- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா!

[1]மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 18ல் தொடங்கி மே 10 வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 226 இடங்களில் வெற்றி பெற்று 34 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கை இருந்தும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசையும் ஆட்சியில் பங்கேற்குமாறு மம்தா அழைப்பு விடுத்தார். இதுகுறித்து நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மம்தா அமைச்சரவையில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணியில் மம்தா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தேர்தலுக்கு முன்பு சிறிய அமைச்சரவையை அமைக்க விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்த மம்தா தனது முடிவை மாற்றிக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முழு வீச்சில் அமைச்சரவையை உருவாக்கும் பணியில் இறங்கினார். 43 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 7 அமைச்சர்கள் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று மதியம் 1.00 மணியளவில் ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மேற்குவங்கத்தின் முதல் பெண் முதல்வராக மம்தா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் எம்.கே.நாராயணன் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து 43 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பாக மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், அந்தோணி மற்றும் மார்க்சிஸ்ட் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி: தினகரன்