Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,311 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாடி – சிற்றரசன் கோட்டையானது!

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 13

குழப்பமும் தெளிவும்

வடபகுதியில் பிரிவினையின் போது இருந்த நிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் தென்பகுதியின் நிலைமை வேகமாக மாறிக்கொண்டே வந்தது.

ஒரு விஷயத்தை இப்போது புரிந்து கொள்ள வேண்டும். தெற்குவாடி என்று நாம் இதில் குறிப்பிடும் இடம் தற்போது பள்ளிவாசலுக்குத் தென்புறம் உள்ள ஒரு சிறிய தெரு மட்டுமில்லை.

மேற்குத் தெருவில் காட்டு பாவா, முத்து மீரான்கனி வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஆரம்பித்து, கிழக்கே மா..சீ. வீடு வரையுள்ள நேர் கோடுதான் தெற்குவாடியின் வடக்கு எல்லை. தெற்கு எல்லை டிரான்ஸ்பார்மர். இதற்கு இடையில் விசாலமான பகுதி தான் இதில் குறிப்பிடப்படும் தெற்குவாடி.

நாளாவட்டத்தில் புதிய வரவுகள் வந்து குடியமர்ந்தனர். எருத்து மாட்டுவணிகக் குழுக்கள் மூலம் இவ்வூரைப் பற்றிய செய்தி உள் நாட்டுக்குள் பரவியது. இதன் அமைதியான சூழல் அனைவரையம் கவர்ந்திழுத்தது.

புதிய வீடுகள், புதிய தெருக்கள்..

ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் (இதைப் பற்றிப் பின்னர் விளக்கமாக எழுதப்படும்) தனியாக இரண்டு தெருக்களில் குடியமர்ந்தனர்.

‘வாடி’ என்பதை இணைத்து அதற்குப் ‘பனைவாடி’ தெரு என்று பெயரிட்டுக் கொண்டார்கள். இப்பொழுது முதல் பிரிவினையின் போது உள்ள ‘தெற்குவாடி’யின் வடபகுதி ‘மேற்குத் தெரு’ என்று பெயரால் அழைக்கப்பட்டது. பனைவாடியுடன் மூன்று தனித்தனிப் பகுதியாக, தனித்தனிப் பெயர்களுடன்…

மீண்டும் குழப்பம்! மூன்று பகுதியையும் இனணத்து மூன்றுக்கும் பொதுவான ஒரு பெயரைச் சூட்ட வேண்டும்.

ஊருக்கு மேற்கே ஓர் ஓடை. தேவிபட்டினம் – இராமநாதபுரம் ரோடும், கோப்பேர் மடமும் – ஆற்றாங்கரை இணைப்பு ரோடும் அப்போது கிடையாது.

மேற்கூட்டாம் புளி – வெங்குலம் பகுதியிலிருந்து வரும் நீரும், சுண்டிக்குளம் மற்றும் தரவைப் பகுதியில் இருந்து வரும் நீரும் மழைக்காலம் ஒன்றாக திரண்டு தெற்கு நோக்கி ஓடி வைகை ஆற்றில் கலந்து விடும்.

பார்ப்பதற்கு ஓர் ஓடை போல் தோன்றும். கோடையில் வறண்டு விடும்.

இலங்கை – கண்டியில் இருந்து வந்த ஒரு நபர் ஆழந்தெரியாமல் இறங்கி தண்ணீரால் அடித்துச் செல்லப் பட்டதால் ‘கண்டியான் தாவு’ என்ற பெயர் வந்தது.

இந்த சிற்றோடையை ஆறு என்று கற்பனை வடிவம் கொடுத்து, இத்துடன் கோட்டை என்ற சொல்லையும் இணைத்து ‘சிற்றாறு கோட்டை’ என்று வைக்கலாம் என்று சிலர் தங்கள் அபிப்பிராயத்தை கூறினர்.

விஜயன் மறைவுக்குப் பின் அவனால் நிறுவப்பட்ட ராஜேஸ்வரி கோயிலைச் சுற்றி இந்தப் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஓர் புதிய வகை மரங்கள் உண்டாகி அடந்த காடு போல் தோற்றமளித்தது. அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் இவ்வகை மரங்கள் காணப்படவில்லை. இதன் விதைகள் விஜயனால் மேற்கு மலைத் தொடரில் இருந்து கொண்டு வரப்பட்டு இவை வளர்க்கப்பட்டிருக்கலாம்.

விஜயனால் அப்போது நடப்பட்ட இம்மரங்கள் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் பார்ப்பவர் அச்சங்கொள்ளும் விதத்தில் பயங்கரமான காடாக மாறிப் போய்விட்டது.

ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மக்கள் அதன் அருகில் கூடச் செல்வதில்லை.

அதற்குள் பேய்கள் நடமாடுவதாக ஒரு வதந்தி.

சித்தர்கள் அதில் இருப்பதாகவும் உள்ளே யாராலும் சென்றால் ‘அவர்கள்’ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதாகவும் மற்றோர் புரளி.

இதைப் பலர் நம்பினார்கள். ஆனால் சித்தர்கள் இருந்ததையோ, மறைந்ததையோ யாரும் கண்கூடாகப் பர்க்கவில்லை.

அந்த வதந்தியை அல்லது வீண் புரளியை ஆதாரமாக வைத்து, ‘ சித்தர்கோட்டை’ என்று பெயர் சூட்டலாம் என சிலர் வாதிட்டனர்.

இன்னொரு பிரிவினரோ, முஸ்லிம்கள் மட்டுமே இங்கு குடியிருப்பதால் இதைத், ‘துளுக்கப்பட்டணம்’ என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும் என்று அடித்துக் கூறினார்கள்.

இதன் விளக்கம் என்னவெனில், முஸ்லிம்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த மொழியினராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான தலைவர் ஒருவர் உண்டு. அவரை ‘கலீபா’ என்று அழைப்பார்கள்.

இந்த விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில் துருக்கி நாட்டின் சுல்தான்கள், ‘கலீபா’ பதவியையும் சேர்த்து வகித்து வந்தார்கள்.

ஆர்வத்தின் காரணமாக இங்குள்ள மக்கள் துருக்கியர் பாணியில் உடையணிந்தார்கள். துருக்கியக் குல்லாப் போட்டார்க்ள்.

இதன் காரணமாக இங்குள்ள முஸ்லிம் அல்லாத மக்கள் முஸ்லிம்களை. ‘துருக்கர்’ என்று அழைக்கலாயினர். இதுவே பின்னர் சிதைந்து ‘துளுக்கர்’ என்று மாறிவிட்டது.

விவாதம் நீண்டு கொண்டு போனதே தவிர உருப்படியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இறுதியில் மற்ற எல்லேரையும் விட வயதில் மூத்தவர் ஒருவர் எழுந்தார். கூட்டத்தினர் அனைவரையும் தீர்க்கமாக ஒரு சுற்று நோட்டம் விட்டார். பின் நிதானமாக கணிரரென்ற குரலில் பேசலானார்:

ஊர்பெயர் தொடர்பாக உங்களில் ஒவ்வொருவரும் அவரவர் அபிப்பிராயங்களை எடுத்துச் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி.

ஆனால் அதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாவும், அவற்றில் சில அடிப்படைக் காரணங்களற்றதாகவும் இருக்கிறது. இபபோதைய சூழ்நிலையில் அவை பொருத்தமற்ற பெயர்களாகத் தெரிகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிஞ்சிற்றும் கிடையாது….’ என்று கூறி கூட்டத்தினரின் முகபாவனங்களைக் கவனித்தார்.

அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்ப்புக் காட்டவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச்சைத் துவக்கினார்.

இது தனிப்பட் ஒருவருடைய பிரச்சனையல்ல. ஓர் ஊரின் பிரச்சனை. அது மட்டுமல்ல.. நமக்குப் பின் எத்தனையோ நூற்றாண்டு காலம் அடியடி வாழையாக இவ்வூரில் வாழக்கூடிய மக்களின் பிரச்சனையும் கூட.

இதில் நாம் அவசரங் காட்டக் கூடாது. இப்பொழுது நாம் தெரிவு செய்யக்கூடிய பெயர் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகாமல் நிரந்தரமாக நிலைத்து நிற்கக்கூடிய பெயராக இருக்க வேண்டும்…” என்று கூறி சற்று நிதானித்தார்.

திடீரென கூட்டத்தின் நடுவேயிருந்து ஒருவர் எழுந்தார்.

“நீங்கள் தான் அப்படிப்பட்ட ஒரு பெயரைச் சொல்லுங்களேன்!”

பெரியவர் புன்முறுவல் செய்தார். பின்னர் தொடர்ந்து பேசலுற்றார்.

“இப்போது நான் கூறப் போவதை நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். இப்போது நாம் கவனிக்க வேண்டியது, நம்மால் தேர்வு செய்யும் பெயர் இனிமேல் எவ்வித மாறுதலும் செய்ய முடியாத வகையில் இருக்க வேண்டும்.

அடுத்து, அதற்குக் கூறும் காரணங்கள் அசைக்க முடியாத ஆதாரபூர்வமானதாக இருக்க வேண்டும்.

மூன்றாவதும் மிக முக்கியமானதுமான விஷயம். இந்தப் பெயர் மக்களால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களையும் ஒன்றிணைத்து அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவோமானால்..

நிச்சயமாக ஓர் அருமையான பெயரைக் கண்டு பிடித்து விடலாம்.

இப்பொழுது மிக முக்கியமான ஓரு செய்தியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊருக்கு பாண்டிய மன்னர் குலத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் வந்திருந்தார். அப்போது இது ஒரு சிறிய குக்கிராமமாக இருந்தது.

அவர் வந்தபின் பற்பல சீர்திருத்தங்களைச் செய்து இந்த ஊரை முன்னேற்றினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. விவசயாம் செழித்தது. கைத்தொழில் வளர்ந்தது.

அவர் மறைந்து பல நூறு ஆண்டுகள் சென்றாலும் நாம் இன்னும் பாண்டிய நாட்டின் பிரஜைகளே! நாம் புதிய மதத்தைத் தழுவியிருந்தாலும் பாண்டிய மன்னரின் குடிமக்களே! தேச பக்தியில் நாம் யாருக்கும் சளைத்தவர்களல்ல!

நமது சேதசப்பற்றையும் பாண்டிய மன்னர் மீது நமக்குள்ள விசுவாசத்தையும் தெரிவிக்கும் வகையில் இவ்வூரின் பெயர் அமைய வேண்டுமென்று விரும்புகிறேன்.

எனவே மறைந்த இளவரசரை நினைவு கூரும் வகையில் “சிற்றரசன் கோட்டை” என்ற பெயரை இவ்வூருக்குச் சூட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும் என் நம்புகிறேன்.

முன்னதாக உங்களில் சிலர் கூறியதைப் போல இது என் சொந்த அபிப்பிராயம் தான். கூட்டத்தினர் முடிவே இறுதியானது.” எனறு கூறி முடித்தார்.

“ஆஹா! அருமையான பெயர்!”
“இதைவிடப் பொருத்தமான பெயர் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது!”
“வேறு யோசனையே வேண்டாம்!”
கூட்டத்தின் பல பக்கங்களில் இருந்து உற்சாகக் குரல்கள் ஒலித்தது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

எவ்வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக, “சிற்றரசன் கோட்டை” என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்