- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி?

bnr_waterForAll_03 [1]ஒரு மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, அதன் அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடப்படாமல், நகரத்தை விரிவாக்கினால், இயற்கை வளங்கள் அழிவதோடு, பஞ்சமும், இயற்கைப் பேரழிவும் உண்டாகும்,” என்கிறார், அறம் முருகேசன், 50. அவர், பத்தாண்டுகளுக்கும் மேல், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

சிங்கப்பூரில் எப்படி?

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரை பொறுத்தவரையில், 5 கி.மீ.,க்கு ஒரு இடத்தில், மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும், அனைத்து பகுதிகளிலும் உள்ள மற்ற போக்குவரத்துகளுடன், பேருந்துகள் இணைப்பில் இருக்கும். முக்கியமாக, வழிகாட்டும் அமைப்புகள் ஆங்காங்கே இருக்கும். சிங்கப்பூரின் உலகத்தர கட்டுமானத்திற்கு, அந்த நாட்டின் பிரதமராக இருந்த லீ குவானின் தொலைநோக்கு பார்வையே காரணம்.

கடந்த, 1965ல் மலேசியாவில் இருந்து, சிங்கப்பூர் பிரிந்தபோது, குடிநீர் தேவைக்கு, மலேசியாவை நம்பியே இருந்தது. அதனால், மலேசியாவுக்கு ஒவ்வாத எந்த செயலிலும் சிங்கப்பூர் ஈடுபட்டால், அடுத்த 2 மணி நேரத்தில், குடிநீரை நிறுத்தி விடுவதாக, அந்த நாட்டின் பிரதமர் கூறினாராம். அதை மனதில் கொண்ட பிரதமர் லீ குவான், சிங்கப்பூரில் பெய்யும் மழைநீரை முழுமையாக சேமித்து பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை முதலில் மேம்படுத்த திட்டமிட்டு, 300க்கும் மேற்பட்ட, பெரிய நீர்த்தேக்கங்களையும், ஆங்காங்கே தேவையான நீர்நிலைகளையும் அமைக்க திட்டம் தீட்டினார். விளைவு, கழிப்பறைகளில் கூட குடிக்கக் கூடிய தரத்திலான நீரை, சிங்கப்பூர் அரசு, மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.அதற்காக, லீ குவான் முதலில் உருவாக்கியது, பி.யூ.பி., என்ற பொது பயனீட்டு குழுமம். இது, உயிர்ச்சூழல், நீர்நிலைகளின் பாதுகாப்பையே கருத்தில் கொண்டது. நகரின் வளர்ச்சி சார்ந்த எந்த கட்டுமானத்திற்கும், இந்த துறை தான் ஒப்புதல் வழங்க வேண்டும். குழுமத்தின் இறுதி முடிவுகளை, பிரதமரே சரிபார்த்தார். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு செலவாகும் தண்ணீர் அளவை 2003ல் 165 லிட்டரிலிருந்ததை தற்போது 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு திட்டமாக 140க்கு குறைக்க உள்ளனர்.

நிபுணத்துவம் தேவை :

சென்னையை பொறுத்தவரை, உலகத்தரமான நகரமாக்கும் நோக்கில், அனுபவம் மிக்க murugeshan [2]சர்வதேச நகரமைப்பு வடிவமைப்பு நிபுணர்களை அமர்த்துவது மிகவும் கட்டாயம். சென்னையின் நீர்நிலைகளே சென்னையின் சொத்து. அதன் அடிப்படையில் சென்னையின் நகரமைப்பு பெருந்திட்டத்தினை, உடனடியாக சர்வதேச நிபுணத்துவம் மூலம் மறு ஆய்வு செய்ய வேண்டும். சிறிய, தெருச்சாலைகளில் கூட, சாலையோர வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். நீர்நிலைகளில் கட்டடமோ, சாலைகளோ கட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.தற்போதைய சென்னையில், பல இடங்களில், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லை. சென்னையின் வெளிவட்ட சாலையின் ஓரங்களில், தற்போது, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தால் தான், அதனைச் சுற்றி உருவாகும் கட்டுமானங்கள், எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்.

அடிப்படை வசதிகள் :

ஒரு நகர்ப்புறப் பகுதிக்கு ஒப்புதல் வழங்கும் முன், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் செல்லும் சாலைகளை, குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உயர்த்தக் கூடாது. அப்பேது தான், குடியிருப்புகளை சூழும் மழைநீர், வடியும். இந்தியாவில், புனே நகரில் மகார் பாட்டாவில், 200 ஏக்கர் பரப்பளவில் எல்லா வசதிகளுடன் கூடிய மாதிரி நகரம், தனியார் முயற்சியில், பொதுமக்களின் பரஸ்பர பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது. இவற்றை தமிழக அரசும் கவனத்தில் கொண்டு, அனைத்து நீர்நிலைகளையும் கோடைக்காலத்தில் துார்வாரி, மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமித்து, வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றினால், சென்னை உலகத்தரத்திற்கு உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.