- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

எம்.பி.ஏ. – மேலாண்மை (MBA – Management Studies) – 2

MBA படிப்பதில் உள்ள மற்ற துறைகளை இனி பாப்போம்! சென்ற தொடரை காண இங்கே கிளிக் செய்யவும் [1]

பொதுமக்கள் தொடர்புத்துறை

[2]நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றி பொதுமக்களிடம் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதே இப்பணியின் முதன்மை நோக்கம். இது நீண்டகால அல்லது குறுகியகால திட்டமாக இருக்கலாம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்பணியானது மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறது. சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை உண்டாக்கி, ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் தயாரிப்புகளை சந்தையில் நல்ல முறையில் விற்பனை செய்ய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்கிறார்.

ஆன்லைன் மார்க்கெடிங் தொழில்

ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவையை விளம்பரப்படுத்த, இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பலவித சாதனங்களைப் பயன்படுத்துவதாகும். மேலும் ஆன்லைன் விளம்பரங்ளும் இதில் அடங்கும். மேலும், மொபைல் போன்களில் குறுந்தகவல்கள்(எஸ்.எம்.எஸ்) அனுப்பி, மக்களை கவர்ந்திழுப்பதும் இதில் அடக்கம்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட்

வாடிக்கையாளர்கள் மத்தியில், பலவித நுட்பங்களையும், கவர்ச்சியான அம்சங்களையும் பயன்படுத்தி,நிறுவனம் மற்றும் அதன் தாயரிப்புகளை விளம்பரப்படுத்தி, அதன்மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி, நிறுவன வளர்ச்சிக்கு உதவும் முக்கியப் பணியாகும்.

மார்க்கெடிங் ஆராய்ச்சி

இன்றைய போட்டி உலகில் தரவுகளை சேகரித்து, அதன்மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து,சேவைகளை மேம்படுத்துதல் ஒவ்வொரு நிறுவத்திற்குமே அத்தியாவசியமான ஒன்று. மார்க்கெடிங் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூலமே, ஒரு நிறுவனம் தனது புதிய வியூகங்களை வகுக்க முடியும்.லாப-நோக்கமற்ற அமைப்புகள், சில்லறை வியாபார நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வணிக குழுக்கள், நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகளில் இத்துறை சார்ந்த பணிகள் கிடைக்கின்றன. மேலும், விளம்பர ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை மையங்களிலும், இத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு தேவைகள் உள்ளன.

இத்துறைக்கு வர விரும்பும் ஒருவர், போதுமான தகுதிகள் பெற்றிருப்பது அவசியம். ஏனெனில், அவர் தரும் விபரங்களை வைத்துதான் ஒரு நிறுவனத்தின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொதுவாக, மார்க்கெடிங் ஆராய்ச்சியாளர்கள், ஒரு உதவி ஆய்வாளராகத்தான் தங்களின் பணியை துவக்குகிறார்கள். இவர்கள், ஒரு அனுபவம் வாய்ந்த ஆய்வாளருடன் பணிபுரிகிறார்கள். உதவி ஆய்வாளர்கள், தங்களின் களப் பணியின்போது, கல்லூரியில் கற்றதையே விரிவாக கற்கிறார்கள். அனுபவம் பெற்ற பிறகு, முழு அளவிலான மார்க்கெடிங் ஆய்வாளராக ஒருவர் பணிபுரிய ஆரம்பிக்கிறார். உதவியாளரை விட, முழுநேர மார்க்கெடிங் ஆய்வாளருக்கு அதிக பொறுப்புகள் உண்டு. இந்த ஆராய்ச்சியாளர்கள்தான், மார்க்கெடிங் துறைக்கு பல முக்கிய முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கிறார்கள்.

இவர்களின் அனுபவத்திற்கேற்ப, இவர்களுக்கான பதவி உயர்வும் கிடைக்கிறது. நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு மார்க்கெடிங் ஆராய்ச்சியாளர், ப்ராஜெக்ட் மேலாளராகவோ, ப்ராஜெக்ட் இயக்குநராகவோ ஆகலாம்.இந்த நிலையில் இருப்பவர்கள், மார்க்கெடிங் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்கள்.

ப்ராடக்ட் மேனேஜ்மென்ட்

ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு தொடர்பாக கிடைக்கும் லாபம் மற்றும் சந்தை வளர்ச்சி ஆகியவை அந்தந்த குறிப்பிட்ட ப்ராடக்ட் மேனேஜரையே சாரும். இவர் அந்த குறிப்பிட்ட தயாரிப்புத் துறையின் சி.இ.ஓ.எனப்படுகிறார். சில ப்ராடக்ட் மேனேஜர்கள், சர்வதேச அளவில் பொறுப்புடையவர்களாக இருந்தாலும்,பெரும்பாலானவர்கள், உள்நாட்டு சந்தையிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இத்துறையில் பணிபுரிய விரும்புபவர்கள், நல்ல திறமையும், உற்சாகமும், அதிக பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர்களாகவும்,நல்ல தகவல்-தொடர்புத் திறன் உள்ளவர்களாகவும், பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாகவும்,மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். இத்துறையில் ஆரம்ப சம்பளமே கணிசமாக கிடைக்கும். செயல்திறன் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து சம்பள விகிதம் பிற்காலத்தில் வேறுபடும்.

புதிய ப்ராடக்ட் மேம்பாடு

சில நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கென்றே, இத்தகைய பணி நிலைகளை வைத்துள்ளன. ஒரு புதிய தயாரிப்பை விளம்பரப்படுத்தி, அதை சந்தையில் அறிமுகப்படுத்தி,சந்தைப்படுத்தும் திட்டங்களை வகுத்து, அந்த தயாரிப்பை ப்ராடக்ட் மேனேஜரிடம் ஒப்படைக்கும் முன்புவரை உள்ள பணிகளை இந்த தயாரிப்பு ஸ்பெஷலிஸ்ட் செய்கிறார்.

சில்லறை வணிகம்

கடந்த 10 வருடங்களாக, சிறப்புடன் வளர்ந்துவரும் துறையாக சில்லறை வணிகத் துறை இருந்து வருகிறது.ஸ்டோர் மேனேஜ்மென்ட், வாங்குதல், தயாரிப்பை விளம்பரப்படுத்தல் போன்ற பல நிலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

லாப-நோக்கமற்ற அமைப்புகளில் மார்க்கெடிங் தொழில்

ஒரு வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒரு பணியை மேற்கொள்ள விரும்பினால், அவர் லாப-நோக்கமற்ற ஒரு அமைப்பில் பணிக்கு சேரலாம். இந்தியா போன்ற நாடுகளில் இந்த வகையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை, தங்களது திட்டங்களை விளம்பரப்படுத்த, மேற்கூறிய மார்க்கெடிங் நபர்களை நம்பியுள்ளன. இதுபோன்ற பணிகளின் மூலமாக, சமூகத்திற்கு சில நன்மைகளை செய்ய முடியும்.

மார்க்கெடிங் ப்ரமோஷன்

மார்க்கெடிங் நிறுவனங்களில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் விளம்பரக் குழுக்களை காண்பது அரிது.திட்டங்களை விளம்பரப்படுத்த, நேரடி மெயில், டெலிமார்க்கெடிங், இன்ஸ்டோர் டிஸ்ப்ளேக்கள்,விளம்பரங்கள், ஒரு பொருளுக்கு ஆதரவளித்தல், சிறப்பு தொடக்க நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்துகின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, படைப்புத் திறனும், கணிப்புத் திறனும் முக்கியம்.

மார்க்கெடிங் துறை என்பது தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான திறன்கள் அதிகம் தேவைப்படும் ஒரு தொழில். இதற்காக ஒருவர் எப்போதுமே ஆர்வக்கோளாறாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. ஒரு குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் அடிப்படை ஆர்வம் இருக்க வேண்டும்.

நன்றி: கல்வி களஞ்சியம்