- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பெருகிவரும் மனஅழுத்த மரணங்கள்!

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பி.பீ.ஓ, கே.பி.ஓ என்று நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் புதுப்புது நோய்களும் மனிதர்களை தாக்கத்தான் செய்கின்றன.

இந்த சின்ன விஷயம் கூட மனிதர்களை இந்த அளவுக்குப் பாதிக்குமா என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளுடனே மனிதர்கள் பயணம் செய்வதால் மன அழுத்தம் மனிதர்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.

இதிலும், இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மன அழுத்தம் நோய் பாதிக்கப்பட்ட சிலரை சோதனைக்கு உள்ளாக்கியபோது அவர்களில் 90 சதவீதம் பேர் வாகனங்களில் நெடுந்தொலைவு சென்று பணிபுரிபவர்களாகவே இருக்கின்றனர்.

இதற்குக் காரணங்கள் நிறுத்தத்தைத் தாண்டி நிற்கும் பேருந்துகள், தேவையில்லாத, அனுமதிக்கப்படாத வாகன ஒலிப்பான்கள், வாகனங்கள் ஒன்றுக்கொன்று போக்குவரத்து விதிகளை மீறி முந்திச்செல்வது, இன்டிகேட்டர் விளக்குகளை மாற்றி மாற்றி பின்னால் வருபவர்களைக் குழப்புவது, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது குறுக்காக நாய் போன்ற கால்நடைகள் குறுக்கிடுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலும், பேருந்தில் வேலைக்குச் செல்பவர்களுக்கு, சரியான நிறுத்தத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்துவாரா, நடத்துநர் மீதி சில்லறையை மறக்காமல் திருப்பித் தருவாரா என்ற பதற்றம், படபடப்பு கூட மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

நம் கண் முன்னே நடக்கும் விதிமுறை மீறல்களைக் கண்டு கோபம், ஆத்திரம் அடைவது, இப்பிரச்சினைகளை யாரிடம் முறையிடுவது, யார் தான் தீர்வு காண்பது என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கோபத்தின் வெளிப்பாட்டை யாரிடம் காட்டுவது. இப்படி நாளும் நம் கண் முன்னே நடக்கும் சின்னச்சின்னப் பிரச்சினைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள்ளே போட்டு, கடைசியில் மன அழுத்த நோய் நம்மை ஆட்கொண்டுவிடும்.

மன அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாத மனப்போக்கு போன்றவை கடைசியில் மனிதர்களை மரணத்தை தழுவச் செய்கிறதாம்.

சமீபத்தில் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பெங்களூரில் மட்டும் 1 இலட்சம் பேரில் சராசரியாக 35 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் மன அழுத்தம் மட்டுமே!

இது குறித்து பெங்களூர் பிரபல மனோதத்துவ நிபுணர் ஒருவர், பெங்களூரில் அசுர வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவ்வூர்வாசிகள் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனாலேயே, தற்போது ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாகக் கூறுகிறார்.

மேலும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்தல், ஓய்வு அவசியம் என்கிறார் அவர்.

ஒருபுறம் தாறுமாறான போக்குவரத்து நெரிசலால் ஒரு சாரார் மன அழுத்த நோயால் பாதித்துக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினர் வேலைப் பளுவால் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதிலும், முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், பி.பீ.ஓ மையங்களிலும் வேலை செய்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்களாம்.

அதிக நேர வேலை, பணிப் போட்டி, நேரம் தவறிய சாப்பாடு, பணிப் பாதுகாப்பின்மை போன்றவை இன்றைய இளைஞர்களை மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறதாம்.

இதையும் தவிர வருமானத்திற்கு மீறி செலவு செய்வதற்கும், ஆடம்பரமான வாழ்க்கைக்கு வங்கிக் கடன், இதை மாதந்தோறும் எப்படிச் செலுத்துவது என்ற பதற்றம் போன்றவையும் மன அழுத்த நோய்க்கு ஆளாக்கி விடுகிறதாம்.

மேலும், நேரம் கடந்து வீட்டுக்கு வருவதாலும், குடும்பத்தாருடன் சகஜமாகப் பேசும் வாய்ப்பை இவர்கள் இழக்க நேரிடுவதாலும், இவர்கள் தங்களுக்குள்ளாகவே தனிமையாக்கப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

உடல் சோர்வு, உடல் வலி, ஒரே பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவை மன அழுத்த நோய் வருவதற்கு அறிகுறியாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சரி! இதற்குத் தீர்வுதான் என்ன என்றால், ஒரே பதில், முறையான சாப்பாடு, உறக்கம், உடற்பயிற்சி. இதிலும், தியானப்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைக்கச் செய்கிறதாம்.

மேலும், குடும்ப உறுப்பினர்களிடையே சகஜமாகப் பேசிப் பழகுதல், பணிப் பிரச்சினைகள் குறித்து முழுவதுமாக அவர்களுடன் ஆலோசனை செய்வதால் மன அழுத்தப் பிரச்சினை குறையுமாம்.

நன்றி:  தினமணி