- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 18

நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, அதில் நடக்க இருப்பதெல்லாம் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.

இப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும், நம் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சர் வில்லியம் ஓஸ்லர் (Sir William Osler) தன் மேசையில் நம் மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போதும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

“நேற்று என்பது வெறும் கனவு
நாளை என்பதோ கற்பனை மட்டுமே
இன்று சிறப்பாக வாழ்ந்தால்
அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
அதனால் இன்றைய தினத்தைக் கவனி
அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”

நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் தான் அதிகமாக நம் நிகழ்காலத்தைத் திருடிக் கொள்கின்றன. கடந்த காலத்தில் அப்படியாகி விட்டதே, இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டும், நாளை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டும் என்ன பயன்? வருத்தப்படுவதால் கடந்தகாலம் மாறி விடுமா? கவலைப்படுவதால் எதிர்காலம் தானாக சிறந்து விடுமா?

காளிதாசரின் இன்றைய தினம் கூட சற்று அகலமான காலம் என்று சொல்லலாம். இன்றில் கூட இன்றைக்குட்பட்ட கடந்த காலம், எதிர்காலம் என்பதும் அடங்கி விடுகிறது. உண்மையில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் சூட்சுமம் இந்தக் கணத்தில் தான் உள்ளது. இந்தக் கணத்தில் தான் நாம் ஏதாவது செய்ய முடியும். நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான கணம் இந்தக் கணம் தான்.

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

தாமஸ் கார்லைல் மிக அழகாகக் கூறுவார். “நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்”. அப்படித்தான் இந்தக் கணத்தை நாம் சிறப்பாக உபயோகித்தால், அப்படியே ஒவ்வொரு கணம் நம் வாழ்க்கையில் வரும் போதும் சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் தானாக சிறப்பாய் உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

நேற்றைய நிகழ்வுகளில் இந்தக் கணத்தில் ஏதாவது பாடம் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தும். நாளைய நாளின் சிறப்புக்காக திட்டமிட்டு இந்தக் கணத்தில் ஏதாவது செய்வோமானால் அது நம்மை முன்னேற்றும். ஆக இந்த நாளில் இந்தக் கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல.  அப்படி செயல்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.

கடைசி வரை உங்களால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே.
எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனம் வையுங்கள். நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழித்து விடாதீர்கள். புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறி விடாது, தீர்வும் கிடைக்காது.  தரப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எப்படி முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம் என்று யோசித்து அதன்படி செயல்படுங்கள். மோசமான சூழ்நிலைகளும் சிறிது சிறிதாக மாறி உங்களை மேலான சூழ்நிலைகளுக்குப் போக வழிவிடுவதைக் காண்பீர்கள்.

நமக்கு முழுக்கட்டுப்பாடு இருப்பது இந்தக் கணத்தில் தான் என்பதால் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சுமம் முழுவதும் இந்தக் கணத்தில் தான் இருக்கிறது. நதி நீரோட்டத்தில் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை காலை நனைக்க முடியாது என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே இருக்கிறது. கால ஓட்டத்திலும் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. நாம் இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொருத்தே இது நமக்கு அனுகூலமாவதும், பயனற்றுப் போவதும் தீர்மானமாகிறது.

காளிதாசர் சொன்னது போல நம் விடியலுக்கான தீர்வு இந்தக் கணத்தில் தான் உள்ளது. மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். ஏதாவது சாதிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான பிள்ளையார் சுழியை இந்தக் கணத்தில் போடுங்கள். நாளை செய்யலாம் என்று விட்டு வைப்பவைகளை நாம் என்றுமே செய்வதில்லை. ஏனென்றால் நாளை என்பது நம்மிடம் வருவதேயில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் இந்தக் கணம் மட்டுமே. இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.

நன்றி: -என்.கணேசன் – வல்லமை