- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!

ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவர்கள் இருவரும் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த முகாம்களை நடத்தி வந்த போது அதற்குத் தேவையான நிஜக்கதைகள் நிறைய சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த முகாம்களில் கலந்து கொண்ட பலர் அந்த நிஜக் கதைகளைப் புத்தகமாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதைப் புத்தகமாகப் போடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டு இறுதியில் ஒரு புத்தகமாகத் தொகுத்து நியூயார்க் சென்று பதிப்பகங்களை ஒரு ஏஜெண்டின் துணையுடன் அணுகினார்கள். சிலர் அது போன்ற தொகுப்பு நூல் விலை போகாது என்றார்கள், சிலர் அந்தப் பெயரே சரியில்லை, படிக்கவும் ஆளிருக்காது என்றார்கள், சிலர் பரபரப்பு இல்லாத கதைகள் விற்பனையாகாது என்றார்கள். நேரடியாக சந்திக்க முடியாத பதிப்பகங்களுக்கு அந்த பத்தகங்களை தபால் மூலமாக அனுப்பிப் பார்த்தார்கள். அந்தப் பதிப்பகங்களும் அவற்றைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர்கள் ஏஜெண்டும் கைவிரித்து விட்டார்.

விற்பனை ஆகாது, விலை போகாது என்று திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்த ஜேக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்செனும் அந்த அபிப்பிராயங்கள் உண்மையல்ல என்று புரிய வைக்க வேறு வழி கண்டு பிடித்தனர். அந்த நூல் வெளியானால் கண்டிப்பாக ____ பிரதி/கள் வாங்குவேன் என்ற உறுதி மொழிக்கடிதம் ஒன்றை அச்சிட்டு அதில் பெயர், விலாசம் எல்லாம் எழுத இடம் விட்டு தங்கள் முகாம்களுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தந்தனர். 20000 புத்தகங்கள் வாங்க உறுதிமொழிக் கடிதங்கள் சேகரித்த பின் கலிபோர்னியாவில் நடந்த புத்தக விற்பனையாளர்கள் பேரவைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்று ஒவ்வொரு பதிப்பகத்திடமும் அந்த உறுதிமொழிக் கடிதங்களைக் காட்டிக் கூடப் பேசிப் பார்த்தார்கள். அங்கேயும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.

130 மறுப்புகளுக்குப் பிறகு ஒரு சின்ன பிரசுரம் அவர்கள் புத்தகத்தைப் பிரசுரிக்க முன் வந்தது. புத்தகங்கள் வெளி வந்தவுடன் முதலில் அந்த உறுதிமொழிக்கடிதம் கொடுத்தவர்களுக்கு நூல்களை அனுப்பி அவர்கள் காசோலைக்காகக் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே உறுதியளித்த எண்ணிக்கை புத்தகங்களை வாங்கினார்கள். படித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் புத்தகம் எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி பெரும் சாதனை படைக்க அவர்களது மற்ற தொகுப்பு நூல்களும் பிரசுரமாகி பெரும் வெற்றியைக் கண்டன.

எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கின்றன. தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை.

உண்மையான வெற்றி பிரபலத்திலும், எண்ணிக்கையிலும் இல்லை தான். ஆனால் திறமை வெளியே தெரியாமலேயே அமுங்கி விடும் போது உண்மையான தோல்வி ஏற்பட்டு விடுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனால் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள் திறமைக்கு இணையாக தங்களிடம் விடாமுயற்சியையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தடைகளை எதிர்பார்க்காமல் இருந்து விடக் கூடாது. அவற்றை வெற்றியின் பாதையில் கடக்க வேண்டிய மைல்கற்களாகவே கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தக வெற்றி மட்டுமல்ல எல்லா மகத்தான வெற்றிகளும் இந்த நிஜத்தை அனுசரித்தே நிகழ்கின்றன. ஒரு ரஜனிகாந்த் ஆகட்டும், மைக்கேல் ஜேக்சன் ஆகட்டும், ஐன்ஸ்டீன் ஆகட்டும், ராமானுஜம் ஆகட்டும், இது போல ஒவ்வொரு துறையிலும் சிகரம் எட்டிய எவரே ஆகட்டும் இது போல பல தடைகள் கடந்து மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வெற்றி கிடைத்த பின் கூடும் கூட்டம், புகழ், செல்வம் எல்லாம் பிற்காலத்தையவையே. ஆரம்பத்தில் தனியர்களாகவே அந்த சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.

சிக்கன் சூப் கதைகள் வெளியிட அவர்கள் இருவரும் பட்ட ஆரம்ப சிரமங்களைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தித்த சில மறுப்புகள் நமக்கு அவமானமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து முயல வைத்திருக்கிறது. தடைகள் வரும் போது அவர்கள் தயங்கி தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டிருந்தால் இன்று அந்த வெற்றி சரித்திரம் விடுபட்டுப் போயிருக்கும்.

எனவே திறமை உள்ளவர்களே ஆரம்பத் தடைகளுக்குத் தயாராகவே இருங்கள். அவற்றை சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டும் நிகழும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சொல்லப் போனால் இதுவே நியதி. இதுவே பாதை. இந்த உண்மையை மனதில் அழுத்தமாகப் பதித்து எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து தொடர்ந்து முயலுங்கள். பல தடைகளைக் கடந்து கடைசியில் கிடைக்கும் வெற்றிக் கனியைப் போல் சுவையானது வேறொன்றும் இல்லை. உங்கள் திறமைகள் வெளிவருவதும், புதைந்து போவதும் வெளிப்புற நிகழ்ச்சிகளாலோ, மற்றவர்களாலோ அல்ல, அதை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலையால் மட்டுமே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

– என்.கணேசன்