- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஐந்து கிராம் உப்பு!

salt [1]உணவுக்கு சுவையூட்டுவதற்காக நாம் சேர்க்கின்ற உப்பு சோடியம், குளோரைடு என்ற இரு வேதிகளின் சேர்மமாகும். உடலுக்குத் தேவையான ஓரு சத்து என்றாலும் உப்பு அதிகமாகின்ற போது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. நமது இரத்தத்திலும், உயிர்த் திரவங்களிலும் காணப்படும் இந்த உப்புச் சத்து உடலில் சரியானபடி இருக்கின்ற பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. உடலிலுள்ள உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகின்றன. உப்பில் 40 சதவிகிதம் சோடியம் என்னும் கனிமப்பொருள் இருக்கிறது. அளவில் மிகுந்த சோடியம் இதயத்திற்கும் சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

குறிப்பாகச் சொல்லப்போனால் நாம் உண்ணுகின்ற உணவுப்பொருள்களில் இயற்கையாக இருக்கின்ற உப்பே நம் தேவைக்குப் போதுமானது. இருந்த போதிலும் நாவின் சுவை கருதி எல்லாவற்றிலும் மேலதிகமாக உப்பை நாம் சேர்த்துக் கொள்கிறோம். இது தவிர டப்பாக்களிலும், குப்பிகளிலும் அடைக்கப்பட்டு ஆயத்த உணவு, விரைவு உணவு என்று விற்பனைக்கு வருகின்ற உணவுகளில் தேவைக்கு அதிகமாகவே உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் கவலை தரக்கூடிய செய்தி என்னவென்றால் சராசரி தென்னிந்தியர் ஒருவர் தமது ஒவ்வொரு நாள் உணவிலும் தமது தேவையைப் போல் 4 மடங்கு (சுமார் 20 கிராம்) உப்பு சேர்த்துக் கொள்கிறார் என்பது தான்.

இயற்கையான உணவுகளிலிருந்து நாம் பெறும் உப்பைத் தவிர தனியாகச் சுவைக்கு என்று உப்பு எதுவும் சேர்க்க வேண்டிய தேவையே இல்லை. செயற்கை உப்பை நமது உணவிலிருந்து நீக்கி விடுவதால் கேடு எதுவும் இல்லை. உலகின் பல பகுதிகளில் உப்பின்றிச் சாப்பிடும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் உடல் நலம் குறைந்தவர்களாக இல்லை. மாறாக இவர்கள் நீண்ட நெடுங்காலம் உயிர் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள ஜப்பான் நாட்டில் மிகப் பெரும்பான்மையோர் நாளன்றுக்கு 5 கிராமுக்கும் (ஒரு தேக்கரண்டி) குறைவான உப்பையே உட்கொள்கின்றனர். ஜப்பானியர் நீண்ட நாள் வாழ்வதற்கு இதுவே காரணம் என்று ஆய்வர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நாளன்றிற்கு 3 முதல் 4 கிராம் உப்பு ஒருவருக்குப் போதுமானது என்று National Academy of Science கூறுகிறது. உடலில் உப்பு அதிகரிக்கும் போது உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் தோன்றுகின்றன. கால்களும் கைகளும் வீங்கி விடுகின்றன. உப்பு நம் உடலில் இருப்பதற்காகத் தன்னோடு தண்ணீரையும் சேர்த்து வைத்துக் கொள்கிறது. இது உடல் எடையைக் கூட்டுகின்றது.

உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு கிராம் உப்புடனும் 70 கிராம் தண்ணீரும் சேர்ந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே எடை குறைக்க விரும்புவோருக்கு உப்பைக் குறைக்கும் படி ஆலோசனை கூறுகின்றனர்.

பிற நாடுகளில் குறைவான உப்பு உண்டு அதிக நாள் வாழ்கின்ற மக்களைக் கண்ட பிறகாகிலும் நாம் உப்பைக் குறைத்து நெடுநாள் வாழ்வதற்கு முயலுதல் வேண்டும். “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியைக் குப்பையில் போடுங்கள். “உடலுக்கேற்றது உப்பில்லாப் பண்டம்” என்ற புதுமொழியை ஏற்படுத்துங்கள். உணவில் உப்பைக் குறைப்பது எளிது. சிறிது நாட்கள் பழகினால் போதும். உங்கள் நாக்கின் சுவை மொட்டுகள் அதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு விடும். பின்னர் சிறிது உப்புக் கூடினாலும் உங்களால் உண்ண முடியாது. உப்பைக் குறைத்தால் உங்கள் இதயமும் சிறுநீரகமும் வலுப்படும். சிறுநீரகங்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்கும். இரத்த அழுத்தம் குறையும். உடல் எடை குறையும். நீர் வேட்கை (தாகம்) குறையும். வியர்வையும் குறையும். எவ்வளவு நன்மைகள் பார்த்தீர்களா?

சிலவகைப் பச்சைக்காய் கறிகள் உண்ணும் போது உப்பிற்குப் பதிலாகக் கீழ்க்கண்டவற்றைத் தூவி உண்டு பாருங்கள். சுவையாக இருக்கும்.

கேரட் – புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள்.

தக்காளி – வெங்காயம், மிளகுத் தூள்.

பீன்ஸ் – புதினா – ஜாதிக்காய் – வெங்காயம், எலுமிச்சை சாறு.

உருளைக்கிழங்கு (ஆவியில் அவித்தது) – மிளகுத் தூள்

முட்டைக்கோஸ் – எலுமிச்சை சாறு – புதினா

பீட்ரூட் (ஆவியில் அவித்தது) – எலுமிச்சை சாறு – மிளகுத் தூள்

தேங்காய், வெள்ளரிக்காய், பேரிக்காய், அவல், வறுகடலை, வேர்க்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றை விரும்பி உண்ணலாம். புளிக்காத தயிரில் வெள்ளரிக்காய் துருவல், தேங்காய் துருவல், கிஸ்மிஸ் பழம் சேர்த்துச் சாப்பிடலாம். முள்ளங்கி, வெங்காயத் தாள், வெங்காயம் போன்றவற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து மிளகுப் பொடி தூவி உண்ணலாம்.

வாழைத் தண்டு, முளைக்கீரை, சௌசௌ, நூல் கோல், பூசணி, சுரைக்காய் போன்றவற்றை ஆவியில் வைத்து லேசாக அவித்துப் பின்பு எலுமிச்சை சாறு பிழிந்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.

நன்றி; உணவு நலம்