- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

[1] எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் நச்சுவாயுக்கள்,பிராணவாயு, தண்ணீர் ஆகியவற்றின் வேதியியல் மாற்றங்களைக் கணக்கீடு செய்வதுடன் தொடர்ந்து கண்காணிக்கும். இதுகுறித்தத் தகவல்களை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பும்.

இந்தத் தகவல்களை ஆய்வுக்கூடத்தில் 24 மணிநேரமும் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார் அவர்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்தியநாராயணன்:
முழுக்க முழுக்க மாணவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், மாணவர்கள் சமுதாயத்துக்கு ஒரு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் உருவாக்கும் என்று நம்புகிறேன். மாணவர்களின் விண்வெளி ஆராய்ச்சித்திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சி பாடத்திட்டம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது ஏவப்படும் எஸ்.ஆர்.எம்.சாட்-1 செயற்கைக்கோள் 2 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், எஸ்.ஆர்.எம்.சாட் செயற்கைக்கோள்-2 உருவாக்கி விண்ணில் ஏவும் திட்டம் உள்ளது என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,ஆராய்ச்சித்துறை இயக்குனர் டி.நாராயணராவ், ஆராய்ச்சித்துறைத் தலைவர் எஸ்.வி.கஸ்பர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி