- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இந்தியாவில் இஸ்லாம் – 2

இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

சோழநாட்டு அரசன், முதல் ராஜராஜன் காலத்தில் குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரில் ஒரு பாறை மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கீழ்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:-

5 “…………” செழியரை தேசுகொள்கோ இராசராச –

6 கேசரின் மர்க்குயாண்டு பதினைஞ்சு இவ்வாண்டு கன்னி நாயிற்று

முப்பதாந் (தேதி) செவ்வாய்கிழமை ……….” என்று காணப்படுகிறது. இங்கு எந்த ஆண்டு பொறிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவர்(அரசர்) ஆட்சிபீடம் ஏறிய பதினைந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று மட்டுமே காணப்படுகிறது.

“This date has been Calculated and Verified by Prof.Kielhorn and the result published in the Epigraphia indica, Volume 5th P.48, as Tuesday 29th August 999 A.D.”

அந்த கல்வெட்டில் காணப்படும் வாசகத்தை பேராசிரியர் கீல்ஹான் என்பவர் கணித்து கி.பி.999 ஆகஸ்டு கன்னி மாதம் 29 தேதி செவ்வாய்க்கிழமை என்ற முடிவுக்கு வந்ததாக திரு. டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

ஜோதிட முறையிலும், அல்லாமலும் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளே வரலாற்றில் நாம் வாசிக்கும் ஆண்டுகள். இவை உண்மையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் உண்மை என்று நம்பித்தான் தீரவேண்டும்.

ஜோதிட மூலமும் அல்லாமலும் கணித்து எழுதிய ஆண்டுகளில் எவ்வளவோ தவறுகள் நடந்ததுண்டு. கேரளாவில் ‘திருவல்லம்’ என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படும் ஆண்டின் நடுவிலுள்ள எண் தெளிவில்லாமல் இருந்தது. இதை 319வது ஆண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். 399 என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அதை திருத்தம் செய்தார்.

இதில் எது சரி? எது தவறு? 80 ஆண்டுகளுடை இடைவெளி. பிறகு அக்கல்வெட்டில் உள்ள வாசகம் ஒன்றை எடுத்து சோதிட அடிப்படையில் கணக்கிட்டனர். “விருச்சிகத்தில் வியாழன் நின்றயாண்டு மகர ஞாயிற்று செய்த காரியமிது” என்று சொல்லில் வரும் வியாழனுடைய நிலையை கணக்கிட்டு 399 என்ற முடிவுக்கு வந்தனர். (பேராசிரியர் இளம்குளம் குஞ்சன் பிள்ளை – ‘கேரள வரலாற்றின் இருள் சூழ்ந்த ஏடுகள்’ பக்கம்-139.)

இப்படி பெரும்பான்மையான ஆண்டுகள் எல்லாம் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளேயன்றி உண்மையான ஆண்டுகள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று சில ஊர் பெயர்களும் சில மன்னர்களுடைய பெயர்களும் திட்டவட்டமாக உறுதி செய்யப்படாதவை.

ஒரே மன்னரை பல பெயர்களில் குறிப்பிடுவதையும் அதே மன்னர் வேறுபட்ட காலங்களில் ஆட்சி புரிந்து வந்ததாகக் குறிப்பிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளை உண்மை என நம்பி நாம் வரலாறுகளை அணுகுவது சரியாகப்படவில்லை.

கொல்லம் ஆண்டு (A.D.825) துவங்குவதற்கு முன்னும் ஓர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான ஓர் ஆண்டு பண்டைய தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாமலிருந்ததுதான் இந்தக் குழப்ப நிலைகளுக்கு அடிப்படைக் காரணம்.

கிறிஸ்தவ ஆண்டையோ, அதற்குப் பின் வந்த கொல்லம் ஆண்டையோ எந்த அரசரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேனும் அரசர் பதவி ஏற்றது முதல் அவர் பதவி விட்டு இறங்கியது வரையிலான வருடங்களை நடைமுறைப்படுத்தினர். இதனால்தான் 10-வது நூற்றாண்டு முன் உள்ள ஆண்டுகளை சரியான முறையில் குறிப்பிட்டு எழுத முடியாமல் போய் விட்டது.

“After doing all this the perumal left the sandy island of Tirunavayi with the people of the veda and descended from a ship at kodungallur harbour and entered the palace of kodungallur with a view to proceed to Mecca (Cheramran embarked for Mecca with the people of veda) it was in the Kali Year(A.D.355)
(Malabar manuel by willian Logan, P.279, A.D.355)

இவ்வாறு ‘கேரள உற்பத்தி’ என்ற பண்டைக்கால கேரள வரலாற்று நூலில் குறிப்பிட்டிருப்பதாக லோகன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலி ஆண்டை கணக்கிட்டு ‘கேரளா உற்பத்தி’ நூலாசிரியர் ஏ.டி.355-ல் சேரமான் பெருமாள் என்ற சேரநாட்டு அரசர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக கொடுங்கல்லூர் துறைமுகத்திலிருந்து கப்பலேறி பயணமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலி ஆண்டிற்கு சமமான கி.பி.ஆண்டை கணக்கிட்டபோது தவறு நடந்ததாகத் தெரிகிறது. கி.பி.579-ல் தானே பெருமானார்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி பெருமானார்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கும் 224 ஆண்டுகளுக்கு முன் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக மக்கா பயணமானார் என்று குறிப்பிடும் ஆண்டில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது என்று புலனாகிறது அல்லவா.

இதே போன்றுதான் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த பள்ளி பாண பெருமாள் என்று சேரமன்னர் முதற்கொண்டு முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளான சேரமான் பெருமாள் நாயனார் வரையிலான நீண்ட இரண்டு நூற்றாண்டுகளில் வருடங்களில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தொடர்ச்சியான ஒரு ஆண்டை பின்பற்றி வராததும், இந்த நூற்றாண்டுகளை இருண்ட காலமென உதாசீனப்டுத்தியதுமேயாகும்.

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.

இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.

“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.

ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.

ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

தொடரும்..

நன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்