- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பால்கனியை செடிகளால் அழகுபடுத்துங்கள்…

balcony-plants [1]வீட்டின் முகப்பு தோற்றத்துக்கு அழகு வடிவம் பெற்றுத்தருபவை பால்கனிகள். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப பால்கனியின் பரப்பளவும் சுருங்கி விடுகிறது. அதனால்  பால்கனியை அழகுபடுத்துவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக பலர் இருக்கிறார்கள். அத்துடன் குறுகிய பரப்பளவில் அமையும் பால்கனியை அலங்காரம் செய்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. திட்டமிடுதலுடன் ஆர்வமும் இருந்தால் அழகுற அலங்கரித்துவிடலாம். அதற்கு செய்யவேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

 * பெரும்பாலான வீடுகளில் உள்ள பால்கனிகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும். குறிப்பாக தேவையற்ற பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அது வீட்டின் அழகியலுக்கு பங்கம் விளைவிப்பதாக அமையும். வீட்டுக்கு வருபவர்களையும் முகம் சுளிக்க வைப்பதாக காட்சிதரும். ஆகவே பால்கனியில் பயன்படுத்தாத பொருட்களை நிரப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* பால்கனியை அழகுபடுத்துவதில் முன்னிலை வகிப்பவை செடிகளாக இருந்தாலும் இடவசதிக்கு ஏற்ப பொருத்தமான அலங்கார செடிகளை தேர்வு செய்ய வேண்டும். சிறிய பால்கனியில் பெரிய செடிகளை நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். அவை இடத்தை ஆக்கிரமிப்பவையாக இருக்கக்கூடாது.

* சிறிய வகை செடிகளே பால்கனிக்கு பொலிவை ஏற்படுத்திக்கொடுக்கும். அதேவேளையில் பால்கனியில் விழும் சூரிய வெளிச்சத்தையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப வளரும் செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.

* செடிகள் அழகுடன் மிளிர்ந்தால் மட்டும் போதாது. அவை ஆரோக்கியமாக வளரும் வகையை சார்ந்ததாக இருக்க வேண்டும். படரும் கொடி வகையை சார்ந்த செடிகள் பால்கனிக்கு தனித்துவ அழகை ஏற்படுத்திக்கொடுக்கும்.

* செடிகளையும் நேர்த்தியாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். அவை குறுகிய இடத்தையும் வரையறை செய்து இடத்தை அழகாக மாற்றும் வகையில் அமைய வேண்டும். கண்ணுக்கு குளிர்ச்சியான அழகிய செடிகளை தேர்ந்தெடுப்பது மனநிலையை மாற்றுவதாக அமையும். புத்துணர்வையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

* பால்கனியை செடிகள் நிறைந்த நிழல் தரும் சோலைவனமாக மாற்றி அமைப்பது அமர்ந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும். மனமும் அமைதி அடையும்.

* பால்கனியின் தரைத்தளத்தை அழகிய தரை விரிப்புகளால் அழகுபடுத்தலாம். அவை அலங்கார செடிகளுக்கு மத்தியில் அமைவது ஆரம்பர தோற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பதாக மாறும்.

* பால்கனியின் முகப்பு பகுதியில் பூந்தொட்டிகளை தொங்க விடுவதும் அழகு அலங்காரமாக மாறும்.

* செடிகளுக்கு தகுந்த விளக்குகளை பொருத்துவது பால்கனிக்கு பிரமிப்பான தோற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

* பால்கனியில் வளரும் செடிகளையும் பராமரித்து வர வேண்டும். காய்ந்த இலைகளை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். செடிகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்ற வேண்டும்.

* செடிகளுக்கு அழகை ஏற்படுத்தி கொடுக்கும் இலைகள் பூச்சிக்களின் தாக்குதலுக்கு இலக்காகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வர வேண்டும். அவை இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளாக இருப்பது நல்லது.

நன்றி:நம்ம வீடு