- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஒரே விலையில் தங்க நாணயங்கள் விற்பனை

[1]இந்தியாவில், சில்லறை விற்பனை நிலையங்களின் வாயிலாக, தங்க நாணயங்களை விற்பனை செய்ய, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்களை வாங்கலாம் என்பதுடன், சந்தை விலையில் அவற்றை விற்கவும் முடியும் என்பது, இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அரசியல் நெருக்கடி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தில் முதலீடு செவேது அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தங்கம் விலை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

தங்கம், பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், ஏராளமானோர் அதில் முதலீடு செய்து வருகின்றனர். அதற்கேற்ப, தங்கத்தில் பலவகையான முதலீட்டு வாய்ப்புகள், சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. தங்கக் கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள், தங்க ஈ.டி.எப். திட்டங்கள், இத்திட்டங்கள் சார்ந்த பங்குச் சந்தை முதலீடு, முன்பேர வர்த்தகம் என, பலவகைகளில் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை, மும்பை உள்ளிட்ட சந்தைகளில், தங்கத்தின் விலை ஒரே சீராக இருப்பதில்லை. அன்றாட விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படும். இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்களை விற்பனை செய்ய, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. விரைவில், முன்னணி விற்பனை நிலையங்களில், இந்த அமைப்பின் முத்திரை மற்றும் தரசான்றிதழுடன் கூடிய தங்க நாணயங்கள் விற்பனைக்கு வர உள்ளன. மேலும், இந்த நாணயங்களை எந்த நகரங்களில் விற்றாலும், ஒரே சீரான விலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளும் தங்க கட்டிகள், தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், இவை சந்தை விலையை விட அதிக விலையிலேயே கிடைக்கின்றன. நகைக் கடையில் வாங்கும் தங்க நாணயத்தை விட, குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிக விலைக்கு இந்த நாணயங்களை, வங்கிகள் விற்கின்றன. அதனால், தங்க நாணயங்களில் முதலீடு செய்வோர், வங்கிகளில் அவற்றை வாங்குவதை தவிர்க்கின்றனர். கூடுதல் விலையென்றாலும் பரவாயில்லை, தரமான தங்க நாணயங்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களே, வங்கிகளில் அவற்றை வாங்குகின்றனர். அதேசமயம், சந்தையில் தங்க நாணயங்களை வாங்கும் போது, அவற்றின் தரம் குறித்த ஐயப்பாடும் முதலீட்டாளர்களிடம் உள்ளது. அதனால், நியாயமான விலையில், தர உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு அதிக தேவைப்பாடு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களின் முழு நம்பிக்கையை பெறும் நோக்கத்துடன், தங்க நாணயங்களை சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

நியாயமான விலை, தரத்தில் நம்ப கத்தன்மை, சந்தை விலையில் விற்கும் வசதி உள்ளிட்டவற்றால், இந்த தங்க நாணயங்கள் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால்,  தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கம் 25 ஆயிரம் ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் விற்பனை, 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வைர நகைகள் தொழிலில் வல்லுனர்களுக்குள்ள பற்றாக்குறையைக் போக்கும் வகையில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் பயிற்சி திட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நகை கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

நன்றி: தினமலர்