- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்

படிக்கிற போது யாரை ‘ரோல் மாடலாக’ கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால்? அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்… விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து… * பள்ளி, கல்லூரி காலங்கள் எப்படி? விருதுநகர் மாவட்டம் தோணுகால் என் சொந்த ஊர். பள்ளி படிப்பை அங்கு துவக்கினேன். ஆமாத்தூரில் தொடக்க கல்வி, விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்தேன். நாடார் கல்லூரியில் இளங்கலை படிப்பு, பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன்.

போர்விமான தயாரிப்பு பணியில்:

ponraj [1]விஞ்ஞானியாக விரும்பினீர்களா? பள்ளியில் பிளஸ் 2 படித்த போதுதான், இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான எஸ்.எல்.வி.,3, ரோகிணி ஸ்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது. பின்னணியில் விஞ்ஞானி அப்துல் கலாம் இருந்ததையறிந்து அவரை ‘ரோல் மாடலாக’ எண்ணி விஞ்ஞானியாக விரும்பினேன். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஜூனியர் விஞ்ஞானியாக 1989ல் சேர்ந்தேன். மதுரை காமராஜ் பல்கலையில்1991-95 வரை ஜூனியர் இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் ஆக பணிபுரிந்தேன். மீண்டும் பெங்களூரு ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜன்ஸியில் சயின்டிஸ்ட் ‘சி’ அந்தஸ்தில் சேர்ந்தேன். அதன் இயக்குனர் ஜெனரலாக இருந்த அப்துல் கலாம் கீழ் இலகுரக போர் விமான தயாரிப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டியது. * கலாம் கீழ் பணிபுரிவோம் என எதிர்பார்த்தீர்களா ரோல் மாடலாக நினைத்தவரிடமே(அப்துல் கலாம்) பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 2002ல் அவர் ஜனாதிபதியானதும் என்னையும் வரச் சொல்லி விட்டார். * என்ன காரணம்? பணிதிறமையை பார்த்து தான். தகவல் தொழில் நுட்ப தொடர்புக்கு அவருக்கு ஆட்கள் தேவையாக இருந்தது.

விசாலமான பார்வை:

கலாமுடன் பணிபுரிந்த அனுபவம்? அப்துல் கலாம் எப்போதும் உயர்வான எண்ணங்களை சிந்திக்க வைப்பார். அடுத்தவரை பற்றி எப்போதும் உயர்வாகவே பேசுவார். மற்றவர்களையும் பேச வைப்பார். எண்ணுவதை பெரியதாக எண்ண வேண்டும் என்பார். கஷ்டப்பட்டு பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைப்பார். அவருக்கு கீழ் பணி என்பது கடவுள் கொடுத்த வரம். அவரிடம் சேர்ந்த பிறகே நாட்டை பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது. * மாணவர்களும், கலாமும்- இந்த ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது? நாட்டில் 18 கோடி இளைஞர்கள், மாணவர்களை அப்துல் கலாம் இதுவரை சந்தித்துள்ளார். நாட்டின் வருங்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் தான். அவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைக்க வேண்டும் என அடிக்கடி கலாம் கூறுவார்.

உறங்க விடாமல் செய்வதே கனவு:

கலாமிடம் கவர்ந்த குணம் எது? முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார். எது முடியாத செயலாக இருக்கிறதோ அதை செய்ய நினைப்பார். ஒருவர் குறித்து புறம் கூறினால் கேட்டு கொள்வார். பின் அவரை பற்றிய நல்ல குணங்களை பட்டியலிடுவார். முடிந்த விஷயங்களை பேச மாட்டார். செய்ய வேண்டியதை மட்டும் பேசுவார். உறங்கும் போது வருவதல்ல கனவு… உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு… என நம்பிக்கையை விதைப்பார். * கலாம் எண்ணப்படி 2020ல் இந்தியா வல்லரசாகுமா? கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 15 மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அம்மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை இயற்றும் சவாலான பணியிலும் ஈடுபட்டேன். அவை வளர்ந்த மாநிலங்களாக உருவாவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தூண்டுதலாக இருந்தார். அம்மாநில சட்டசபைகளிலும் கலாம் பேசினார். மாநிலங்களின் வளம், சிறப்பு, பிரச்னைகள் என்ன என கண்டறிந்து வளர்ச்சி பாதையில் செல்ல முடியும் என்பதற்கான திட்டங்களை விளக்கினார். அவரும், நானும் ‘ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்திற்கான ஒரு சாசனம்) நூலை எழுதியுள்ளோம். ஊராட்சி முதல் பார்லிமென்ட் வரை வளர்ச்சி அரசியலில் எப்படி ஈடுபடுவது, அதற்கு எப்படி சமூக, பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டு வருவது என பல அம்சங்களை கலாம் தெரிவித்துள்ளார். அதன்படி செயல்பட்டால், 2020ல் இந்திய வளர்ந்த நாடாகும். தொடர்புக்கு: vponraj@gmail.com [2]