- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பாம்புகள் பல விதம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பி [1]யில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)

ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும்.

[2]மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும்.

[3]அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

[4]நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் [5]மட்டுமே இருக்கும்.

மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும்.

மேலும் ஒரு செய்தி:

[6]மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும்.

நன்றி:  அ. நம்பி – நனவுகள்