- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1

முன்னுரை

புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தா கட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர் கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக . ஆமீன்

தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக் கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுய ரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக் குனர்களுமான சூபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும் .

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில்; ‘ தரீக்காக்கள்,சூபித்துவம், சூபிகள் ‘ போன்ற சொற்பிரயோகங்கள் .அனைவருக்கும் மத்தியில் பரிச்சயமானதொன்றாகும் . ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு இவர்கள் மத்தியில் புரிந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போதே ஆச்சரியம் கலந்த வேதனையை எமக்கு அது அளிக்கின்றது . ஆமாம் …. சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் பண்டிதர் முதற்கொண்டு பாமரர் வரைக்கும் ‘சூபிகள் எனப்படுவோர் இறைநேசச் செல்வர்கள் . தொழுகை, நோன்பு, திக்ர், போன்ற இன்ன பல வணக்கங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ., இதனால் சாதாரண மக்களை விட ஒருபடி மேலேசென்று அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும், முழுக்க முழுக்க இஸ்லாமிய அனுஷட்டானங்களைப் பின்பற்றி நடப்பவர்கள் இவர்கள் தான்’ என்பது போன்ற ஒரு போலியான கருத்துக் கண்ணோட்டமும் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது .

எனவே சூபித்துவம் என்றால் என்ன? இது எங்கிருந்து தோற்றம் பெற்றது? இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.

அதே போன்று இன்று நவீன சூபித்துவமாக விஷபரூபமெடுத்து இதே சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளின் நிழலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும் . இது இன்று பாமர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்று தீன் வழி நடக்கும் ஒரே அமைப்பு என்றும், இதிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் என்றும் தப்புக்கணக்குப் போட்டுப்; பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அமைப்பாகும் . இவ்வமைப்பின் அடிப்படை விதிகள் எப்படி சூபித்துவக் கருத்துக்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், இதன் ஆரம்ப ஸ்தாபகர்கள்,சமகால முக்கியஸ்த்தர்களுக்கு சூபித்துவத்துடன் இருக்கும் தொடர்பு பற்றியும் முடிந்தளவு சுட்டிக் காட்டுவதும் இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.

அத்துடன் உலகிலுள்ள முக்கிய மார்க்க அறிஞர்கள், முப்தீகள் போன்றோர்; இவ்வமைப்புப் பற்றி வெளியிட்டுள்ள பத்வாக்கள் சிலவற்றையும் எடுத்துக் காட்டுவதுடன் நபியவர்களுடைய தூய ஸூன்னாவுக்கு எந்ததெந்த வகையில் இவ்வியக்கத்தின் செயல்முறைகள் பல முறண்பட்டு நிற்கின்றன என்றும் முடிந்தளவு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் .

எனவே அல்லாஹ் எம்மனைவருக்கும் இஸ்லாத்தை அல்குர்ஆனின், தூய ஸூன்னாவின் ஒளியில் நபித் தோழர்களும், தாபியீன்களும் விளங்கியது போல் அதே வழியில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் வெற்றிபெற்றிட அருள் பாலிப்பானாக ஆமீன்..

உள்ளே செல்லுமுன்
சூபித்துவத் தரீக்காக்கள் பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும் . காரணம் காலாதி காலாமாக இவர்களைப்பற்றிய உண்மை அறிமுகம் உலமாக்ளாலோ தமிழுலக எழுத்தார்களாலோ அதன் தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.
எனவே இதுபற்றிய உண்மைகளை அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஒளியில்; தோலுரித்துக் காட்டுவதே இச்சிறு நூலின் நோக்கமாகும் . இதன் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் விளங்க உதவுவதுடன் இந்தத் தரீக்காக்களுக்கும் , சூபிகளுக்கும் – தூய இஸ்லாமியக் கோற்பாடுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை எடுத்துக் காட்டுவதும் என் நோக்கமாகும்.

எனவே முடிந்தளவு ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் இதைத் தொகுத்துள்ளேன். இருந்தபோதிலும் மனிதன் தவறிழைப்பவன் எனும் வகையில் எனக்கும் பல தவறுகள் ஏற்படலாம். அவ்வாறு உங்களுக்குப் புலப்படுமிடத்து அதனை என் கவனத்துக்குக் கொண்டு வருமாறு வாசக சகோதரர்களான உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்கள் சகோதரன்…
ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் .
சவூதி அரேபியா – அல்ஜூபைல்

இரங்கலுரை

இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் எம் .யூஸூப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே தஃவாப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டு பல்வேறு இடங்களுக்கெல்லாம் நீண்ட வக்துக்களில் சென்று, பல தப்லீக் பெரியார்களைச் சந்தித்து அளவலாவிய அனுபவங்கள் அவர்களுக்கு நிறையவே உண்டு.

தப்லீக் அமைப்பிலுள்ள பல விடயங்கள் குர்ஆன் ஹதீஸூக்கு முரணாவதாக அவரது மனம் உறுத்தவே பெரியார்களிடம் அது பற்றிக் கேட்க அவர்கள் சொன்ன பதில் திருப்தியளிக்காததால் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் தஃவத்துச் செய்யும் அமைப்புகளோடு இணைந்து கொண்டார் .

அல்ஜூபைல் தஃவா நிலையத்தில் நீண்ட காலமாகவே தன்னார்வத் தொண்டராக தஃவாப் பணியில் ஈடுபட்டு வந்த இவர் தாயிகளுக்கு ஒரு முன்மாதிரியானவராக பல அருங்குணங்கள் மிக்கவராயிருந்தார். அவர் தான் மேற்படி தலைப்பில் ஒரு நூல் எழுதும் எண்ணம் இருப்பதாக நான் சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தி இப்படியான ஒரு நூல் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அதற்கான துணை நூல்கள் பலவற்றையும் தேடியெடுத்துத் தந்து உதவியவர். பின்னர் அவரே இந்த நூல் முற்றுப் பெற்றதும் அதனைப் பெற்று சரிபார்த்தும் தந்தார் . அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தொன்றில் திடீர் மரணமடைந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி அஇன்னா இலய்ஹி ராஜிஊன் . அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸைக் கொடுப்பானாக . ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

தொடரும்

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2 [1]