- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கழிவுத்தொட்டியில் பேக்டிசெம்!

கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது.

[1]மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல… அந்தத் தொட்டியிலிருக்கும் நீரை செடிகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா… விளக்கம் தேவை?” என்று தர்மபுரி மாவட்டம், பாளையத்தானூர், ராமு. வள்ளுவர் கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் பி. சதீஷ் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறார்.

“ஆக்டிசெம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு. கப்பல் மற்றும் விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில் இதைப் பயன்படுத்துவார்கள். துர்நாற்றத்தைப் போக்கிவிடுவதோடு, திடமாக உள்ள கழிவுகளை தெளிந்தநீர் போல மாற்றிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. இது வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஆகையால், செலவு குறைந்த நுண்ணுயிர்க் கலவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பெயர் ‘பேக்டிசெம்’. ‘ஆக்டிசெம்’ என்ற கலவையைக் காட்டிலும் வேகமாகச் செயல்பட்டு, கழிவு களில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிரிகளைச் சிதைக்கும் குணமுடையது இந்த ‘பேக்டிசெம்’.

ஐந்து நபர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள கழிவுத் தொட்டிக்கு 100 கிராம் அளவு கொண்ட பேக்டிசெம் போதும். இதன் விலை 120 ரூபாய். ஒரு முறை பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேக்டிசெம் என்ற கலவையில் இருக்கும் நுண்ணுயிர்களின் உணவே… தீமை செய்யக் கூடிய பாக்டீரியாக்கள்தான். எனவே, தீமை செய்யும் நுண்ணுயிர்களை இந்த பேக்டிசெம் சிதைத்துவிடும். இதனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசாது. இதன் அடிப்படைத் தத்துவம்… கிராமங்களில் வாந்தி எடுத்த இடத்திலும், கழிவுகள் உள்ள இடத்திலும் மண்ணை அள்ளிப் போடுவார்கள். இப்படிச் செய்வதால் அந்த மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கிவிடும். அதனால்தான் மண்ணை அள்ளிப் போட்டவுடன் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த பேக்டிசெம் கலவையும் வேலை செய்கிறது.

துர்நாற்றம் வீசாது என்பதோடு, அந்தத் தொட்டியிலிருக்கும் கழிவை, தெளிந்த நீராக மாற்றிவிடும். அது கழிவுத் தொட்டியின் நீர் என்று யாராலும் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு அதன் தன்மையை மாறிவிடும். அந்த நீரை செடிகளுக்கும், மரங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்தச் செய்தியை சொல்லும் போதே சிலருக்கு அருவெறுப்பு ஏற்படும். ஆனால், உண்மை அதுதான். எனவே மன ரீதியாக நாம் பக்குவப்பட்டால், அந்தத் தண்ணீரையும் பயனுள்ள வகையில் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.

கழிவுத் தொட்டிக்கு பேக்டிசெம் பயன்படுத்துபவர்கள், கழிவறையை ரசாயனப் பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் தொட்டியில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மடிந்துவிடும். ஆகவே, வினிகர், எலுமிச்சைப் பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி கழிவறையைத் தூய்மை செய்யலாம்.”

தொடர்புக்கு: அலைபேசி-98401-81908

நன்றி: பெட்டகம்.காம்