- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி

`முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதையே கொஞ்சம் மாற்றி, `கொசுவால் உருவாகும் மலேரியாவை, கொசுவின் எச்சிலை வைத்தே விரட்டியடிக்க முடியும்’ என்று சொல்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

[1]உலக அளவில், ஒவ்வொரு வருடமும் சுமார் 30 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சுமார் 10 லட்சம் பேர் மலேரியாவுக்கு பலியாகிறார்கள். மலேரியாவுக்கு தடுப்பூசி இல்லாதது இந்த மரணங்களுக்கு முக்கிய காரணமாகும்.

மலேரியா கொசுக்களால் பரவுகிறது. மலேரியா நோய்க்கிருமி உள்ள கொசு ஒருவரை கடிக்கும்போது, பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) என்னும் கிருமியை அது மனித உடலுக்குள் ரத்த ஓட்டத்தின் வழியாக செலுத்தி விடுகிறது. இந்த நோய்க்கிருமி கல்லீரலை அடைந்து, அங்கு தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்து உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவுகிறது. இதனால்தான் மலேரியா காய்ச்சல் உருவாகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் சனேரியா (Sanaria) என்னும் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் புதிய மலேரியா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கொஞ்சம் வித்தியாசமானது.

முதலில் மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை சோதனைக்கூடத்தில் வளர்த்தனர். பின்னர் கதிரியக்கம் மூலம் அந்த கொசுக்களுக்கு `சிகிச்சை’ அளிக்கப்பட்டது. இதனால் அந்த கொசுக்களின் மலேரியா நோய் பரப்பும் தன்மை முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். பின்னர் அந்த கொசுக்களின் எச்சில் சுரப்பிகளைக்கொண்டு தடுப்பூசி மருந்து தயாரித்தனர்.

இந்த மருந்தை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், சிலருக்கு மட்டுமே பலன் கிடைத்தது. இதனால் இன்னும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை உருவாக்கும் கூடுதல் ஆய்வுக்காக அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்தின் உதவியை நாடியது சனேரியா நிறுவனம்.

இதையடுத்து, தேசிய சுகாதார மைய ஆய்வாளர் ராபர்ட் சிடர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வுகள் நடைபெற்றன. அப்போது, சனேரியாவின் புதிய மலேரியா தடுப்பூசியை விலங்குகளின் உடலில் செலுத்தி பரிசோதித்தனர். இந்த ஆய்வின் இறுதியில் சுமார் 71 முதல் 100 சதவீத விலங்குகள் மலேரியாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்திருந்தன.

இதனால் இந்த புதிய தடுப்பூசி மலேரியாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மனிதர்களிலும் உருவாக்கும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் மனிதர்களிடம் இதுபற்றிய பரிசோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது புழக்கத்திலுள்ள பல மலேரியா தடுப்பூசிகள், மலேரியா கிருமியான பிளாஸ்மோடியத்தின் ஒரேயொரு புரதத்திலிருந்தே உருவாக்கப்படுபவை. இவ்வகை தடுப்பூசிகள் மலேரியாவுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை அளிப்பதில்லை. மாறாக, நோயின் தீவிரத்தை குறைக்க மட்டுமே உதவுகின்றன.

`இத்தகைய தடுப்பூசிகளுக்கு மத்தியில், ஒரு முழு மலேரியா கிருமியை மொத்தமாக பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய வகை மலேரியா தடுப்பூசிகள் மிகவும் தனித்தன்மை கொண்டவை’ என்று நம்பிக்கையூட்டு கிறார் ஆய்வாளர் ராபர்ட்.

நன்றி: உங்களுக்காக