- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நேர்முகத் தேர்வு வியூகங்கள்….

[1]நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை. இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்,

எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.பொலிவான தோற்றம் நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

நல்ல ஆடை Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஆயத்தமாதல் நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்! இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.

கவனமாக பேசுங்கள் நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

நம்பிக்கையுடன் பேசுங்கள் பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.

நிதானமாக பேசுங்கள் படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.

விவாதம் செய்யாதீர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஆர்வமாக செயல்படுங்கள் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

நன்றி: கவிதாமிலன் வலைப்பூக்கள்