- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.

[1]சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய காலம் போய்.. எங்கும் சாதிகள் எனும் தீ பரவிபோய்… சாதி பேய்பிடித்தாடுவது தான் கொடுமை..
தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.
குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில,எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட,எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி – கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.
அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.
இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்’ என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும்,குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
நன்றி: தினமலர் [2]