- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

எண்ணம் – குணநலன் – சூழ்நிலை!

நல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ ஒரு குறிப்பிட்ட எண்ணம் தொடர்ந்து நீடிக்கும் போது, அந்த எண்ணங்கள் அம்மனிதனின் குணநலன்களை பாதிக்காமல், ஒரு விளைவை ஏற்படுத்தாமல் விடாது என்று ´ஜேம்ஸ் ஆலன்´ சொல்கிறார்.

ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் சூழலும் நம் கையில் தான் இருக்கிறது என்கிறார்.

´எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம்´ எனறு மனிதர்கள் நினைக்கிறார்கள், கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் எண்ணங்களை மறைக்க முடியாது. ஏனெனில், எண்ணம் முதலில் பழக்கமாக மாறுகிறது. பின் பழக்கம் சூழ்நிலையாக உருவாகிறது என்கிறார்.

இவ்வுண்மைமையை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சோதித்துப் பார்க்க முடியும். நம்மைப்பற்றி நாமே ஆழ்ந்து சிந்தித்து சுய சோதனை செய்து கொள்வதன் மூலம் இந்த உண்மையைக் கண்டு பிடிக்ககலாம். அதற்கான உதாரணங்களையும் ஜேம்ஸ்ஆலன் தருகிறார்.

தாழ்ந்த எண்ணங்கள் – இச்சைகளாகவும், காம உணர்வுகளாகவும், குடிபோதை போன்ற பழக்கங்களாகவும் மாறுகின்றன. பின் அந்தப் பழக்கங்கள் அழிவு, நோய் என்ற சூழ்நிலைகளாக மாறுகின்றன.

துய்மையற்ற ஒவ்வொரு எண்ணமும், குழப்பம் தளர்ச்சி என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலைகளாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலையாக மாறி நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

பயம், சந்தேகம், முடிவெடுப்பதில் தயக்கம் என்ற எண்ணங்கள் பலகீனமான ஆண்மையற்ற உறுதி குலைந்த பழக்கங்களை உண்டாகுகின்றன. பின் அதுவே தோல்வி, வறுமை, அடிமையாக பிறரைச் சார்ந்திருத்தல் என்ற சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.

சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான பழக்க வழக்கங்களையும், நாணயமற்ற குணங்களையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே பிச்சை எடுக்கும் நிலையையும், எதிலும் தோற்றுப் போகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகின்றது.

பிறரைப் பழிக்கும் எண்ணங்ககளும், வெறுப்பும் பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை உண்டாக்குகிறது. வன்முறையில் ஈடுபடும் குணத்தை உருவாக்குகிறது. மேற்கூறிய இரண்டு பழக்கங்களளும், நமக்கு ஊறு விளைவிக்கிற, காயப்படுத்துகிற – சூழ்நிலையையும் நாம் அபாண்டமாகத் தண்டிக்கப்படுகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகிறது.

சுயநலமிக்க எண்ணங்கள் தன்னை முன் நிறுத்துகின்ற பழக்கத்தையும், சுயலாபம் தேடும் குணத்தையும் ஏற்படுத்துகிறது. பின்னால் அதுவே சங்கடம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கு மாறாக அழகான எண்ணங்கள் அன்பு, கருணை என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின்னால் அது சுமுகமான சூழ்நிலையையும், புத்துணர்ச்சியூட்டும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது.

தூய்மை மிக்க எண்ணங்கள் சுயகட்டுப்பாடு, அடக்கம் என்ற பழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின் அதுவே அமைதியும், சாந்தமும் நிறைந்த சூழ்நிலையை உண்டாக்குகின்றன.

தன் காலிலே நிற்க விரும்பும் எண்ணம், துணிவு, முடிவெடுக்கும் உறுதி போன்ற எண்ணங்கள் ஆண்மை நிறைந்த பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுகிறது. பின்னால் வளமான வாழ்வு, வெற்றி, சுதந்திரம் என்ற சூழ்நிலைகளை அமைக்கிறது.

துடிப்பு நிறைந்த எண்ணங்கள், தூய்மையான பழக்கங்களையும், உழைக்கும் மனோபாவத்தையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே இனிமையான சூழ்நிலையாக மாறுகின்றது.

சாந்தமான எண்ணங்கள், மன்னிக்கும் எண்ணங்கள் அமைதியான பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின்னால் அதுவே ஒரு பாதுகாப்புத் தரும் சூழ்நிலையை உண்டாக்குகிறது.

அன்பான எண்ணங்கள், சுயநலமற்ற எண்ணங்கள், மற்றவருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் குணத்தை – பழக்கத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக நிரந்தரமான வளம் நிறைந்த வாழ்வும் உண்மையான செல்வமும் ஏற்படுகிறது.

மேற்கோள் காட்டப்பட்ட குணநலன்கள் குறித்து மனவியல் ஆய்வாளர்கள் அதிசயிக்கிறார்கள். ஜேம்ஸ் ஆலனின் தத்துங்கள் அறிவியல்படி 100/100 உண்மை என்கிறார்கள். ஆம், “இப்பிரபஞ்சம் இயங்குவது சில விதி முறைகளினால் தான். ஏனோ தானோ என்றல்ல. வாழ்வின் அடிப்படை நீதிதான் – அநீதி அல்ல. ஆத்மீக உலகை ஆளும் சக்தி நேர்மைதான் – ஊழலல்ல.”

நன்றி: தமிழச்சி