- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நாலு வித்தியாசங்கள்

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

தோல்வியாளர்கள்

இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.

சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள்.  தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படி முயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.   தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத் தெரியாது. “ஏதோ செய்யறோம்! பார்க்கலாம்” என்பார்கள். “உங்கள் கனவுகள் என்ன?” என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத் தருவார்கள்.  தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால், எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள். போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

வெற்றியாளர்கள்

இவர்கள் துணிச்சல் காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை, திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.   எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை, சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள்.   தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு. கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள்.   தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையான அளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பாணபத்திரன்- நம்பிக்கை