- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்!

வில்மாவின் வெற்றிக்கதை

wilma1 [1]சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரியதென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.

என்றாலும், எவரெஸ்ட்டைவிட சற்றே சிறிய சிகரங்களை எட்டுவதும்கூட சாதனைகள் தான். அவரவர் சக்திக்கேற்ற உச்சங்களை எட்டிப் பிடிப்பது எப்போதுமே சாதனை யென்று சொல்லப்பட்டுவருகிறது.

அமெரிக்காவில் நடை பெற்ற சம்பவம் இது. அந்தத் தம்பதியருக்கு 22 குழந்தைகள். அவர்களில் 20வது குழந்தையாகப் பிறந்த குழந்தை, வில்மா. 1940ஆம் ஆண்டு, உரிய வளர்ச்சி இல்லாமல் பிறந்த வில்மாவை மருத்துவ மனையில் வைத்துக் கவனிக்கப் பணமில்லை. வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள்.

விதம்விதமான நோய்கள், வரிசை வரிசையாக வந்து வில்மாவின் வாழ்க்கையுடன் விளையாடின. எத்தனையோ நோய்களை அந்த இளம்பிஞ்சு எதிர் கொண்டிருந்த வேளையிலும், இடது கால், வளரும் பருவத்தில் வளைந்திருந்ததை பெற்றோர் பார்த்தனர்.

குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலியோ நோய் தாக்கியிருப்ப தாகவும் அந்தக் குழந்தையால் நடக்க முடியாத தென்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

வில்மாவின் அம்மா, அதனை ஏற்க மறுத்தார். தன் குழந்தையை நடக்க வைப்பதென்று முடிவு எடுத்தார். தன் அத்தனை பிள்ளைகளிடமும் பேசினார். இருபத்தோரு பிள்ளைகளும் இணைந்து தங்கள் இனிய சகோதரிக்கு உதவ முடிவு செய்தனர்.

நாளொன்றுக்கு நான்கு முறையாவது வில்மாவின் கால்கள் மசாஜ் செய்யப்பட்டன. ஆறு வயதுக் குழந்தை, வலிமிக்க பிஸியோதெரபி சிகிச்சையை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

அந்த சவாலை சின்னக்குழந்தை எதிர் கொண்டது எப்படி? பல வருடங்கள் கழித்து வில்மா சொன்னார், ”நான் நடக்கவே மாட்டேன் என்று மருத்துவர் சொன்னார். நான் நடந்தே தீருவேன் என்று என் அம்மா சொன்னார். நான் என் அம்மா சொன்னதை நம்பினேன்!”

உடன்பிறந்தவர்களின் உறுதுணையுடன், வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் ஓடியாடி, கால்களில் மாட்டிய உலோகங்களைக் கழற்றி எறிகிற அளவு போலியோ காலுக்கு பலம் கொடுத்தார் வில்மா.

இந்த முயற்சிகளின் முதல் நம்பிக்கையை வில்மா முழுமையாக உணர்ந்தது எப்போது தெரியுமா? தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இருந்த தேவாலயத்தில், வாராந்திர பிரார்த்தனைக் காக, உலோகத்தின் துணையுமின்றி உடன் பிறப்புகளின் உதவியுமின்றி, தன்னந்தனியாய் நடந்து வந்த அந்த நாளில்தான்.

தன் குழந்தை நடந்தால் போதுமென்று அன்னை உள்ளம் நினைத்தது. ஆனால், வில்மாவின் கனவு வேறாக இருந்தது. பாஸ்கட்பால் வீராங்கனையாக வேண்டும் என்கிற கனவு வில்மாவுக்குள் வேர் விட்டிருந்தது.

பாஸ்கட்பால் அணியில் சேர வில்மா முயன்றார். மூன்றாண்டுகள், மற்றவர்கள் விளையாடுவதைப் பார்க்கும் பார்வையாளராக மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த மூன்றாண்டுகளை அவர் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொருவரும் விளையாடுவதை உன்னிப்பாய் கவனித்து நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அந்த உத்திகளை உள்வாங்கிக் கொண்டார்.

அப்புறம் வில்மாவுக்கு வந்தது அந்த முதல் வாய்ப்பு. வில்லில் பூட்டிய அம்பாய் விழிப்புடன் இருந்த வில்மா, முதல் வாய்ப்பிலேயே தன் அணியை வெற்றியின் திசை நோக்கி விறு விறுப்பாய் நடத்திச் சென்றார். அப்போது வில்மா பள்ளி மாணவி. ஒருமுறை பாஸ்கட்பால் பயிற்சிக்கு முப்பது நிமிடங்கள் தாமதமாய் சென்றபோது, பயிற்சியாளர் வில்மாவை அந்த மைதானத்தைச் சுற்றி முப்பது தடவை ஓடிவரச் சொன்னார். பயிற்சியாளரைப் பொறுத்தவரைதான் அது தண்டனை. வில்மாவுக்கோ, தான் போலியோவை வென்று விட்டதை ஒரே நாளில் தனக்குத்தானே முப்பது முறை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பு.

இந்த உழைப்பும் முனைப்பும் வீண்போக வாய்ப்புண்டா என்ன? வில்மாவுக்கு 16 வயதான போது, 1956ஆம் ஆண்டில் ஒலிம்பிக்ஸ் ரிலே ரேஸ் அணியில் வில்மா இடம் பெற்றார். 100 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்மாவுக்கு வெற்றிபெறும் வேட்கையோ வேகமோ தீரவில்லை.

wilma [2]நான்கே ஆண்டுகளில், 1960ல் ரோம் நாட்டில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில், அமெரிக்காவுக்கு மூன்று தங்கப் பதக்கங்களை அள்ளி வழங்கிய அபாரமான வீரராய் வில்மா விளங்கினார்.

முன்னே நின்ற மலையை மிக எளிதாக நகர்த்திவிட்டு முன்னேறியதில் தனித்து நின்றார் வில்மா. இன்றும் சர்வதேச விளையாட்டரங்கில் வில்மா ரூடால்ஃப் என்ற பெயர் வெற்றியின் சின்னமாய் வைரம் போல் தகதகக்கிறது.

பலருக்கும் பிரச்சனைகள் மலையாகத் தெரிகின்றன. மலைத்து நிற்கிறார்கள். ஆனால், தங்களுக்குள் இருக்கும் தீவிரம் மெல்ல மெல்ல வளர்ந்து, தடுத்து நிற்கும் பிரச்சனையைத் தகர்க்கும் ஆற்றல் கொண்டது என்பதை உணர மறக்கிறார்கள்.

விதம்விதமான குறைபாடுகளுக்கு மனிதன் ஆளாவதால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தன்பலங்களைவிட பலவீனங்களைப் பெரிதாக மதிப்பிடும் பார்வைதான் தவறானது.

திக்குவாய் பிரச்சினையால், இவரின் பொது வாழ்வே கேலிக்கும் கேள்விக்கும் இடமாகப் போகிறது என்று அரசியல் எதிரிகளும் உதிரிகளும் எதிர்பார்த்தபோது, தன் குறையைப் போராடி வென்று, உலகின் மிகச்சிறந்த சொற்சொழி வாளர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

இவரால் இது முடியாது என்கிற முத்திரையை யாராவது குத்தும்போது, ”ஏன் முடியாது” என்று சிலிர்த்தெழுந்து அந்த முத்திரையை உடைத்துக் காட்டி முன்னேறியவர்கள் அடிப்படையில் சாதாரணமான சூழலில் வாழ்வைத் தொடங்கியவர்கள்தான். ஆனால், அசாதாரணமான மன உறுதியுடன் வாழ்வை எதிர் கொண்டவர்கள். அதனாலேயே வென்றவர்கள்.

– மரபின்மைந்தன் ம. முத்தையா