வரவு விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. இதனை தயாரித்த நிறுவனம் காரின் செயல்பாடுகளை சோதித்து பார்த்தது. இதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் விஞ்ஞானிகளின் நம்பிக்கையை முழுவதுமாக பூர்த்தி செய்தன. எனவே வருங்காலத்தில் நிம்மதியான பயணத்தை மேற் கொள்ளலாம்தானே.

அதிசயம் தொடரும்

எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.