- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், போராட்டம், அரசுக்கு சவால் என பெரிய அளவில் பேசி வரும் ஹஸாரே குழுவின  முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும்  காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே. இவ்வளவு பெரிய இடம் மற்றும் பங்களாவை வெறும்  ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே பதிவு செய்துள்ளார் அவர்!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு  குறித்து  சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம்  இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம்  செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு  விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

ஆனால் வழக்கம் போல இதை அரசின் பழிவாங்கல் என்றும் சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்  சாந்தி பூஷண். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வருவாய்த் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாந்தி பூஷண் மீது ஊழல் குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை அல்ல!

நன்றி- தட்ஸ்தமிழ்