- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நேர்மை தூங்கும் நேரம்…

நாம் 62-வது குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் மன்மாட் என்கிற நகரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக

வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெரியாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…

அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே யார் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? நேர்மையாளராக இருந்தது. தவறைத் தட்டிக் கேட்டது. திகைக்காதீர்கள்.

இந்திய அரசுப் பணியிலும் நிர்வாகத்திலும் நேர்மையாளராக இருந்தால் இப்படி ஒரு சோதனையை எதிர்கொள்ள நேரும் என்று சொன்னால், இந்திய ஜனநாயகம் செத்துவிட்டது என்று அரைக்கம்பத்தில் மூவர்ணப் பதாகையைப் பறக்க விட்டுவிடலாமே…

தனது அலுவலக ஜீப்பில் பணி நிமித்தம் ஒரு உதவியாளருடனும், ஓட்டுநருடனும் பயணித்துக் கொண்டிருந்தார் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த யஷ்வந்த் சோனாவானே. நெடுஞ்சாலையில் ஒரு மண்ணெண்ணெய் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து சிலர் மண்ணெண்ணெயைத் திருடுவதையும் பார்த்த அவர் தனது ஜீப்பை நிறுத்தித் திருடுபவர்களைத் தனது செல்பேசியில் படம்பிடித்தார். திருட்டுக் கும்பல் ஓடி மறைந்தது.

தனது ஜீப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சோனாவானே. ஐந்தாறு மோட்டார் சைக்கிள்களில் சிலர் திடீரென்று விரைந்து வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்து சோனாவானேவின் உதவியாளரும், ஓட்டுநரும் ஓட்டம் பிடித்தனர். வருபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? அகப்பட்டுக்கொண்ட சோனாவானே அடித்துத் துவைக்கப்பட்டார். டேங்கர் லாரியிலிருந்த மண்ணெண்ணெய் அவர்மீது ஊற்றப்பட்டது. அந்த நேர்மையான கூடுதல் ஆட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

இப்படி நேர்மைக்குத் தண்டனை வழங்கி எக்காளமிட்டது யார் தெரியுமா? பொப்பட் ஷிண்டே என்று காவல்துறையால் அடையாளம் கண்டு இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர். இந்தக் கைதுகூட எதனால் நடந்தது தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 80,000-க்கும் அதிகமான கெஜட்டட் அதிகாரிகள் யஷ்வந்த் சோனாவானேயின் கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால்தான்.

பொப்பட் ஷிண்டே மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பெட்ரோல், மண்ணெண்ணெய் திருட்டுகள் மன்மாட் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாக காவல்துறை மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று எல்லோருமே இயங்கி வரும் சூழ்நிலை. இந்தச் சமூகவிரோதக் கும்பலுடன் ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

பெட்ரோல், மண்ணெண்ணெய் கடத்தல், திருடுதல், கலப்படம் செய்தல் என்பது மகாராஷ்டிரத்தில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் இப்போது கோடீஸ்வரர்கள் என்பது மட்டுமல்ல, தொண்டு நிறுவனத் தலைவர்களாகவும், கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் தங்களுக்கு யோக்கிய முலாம் பூசிக்கொண்டு உலா வருகிறார்கள் என்பதும் நிஜம்.

நமது தமிழகத்திலேயே, சென்னையில், பெட்ரோலியக் கலப்படத்துக்காகக் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, சிபிஐ வழக்குப் பதிவு செய்தும்கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளில் சிலரே இந்தக் கடத்தல் கலப்பட சமூக விரோதக் கும்பலுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்கும்போது, யார் இதைத் தடுப்பது? இதனால் ஏற்படும் இழப்புக்கு சாதாரண பொதுஜனம் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து ஈடுகட்டுவதைத் தவிர, வேறு வழிதான் என்ன?

மன்மாட் நகரில் நேர்மைக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கும் யஷ்வந்த் சோனாவானேயைப்போல பலர் ரத்தம் சிந்தியும்கூட, சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லையே. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியான சத்யேந்திர துபே 2003-ல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்காக பிகாரில் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் கலப்படப் பெட்ரோல் விற்றதற்காக இரண்டு பெட்ரோல் பங்குகளை சீல் வைக்கச் செய்த மஞ்சுநாத் என்கிற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி 2005-ல் கொல்லப்பட்டார்.

நமது தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஏ.ஆர். வெங்கடேசன், ஜி. புண்ணியகோடி என்ற இரண்டு தாசில்தார்களும், ஆர். சண்முக சுந்தரம் என்கிற வருவாய் ஆய்வாளரும் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லப்படவில்லையா? நாங்குநேரியில் தாசில்தார் எஸ். நடராஜன், மணல் கடத்தி வந்த லாரியைத் தடுக்க முயன்றபோது, லாரியால் மோதப்பட்டு இப்போது சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறவில்லையா?

நேர்மையாளர்களையும், ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காப்பாற்ற வேண்டிய, காவல்துறையும் அரசும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு செயல்படும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய ஜனநாயகத்துக்கே முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!

நன்றி: தினமணி