بسم الله الرحمن الرحيم

"படிப்பினையூட்டும் ஒரு சம்பவம்"

Refer this Page to your friends

மனிதர்களில் சிலர் விபச்சாரம், மதுபானம் அருந்துதல் போன்ற பாவச் செயல்களைப் பார்த்துக் கொதிப்படைகின்றனர், கவலைகொள்கின்றனர் அதே நேரம் சமாதிகளை வழிபடக்கூடியவர்களை, அதை வலம் வரக்கூடியவர்களை, அதை தொட்டு முத்தமிடக் கூடியவர்களைப் பார்க்கும் போது எந்தவித பிரதிபலிப்பும், ஆத்திர உணர்வும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

விபச்சாரம் மதுபானம் போன்றவைகள் பெரும்பாவம் என்பதில் எந்தச் சந்தேகமும் கருத்து வேறுபாடும் இல்லை, அதே நேரம் அவை அவற்றைப் புரிந்தவனை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் அளவு கொடியவைகள் அல்ல. ஒரு மனிதன் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்க வழிபாடுகள் செலுத்துவது ஷிர்காகும். அதே நிலையில் அவன் மரணித்து விட்டால் அவன் காபிராக மரணிக்கிறான்.

அதனால்தான் நல்வழி சென்ற அறிஞர்கள் ஓரிரைக்கொள்கையை, மார்க்கத்தின் அடிப்படை வியங்களைக் கற்றுக்கொள்வதை தலையாய கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். அறிஞர் ஒருவர் ஓரிறைக் கொள்கையின் அவசியம் சம்பந்தமாக ஒரு நூலை எழுதியிருந்தார். அதை மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்த அவர், அதில் வரும் சட்ட திட்டங்களை மாணவர்களுக்கு பல முறை விளக்கினார்.

ஒரு நாள் மாணவர்கள் அவரைப் பார்த்து ஆசிரியரே தினமும் தவ்ஹீத் எனும் இப்பாடத்தை மாத்திரமே கற்றுத்தருகின்றீகள்; எனவே இதனை விடுத்து கதைகள் வரலாறு போன்ற வேறு பாடங்களயும் நீங்கள்; கற்றுத்தர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவ்வாசிரியர் இன்ஷா அல்லாஹ் அது பற்றி யோசிப்போம் என சொன்னார்.


அடுத்த நாள் கடும் கவலையோடு எதைப்பற்றியோ கடுமையாக யோசித்த வண்ணம் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். மாணவர்களிடம் வந்த போது அவர்கள் கவலைக்குரிய காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர் பக்கத்து ஊரில் புது வீட்டில் குடியேறிய ஒருவன் ஜின்களின் அட்டகாசங்களுக்குப் பயந்து, அவைகளின் நெருக்கத்தை பெறும் நோக்கில் அவைகளுக்காக தனது வீட்டு வாயிலின் முன்னால் ஒரு கோழியை ஜின்களுக்காக அறுத்துப் பலியிட்டதாக அறிந்தேன். நடந்த இந்நிகழ்ச்சியை உண்மையா? என்பதை உறுதிப்படுத்த நான் ஆள் அனுப்பியுள்ளேன். என்று கவலை ததும்பக் கூறி முடித்தார்.

இந்நிகழ்ச்சியைச் சொன்ன போது மாணவர்களிடம் எவ்வித மாற்றமுமோ, இதுபற்றி எதுவித கவலையோ ஏற்படவில்லை. அந்த மனிதனின் நேர்வழிக்காக பிரார்த்தித்த போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். அம்மாணவர்கள் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையென்பதை ஆசிரியர் இதன்மூலம் யூகித்துக் கொண்டார்.
மறுநாள் அவர் அம்மாணவர்களிடம் வந்து நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியை உறுதி செய்தோம். நேற்று எனக்குக் கிடைத்த தகவலுக்கு மாற்றமாகவே அந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த மனிதன் ஜின்னின் நெருக்கத்தைப் பெறுவதற்காக எந்தக் கோழியையும் அறுக்கவில்லை, மாறாக அவன் தனது தாயுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளான் என்று கூறினார். இதைக்கேட்ட அம்மாணவர்கள் பதபதைத்தர்கள், கூக்குரலிட்டார்கள், கண்டனக் கணைகளை ஏவி விட்டார்கள். அவனைத் திட்டினார்கள், அவனுக்கு உபதேசிக்க வேண்டும் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்களது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தினர்.

இவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர், 'உங்களது செயலைப்பார்த்து நான் வியப்படைகிறேன்! அவன் ஷிர்க் செய்து விட்டான் அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு அறுத்துப் பலியிட்டு விட்டான் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத ஒருவனுக்கு செலுத்திவிட்டான் என்று நான் சொன்ன போது அதைக்கேட்டுவிட்டு கண்டும் காணாதது போல் இருந்த நீங்கள், இப்பொழுது அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடாத ஒரு பெரும் பாவத்தைச் செய்து விட்டான் என்று கூறியதைக் கேட்டதும் கொதிப்படைகின்றீர்கள். பாவம் என்ற வகையில் இரண்டுமே குற்றச் செயல்களாக இருப்பினும் விபச்சாரத்தை விட ஷிர்க்-இணை வைத்தலே மிகக் கொடிய - அல்லாஹ் மன்னிக்காத பாவமாகும் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட மாணவர்கள் மறு பேச்சுப் பேச முடியாது அமைதியாக இருந்தனர். அறிஞர் மாணவர்களில் ஒருவருக்கு சைகை செய்து எழுந்து சென்று தௌஹீத் பாடக் கிதாபை எடுத்து வாருங்கள். புதிதாக மீண்டும் ஆரம்பத்திலிருந்து தவ்ஹீத் பாடம் படிப்போம் என்றார். பாவங்களில் மிகக் கொடியது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தலாகும். அல்லாஹ் அதை ஒரு போதும் மன்னிக்கமாட்டான்.


அல்லாஹ் கூறுகிறான்: 'இணைவைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்' (லுக்மான் 31:13)

இணைவைப்பாளர்கள் மீது சுவர்க்கம் ஹராமாகும். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் யாரும்இல்லை'. (அல்மாயிதா 5:72).

எவன் ஷிர்க் எனும் கொடிய பாவத்தில் வீழ்ந்து விடுகிறானோ அவனது அனைத்து நல்லறங்களும் (தொழுகை, நோன்பு, தான தர்மங்கள், ஹஜ், ஜிஹாத்) பாழாகி விடும்.
அல்லாஹ் தனது திருமறையில், '(நபியே) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய நற்செயல் (கள் யாவும்) அழிந்து விடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களில் ஆகிவிடுவீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது' (ஸுமர் 39: 65)


ஷிர்க்கின் பல வடிவங்கள்
ஷிர்க் ஒருவனை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும், அவன் பாவ மன்னிப்பு வேண்டாமல் மரணித்து விடுவானானால் நிரந்தர நரகவாதியாக மாறிவிடுவான். அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது, நெருக்கத்தைப் பெறுவதற்காக அல்லாஹ் அல்லாத கப்றுகளுக்காக, ஜின்களுக்காக, ஷைத்தான்களுக்காக அறுத்துப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது, அல்லது மரணித்தோருக்கு அஞ்சி அல்லது ஜின்களின், ஷைத்தான்களின் தீங்குகளுக்கு அஞ்சி அவர்கள் நோய் நொடிகளையோ சோதனைகளையோ ஏற்படுத்துவார்கள் எனப் பயந்து அவைகளுக்காக இவ்வாறான செயல்களைச் செய்வது பெரும் ஷிர்க்காகும்.

அல்லாஹ் மாத்திரம் அனைத்தையும் செய்ய ஆற்றல் பெற்றிருக்க அவனல்லாதவர்களிடம் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், துன்பங்களை போக்குவதற்கும் ஆதரவு வைப்பது பெரும் ஷிர்க்காகும்.


கப்றுகளைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது மறுமையை சிந்தனையை ஏற்படுத்திக்கொள்வதற்கும், மரித்தோரின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுவதற்குமாகும். 'கப்றுகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது மறுமையின் சிந்தனையை உங்களுக்கு ஏற்படுத்தும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது ஆண்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டதாகும். பெண்கள் கப்றுகளை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கப்றுகளை தரிசிக்கும் பெண்களைச் சபித்துள்ளார்கள், அவர்கள் அவைகளை தரிசிப்பதன் மூலம் அவர்களுக்கோ, அவர்கள் மூலமாகப் பிறருக்கோ பிரச்சனைகளும் மார்க்கவிரோத விடயங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.


கப்றுகளைத் தரிசிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அங்குள்ளவர்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கேயன்றி, அவர்களிடம் உதவி தேடுவதற்கோ, அல்லது அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதற்கோ, அல்லது அவர்களைக்கொண்டு அருள் பெறுவதற்கோ, அவர்களிடம் தேவைகளைக் கேட்பதற்கோ, அவர்களுக்காக நேர்ச்சைகளை நிறைவேற்றுவதற்கோ அல்ல. அவைகள் யாவுமே கொடிய பெரும் ஷிர்க்காகும். அந்த கப்றுகள் நபிமார்களுடையதாக அல்லது நல்லடியார்களுடையதாக, அல்லது வலிமார்களுடையதாகக் கூட இருக்கலாம். அவர்களில் யாரை அழைத்தாலும் அவர்கள் அனைவரும் மனிதர்களே! எந்த ஒரு தீங்கோ நன்மையோ இழைப்பதற்கு அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள் (சக்தி பெற்றவர்கள்) அல்லர்.


அல்லாஹ் தனது படைப்புக்களில் மிக விருப்பமான முஹம்மது நபியைப் பார்த்து இவ்வாறு சொல்கிறான், '(நபியே) நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதைத் தவிர எவ்வித நன்மை(யைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன்'.(அஃராப் 7:188)


மார்க்க அறிவற்ற சில மூடர்கள் நபியுடைய கப்ரின் முன்னால், அல்லது ஹுஸைன் (ரலி) யின் கப்ரின் முன்னால், அல்லது ஃபதவியின், ஜைலானியின், இவர்கள் அல்லாத வேறு நல்லடியார்களுடைய கப்ரின் முன்னால் பிரார்த்திப்பது அவர்களிடம் உதவி தேடுவது அனைத்தும் அந்த பெரும் பாவத்திலேயே சேரும்.


கப்றுகளைத் தரிசித்து அவைகளுக்கு முன்னால் தொழுவது, குர்ஆன் ஓதுவது அனைத்துமே வழிகெட்ட பித்அத்துக்களாகும். கப்றுகளைத் தரிசித்தல் அனுமதிக்கப் பட்டதே மறுமை சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அங்கு அடக்கப்ட்டுள்ளோரின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்குமாகும். அந்த கப்றுகளில் இருப்பது வெறும் உக்கிப்போன எழும்புக் கூடுகளே என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தும்கூட அவைகளை நாடிச்செல்வது பெரும் வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது. அவர்களுக்கே எந்த ஒன்றும் செய்ய சக்தி பெறாத நிலையில் அவர்களிடம் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு கோருவதும் துன்பங்களை அகற்றுமாறு கோருவதும் விந்தையிலும் விந்தையாகும்.

பெரும்பான்மையான தர்ஹாக்கள், கப்றுகளைப் பொறுத்த வரைக்கும் அவற்றைப் பரிபாலிக்கும் போர்வையில் அவைகளுக்கு பாமரர்கள் கொண்டுவந்து குவிக்கும் பணத்தையும் ஏனைய நேர்ச்சைப் பொருட்களையும் விழுங்கி கபளீகரம் செய்து கொள்வதற்காகவே தர்ம கர்த்தாக்கள் எனும் பெயரில் பலர் செயல்படுவது அதிகம் பேருக்குத் தெரியாத உண்மையாகும். இவர்களே வருமானம் தேடி தம் பைகளை நிறைத்துக் கொள்ளும் சுயநல நோக்குடன் அக்கப்றுகளில் அடங்கப் பெற்றிருக்கும் அவ்லியாக்களைப் புனிதப்படுத்துவது போல் பாசாங்கு செய்து போலி பயபக்தியை வெளிப்படுத்தி பாமர மக்களுக்கு அவ்லியாக்கள் பேரில் பொய்யான கதைகளையும், கப்ஸாக்களையும் கூறி, அவர்களின் கப்றுகளிலிருந்து பல கராமத்துகள்(அதிசயங்கள்) நிகழ்ந்ததாகக் கபட நாடகமாடி அப்பாவிப் பொதுமக்களை வழிகெடுத்து அவர்களை ஷிர்கின் பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

உண்மை நிலை

தேங்காயை வழிபடும் கூட்டம்

Refer this Page to your friends