- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தங்கம் ஒரு சிறந்த மூலதனம்!

உலகத்தின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் சர்வ வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர் என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான காரணம். உலகம் இன்னொரு நாட்டின்

நாணயத்தை அல்லது ஒரு பொருளை (உதாரணம்: தங்கம்) பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், இந்த நிலை உடனே மாறிவிடும்.

அடிக்கடி தங்களது டாலரின் மதிப்பை ஏற்ற இறக்கத்துக்கு ஆட்படுத்தி உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரச் சரிவுக்கு வழியமைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, முதன்முதலாக எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பியவர் .

மலேசியாவின் முன்னாள் முதல்வர் டாக்டர் மஹாதீர் முஹம்மது அவர்கள்! அவர் அமெரிக்க டாலருக்கு நாங்கள் இவ்வளவுதான் விலை தருவோம் என்று தைரியமாக விலை வைத்தார்; அதனை நீண்ட காலத்துக்குத் தம் நாட்டில் நிலைப்படுத்தியும் காட்டினார். இருந்தும் உலகநாடுகள் அவரது வழியைப் பின்பற்ற முன்வரவில்லை. இருந்தாலும் இப்போது சில நாடுகளுக்கு தைரியம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

‘தங்கத்தையே ஏன் வணிக அடிப்படைக்கான பரிவர்த்தனைப் பொருளாக்கக் கூடாது?’ என்று, அன்று மஹாதீர் கேட்ட அந்தக் கேள்வி இப்போது ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது நல்லதோர் அறிகுறி !

காகிதத்தை விட தங்கம் வலியது என்பதை உலகலாவிய அளவில் குறிப்பாக ஆசிய மக்கள் -அதிலும் இந்தியப் பொதுமக்கள் இந்த நுட்பத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விசயம்!

தங்கத்தின் மீது இந்தியர்களுக்கிருந்த -இருக்கும் மோகம் அதனை ஓரளவுக்கு வாங்கிச் சேமித்தவர்கள் இன்று  தலைநிமிர்ந்து நிற்பது நியாயமானதுதான் என்பதையும், விலை பல மடங்கு உயர்ந்துவிட்ட பிறகும் நகைக் கடைகளை முற்றுகையிடும் மக்களின் ஆர்வத்திலிருந்தும் நமக்கு நன்கு புரிகிறது.

ஆடம்பரப் பொருட்கள் வாங்கிச் சேமிப்பதை விட நகைகள் வாங்கிச் சேமிப்பது தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்கும் நல்ல -ஆரோக்கியமான உபாயம் என்பதை நடப்பு நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ஆனால், விதம்விதமான நகைகள் வாங்குவதும் அதனை ‘டிஸைன் மாற்றி அழகு படுத்துகிறோம் பேர்வழி’ என்று ‘சேதாரப் படுத்துவதும்; வெளியே செல்லும் போதெல்லாம் பூட்டி ரதம் போல உலா வந்து திருடர்களுக்கு அழைப்பு விடுப்பதும் சமுதாயத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்பதே நமது ஆவல்!

நன்றி: நர்கிஸ் தலையங்கம் – டிசம்பர் – 2009