- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பிள்ளைகளை சான்றோனாக்குவதில்.. 1

பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு

parents [1]தங்களுக்கு வழிகாட்டுபவராக;  ‘தீயதை விலக்கி, நல்லதை கொள்ளவும்; எதிர்கால இலக்கை அமைக்க வழிகாட்டவம், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்போது , சரியான முடிவைத் தருபவராகவும், நல்லொழுக்கங்கள் கொண்டவராகவும், மனோ தைரியம் கொண்டவராகவும்’ இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களைப் பற்றிய பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள்.  நல்ல பெற்றோரால் தானே நல்ல வழியைக் காட்ட முடியும். புகைபிடித்தல், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சோம்பேறித்தனம்  போன்ற வழக்கங்கள் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு  சரியான வழிகாட்டியாக இருக்க முடியுமா? பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளுமா?

தங்களுக்கு சுதந்திரம் வழங்குபவராக;  நன்மை, தீமைகளை அறிவுறுத்துவது பெற்றோர் கடமை, படிப்பது, விளையாடுவது, பொழுது போக்குது பற்றி வழிமுறைகளை போதிப்பதும்  பெற்றர் கடமையே. அதன் பின்னர் அவைகளை செயல்படுத்தும் விதத்தில் தங்களுக்கு சுதந்திரம் தேவையென பிள்ளைகள் நினைக்கின்றனர்.  ‘இப்படிச் செய், அது சரியில்லை, நீ செய்வது தவறு, என்னத்தே செய்யறே மடையா, இதுகூட சரியாச் செய்யத் தெரியலையே” போன்ற அபிப்ராயங்களை, ஆலோசனைகளை பிள்ளைகள் செயல் செய்து கொண்டிருக்கும்போது சொல்வது பயத்தை வளர்த்து, தன்னம்பிக்கையைக் குறைத்து, பெற்றோரையே அனைத்திற்கும் சார்ந்ததுள்ளதாகச் செய்துவிடும்.  ‘பட்டம் பறக்கும்’ சுதந்திரம், சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரம் பிள்ளைகளுக்குத் தேவை. படைப்பாற்றல் திறனை அவைகளே ஊக்குவிக்கும். பட்டம் சுதந்திரமாக, தன்னந்தனியாக மேலே பறந்தாலும் அதன் உயரம், வேகம் இவற்றை கண்காணிக்கும் உரிமை, தேவைப்பட்டால்,  கீழே இறக்கும் உரிமை என்ற இணைப்பு கயிறு நம் கையில் இருப்பது போலத்தான் பிள்ளைகள் மேல் நம் கண்காணிப்பு இருக்க வேண்டும்.

தங்களது சிறு வெற்றியையும் பாராட்டுபவராக;  பாராட்டை வேண்டாத உயிரினமே இல்லை. ‘சபாஷ், Very Good ரொம்ப நல்லா பண்ணியிருக்கே, Congratulations’  போன்ற உற்சாகமான வார்த்தைகள் பிள்ளைகளை ஊக்குவிக்கும். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கச் செய்யும். அதற்காக பெற்றோர் வழங்கும் பரிசுகள் பெற்றோர் மேல் உள்ள அன்பை, பிணைப்பை அதிகப்படுத்தும், இலக்கை நோக்கிய வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறச்செய்யும்.

தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாத, பேரன்பு கொண்டாராக, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்பவராக;  பிள்ளைகள் முன்னால் கருத்து வேறுபாடுகள் கொண்டு,  கோபம் பீரிட, அதிக சப்தங்களுடன், வாய்ப்போர் நடத்தும் பெற்றோர். (சிலர் கைப் போரிலும் இறங்குவதுண்டு).  பிள்ளைகளின் ஆழ் மனதில் இவை பதிந்து, அவர்களின் எதிர்கால்தை சிக்கலாக்கிவிடும்.

பிள்ளைகளின் மிக நியாயமான, நல்லதொரு குடும்பத்திற்குத் தேவையான மேற்கூறியவற்றை செயல்படுத்தினால் அக்குடும்பம் குதூகலக் குடும்பமாகவும், பல்கலைக்கழகமாகவும் மாறிவிடும் என்பதில் ஐயமேது.

பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள்

பெற்றோரின் பிரதிபலிப்பே பிள்ளைகள்.  பெற்றோரைப் பார்த்தே பல பழக்கங்களைப் பழகும் பிள்ளைகள்.  மேலே வரவர தங்கள் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்கள் என்பதை அறியவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் இன்றியமையாத கடைமைகளில் ஒன்றாகும்.  “மாதா, பிதா, குரு, தெய்வம்,” வரிசையில் பெற்றோருக்குத் தானே முதன்மை.  “எனது பெற்றோர் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள்” என்ற பிள்ளைகளின்  எண்ணங்களே அவர்களை மேம்பாடு அடையச் செய்வதில் முன்னணியில் உள்ளன.  பெற்றோரிடம் எத்தகைய குணங்களை பிள்ளைகள் எதிர்பார்க்கின்றனர்.

1. அன்பு செலுத்துபவராக

அன்பே அனைத்திற்கும் அடித்தளம்.  அனைத்துயிர்களும் அன்பிற்காகவே ஏங்குகின்றன.  எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பின் பொழிவிற்கு அனைத்தையும் மாற்றும் சக்தி உண்டு. “அன்பே ஆதாரம்” “தனது பெற்றோர் தன் மீது மாறா அன்புடையவர்கள் அவர்களின் அன்பு மழையில் நனையவேண்டும், பள்ளிக்குச் செல்லும்போதும், வந்த பின்பும் அன்பாக நடத்த வேண்டும்.  தங்களது மனச்சுமை, உடல்வலி ஆகியவை பெற்றோரின் அன்பால் சுவடு தெரியாமல் நீங்க வேண்டும்.  “பெற்றோரின் அன்பின்  ஊற்றே தங்களின் உற்சாக டானிக்” என்றுதான் பிள்ளைகள் நினைக்கிறார்கள். “அன்பு தழுவல்கள், தட்டுக்கள், முத்தங்கள்” பிள்ளைகளின் உடல்களில் பெற்றோர்களால் பதிக்கும்போது, அன்பு மலர்கிறது. பாசம் பிணைக்கப்படுகிறது.  உற்சாகம் பொங்குகிறது.

2. ஆதரவாக பேசுபவராக

தவறுதல் இயற்கை.  தான் தவறுகின்ற இடங்களைக் கண்டறிந்து, தேர்வுகளில் மதிப்பெண் குறைவிற்கான காரணங்களை ஆராய்ந்து, தனது நடவடிக்கைகளில் காணும் வேறுபாடுகளை உணர்ந்து, பிறர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தாமல் ஆதரவாகப் பேசி, தங்கள் நிலையுணர்ந்து, நல்வழிப்படுத்த வேண்டும்” என்ற ஆவல் பிள்ளைகளிடம் உள்ளது.  குறைகளைச்சொல்லி, குத்திக்காட்டி, ஏளனம் செய்து, தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் வகையில் பெற்றோர் இருந்தால், அவர்தம் பிள்ளைகள் நிலை என்ன?

3. தங்களுடன் தினசரி பேசநேரம் ஒதுக்குபவராக

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டுப் பிள்ளைகள் ஏக்கம் கொண்டவராக பலர் உள்ளனர்.  வீட்டிலும், வெளியிலும் வேலையிலேயே மூழ்கி இருக்கும் பெற்றோர் தங்களை கவனிக்க ஆயாக்கள் / வேலையாட்களை அமர்த்துவதை பிள்ளைகள் விரும்புவதில்லை. பெற்றோர்களின் கவனம் தங்கள் மேலும் உள்ளது என்று பிள்ளைகள் எண்ணும் வகையில் தினசரி  அவர்களிடம் மகிழ்வுடன் பேச வேண்டும்.  கலந்துரையாட வேண்டும். விளையாட வேண்டும் என்று விரும்பாத பிள்ளைகள் இல்லை.  விளையாட்டுப் பொருட்கள் டி.வி. என்று  உயிரற்ற பொருட்களுடன் உறவாடும்போது மன இறுக்கம்ம் மிஞ்சும்.

4. ஆசைகளை நிறைவு செய்பவராக

“வித விதமான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளையாட வேண்டும். Zoo, Circus, Park, Beach பார்க்க வேண்டும். Painting, Swimming  கற்க வேண்டும், விதவிதமான ஆடைகளை அணிய வேண்டும்.  புதுப்புது உணவு வகைகளை உண்ண வேண்டும்.  சுற்றுலா செல்லவேண்டும் என்ற தங்களின் ஆசைகளை ஓரளவாவது பூர்த்தி செய்து வைக்கும் பெற்றோராக தங்கள் பெற்றோர் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் பிள்ளைகள்.

5. சந்தேகங்களை நீக்குபவராக, Home Work செய்ய உதவுபவராக

பிள்ளைகளின் வளர்ச்சி அவர்களின் கேள்விகளில் அமைகிறது.  சுற்றுப்புறத்தை கூர்மையாகப் பார்க்கும் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் எழும் சந்தேகங்களின் வெளிப்பாடே கேள்விகள்.  மூளையின் துரித வளர்ச்சி, நியூரான்களுக்கிடையேயான இணைப்புக்கள், அறிவின் வளர்ச்சி, இவைகளுக்கு சந்தேகங்களை நீக்கும் பதில்கள் தேவை.  கேள்வி கேட்கும் தனம்மையை சிறுவயது முதற்கொண்டே வளரக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தாமாகவே முன்வந்து, வயதிற்கேற்ப, தேவையான அறிவியல்  உண்மைகளை பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும்.  தனக்கு தெரியாவிட்டாலும் பிறரிடம் கேட்டுத் தெரிந்து சொல்ல வேண்டும்.  பிள்ளைகளின் வீட்டுப் பாடத்தில் அக்கரை எடுத்து கேட்25 [2]டு, அவைகளை ஆர்வத்துடன் செய்யும் வகையில் தூண்டி, சிறப்பாக செய்து முடிக்க உதவ வேண்டுமென்று பிள்ளைகள் விரும்புகின்றன.

– தொடரும்…

இரத்தினசாமி ஆ