- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

முன் வரிசை

இரவு முழுதும் காசிமுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.

மனப்பாடம் செய்து வைத்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் சப்தமாகவே திரும்பத் திரும்ப ஓதிப் பார்த்துக் கொண்டான்.

மனதில் ஒருவகை நிம்மதி நிரம்பியிருந்தது – மகிழ்ச்சியின் கிளர்ச்சியில் நரம்புகள் முறுக்கேறியிருந்தன.

தொழுகைக்கான எல்லா சூராக்களையும் இரண்டே நாட்களில் பிழையில்லாமல் மனப்பாடம் செய்து விட்டான் அவன்.

“ஏழு வயதாயிட்டா தொழச் சொல்லி ஏவணும் – பத்து வயதுலயும் தொழாட்டா அடித்துக் கண்டிக்கனும்” – ஆலிம்சாவின் உபதேசம் நினைவுக்கு வந்தது.

“உனக்கு ஏழு வயசாச்சு, காசிம்! இன்னிலேயிருந்து உனக்கு நோன்பும் தொழுகையும் பர்ளாயிடுச்சு! உன்னைத் தொழச் சொல்லி நான் கட்டாயப்படுத்துறது எனக்கும் கடமையாகிப் போச்சு கண்ணு” என்று அம்மா சுட்டிக் காட்டியதையும் நினைத்துக் கொண்டான்.

தான் பெரிய மனிதனாகிவிட்டது மாதிரி இருந்தது அவனுக்கு!

மார்க்க அனுஷ்டானங்களில் தனக்கும் சம அங்கீகாரம் கிடைத்து விட்டது என்ற பூரிப்பு அவனுக்கு! அதனால் மனதெல்லாம் புளகாங்கிதம்!

ஏழு வயதை இப்போதுதான் தொட்டவன் அவன் என்றாலும் 5 வயது முதல் ஒழுங்காக மதரஸா சென்று வருபவன் – வயதை மீறிய பக்குவம் பெற்று வருபவன்! ஃபஜ்ருக்கு அவன் அம்மா அவனை எழுப்புவதில்லை என்றாலும், லுஹர், அஸர், மஃரிப் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்று வருபவன். அதேபோல சென்ற இரண்டு ரமலானில் அவ்வப்போது அழுது அடம்பிடித்து சில நோன்புகளும் வைத்து அனுபவப்பட்டவன். தொடர்ந்து ஸஹருக்கு எழுப்பச் சொல்லி நச்சரித்தாலும் கண்டு கொள்ள மாட்டாள். “ஏழு வயசாகட்டும் காசிம்,  இப்பல்லாம் உனக்கு தொழுகையும் நோன்பும் கடமையில்லை” என்று சொல்லிவிடுவாள்.

ஆனால் அம்மா இனிமேல் அப்படியெல்லாம் தட்ட முடியாது!

ஃபஜ்ருக்கு எழுப்பியாக வேண்டும்! உனக்கு பர்ளில்லை. அதனால் ஸஹருக்கு எழுப்பவில்லை என்றெல்லாம் இனி சாக்குப் போக்குச் சொல்ல முடியாது! அப்படிச் செய்தால் அவளும் பாவம் செய்தவள் ஆகிவிடுவாள் என்று ‘ஆலிம்சா’ சொல்லியிருக்கிறாரே! அப்பாடா! ஒரு வகையாக அந்த அங்கீகாரம் – தானும் மற்றவர்களைப்போல பெரியவனாகி விட்டோம் என்று பூரிப்பு அவன் நெஞ்செல்லாம் நிறைந்து திக்குமுக்காடச் செய்தது.

காலையில் எழுந்து ஃபஜ்ருக்கு ஓட வேண்டும் – தொழ வந்ததன் அடையாளமாக பேஷ் இமாமிடம் மதரஸா கைநோட்டில் கையெழுத்து வாங்கி மதரஸா உஸ்தாதிடம் காட்டியாக வேண்டும். – இல்லையென்றால் பிரம்படி விழும்!

எப்போது தூங்கினான் என்று தெரியாது!

“அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்.. “காற்றில் மிதந்து வந்த இனிமையான பாங்கொலி கேட்டு துள்ளி எழுந்தான் காசிம்.

இனிமையான அந்தக் காலைப் பொழுதில் மோதினார் தாஸிம்பாயின் கம்பீரமான அதானின் ஏற்றத் தாழ்வுகள் அந்த பிஞ்சு உள்ளத்தில் பக்திப் பரவசத்தை பக்திப் பிரவாகத்தை ஏற்படுத்தின.

அதை மெய்மறந்து கேட்டுக் கொண்டே ஆலிம் ஸாஹிப் சொல்லிக் கொடுத்தது போல ‘அதானை’த் திருப்பிச் சொல்லி துஆ ஒதி முடித்தான்.

அம்மா தொப்பியையும் கைலியையும் நீட்டினாள்! அவற்றை அணிந்து கொண்டு “அம்மா.. போயிட்டு வாரேன்.. ” என்று நீட்டி முழுக்கிக் கொண்டே பள்ளியை நோக்கி விரைந்தான் – தன்னோடு ஓதும் பையனகள் யாரும் வருவதற்கு முன் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவனுள்!

இருள் விலகியிருக்காத அந்தக் காலைப் பொழுதில் அந்த இளம் கால்கள் எட்டி எட்டி ஓடின.

பள்ளியின் உள்ளே ஒரு சிலர் சுன்னத் தொழுது கொண்டிருந்தார்கள் – பேஷ் இமாம் சுன்னத் தொழுது விட்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒளுவின் பர்ளுகளை ஒரு முறை வரிசைக்கிரமமாக நினைத்துப் பார்த்துக் கொண்டு ஒளுச்செய்து முடித்தான். ‘இனிமேல் விளையாட்டுத்தனமெல்லாம் கூடாது. ஓளுவில் தவறுகள் நேர்ந்துவிட்டால் தவறாகிப் போகும். தொழுகையே கூடாமல் போய்விடலாம். பெரியவனாகி விட்டோமே?” என்று நினைத்துக் கொண்டான்.

மளமளவென்று இரண்டு ரகஅத் சுன்னத் தொழுது முடித்துவிட்டு எழுவதற்கும் தாஸிம்பாய் இகாமத் சொல்வதற்கும் சரியாக இருந்தது.

சுன்னத் தொழுதுவிட்டு ஆங்காங்கே உட்கார்ந்திருநத் பெரியவர்கள், முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு முக்கி முனங்கி எழுவதற்குள் சிட்டாய்ப் பறந்து சென்று மோதினாரின் அருகில் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டான்!

“அல்லாஹ் அக்பர்” என்று பூரிப்போடு தக்பீர் கட்டிக் கொண்டான்.

இதுவரை அனுபவித்தறியாத ஒரு நிறைவோடு பேஷ் இமாமின் கிராஅத்தில் ஒன்றிப் போனான்! அந்த கிராஅத்தின் இனிமையும் அதில் குழைந்து வந்த சோகமும் அவனைப் புல்லரிக்கச் செய்தன. அந்த நேரத்தில் “என்னடா சின்னப்பய முன்வரிசையில் நிக்கிறான்” என்ற குரல் .. அதைத் தொடர்ந்து இரண்டு முரட்டுக் கரங்கள் அவனது தோளை அப்படியே இறுக்கிப் பிடித்து தரதரவென்று பின்னுக்கிழுத்து பின்வரிசையில் நிறுத்தியது – பள்ளியின் முத்தவல்லி!

தொழுகையின் ஒன்றிப்பில் நின்ற அந்த பிஞ்சு மனம் பதறிப் போனது –

“யார் சின்னப்பையன், நானா? எனக்கு ஏழு வயசாச்சு. முத்தவல்லி மாமா” என்று சொல்ல வேண்டும் என்று மனம் துடித்தது.

ஆனால் தொழும்போது பேசக்கூடாதே? உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் கண்கள் குளமாயின. தன்னை பின்னுக்கு இழுத்துவிட்டு தான் நின்ற முன்வரிசையில் நின்று கொண்ட அந்த முத்தவல்லிமீது அவனுக்கு கோபமோ கோபம்! அதன்பின் அவனுக்கு தொழுகையில் ஒன்றிப்பு ஏற்படவில்லை!

தொழுகை முடிந்து வெளியே வந்து தூணுக்கருகில் உட்கார்ந்து கொண்டான்.

தஸ்பீஹ், துஆ முடிந்து வெளித்தளத்திலிருந்து கபுராளிகளுக்காக ஒரு துஆ ஓதி முடித்து, சலவாத்துடன் கலைந்து செல்வது தான் அவ்வூர் வழக்கம்.

அதுவரை பொறுமையாக இருந்தான்.

சலவாத்து முடிந்து எல்லோரும் கலைய ஆரம்பித்த நிமிடத்தில் “அஸ்ஸலாமு அலைக்கம்” என்று உரக்கச் சொன்னான்!

அனைவரும் அந்தந்த இடத்திலேயே நிலை கொண்டனர்!

ஆலிம்சா,  ஏழுவயசுப் பையனும், பெரிய மனுசர்களும் தொழுகையைப் பொறுத்து ஒரே மாதரித்தானே?”

“ஆமா”

“ஏழு வயசுப் பையன் முன் ஸப்புல நின்று தொழக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?”

‘அதிருக்கட்டும் காசிம், நீ ஏன் அப்படிக் கேக்குற?’

“முத்தவல்லி மாமா நான் காலைல தொழுதுக்கிட்டிருக்கப்ப, என்னைய பின்னாடி இழுத்து வுட்டுட்டு அவுக போயி நின்னக்கிட்டாக – அது சரியா?”

“எது சரியில்ல? சின்னப்பசங்க முன்ஸப்ல நிக்க வேணாம் – பின்னால் நிக்கிறதுதான் சரின்னு காலா காலமா ஆலிம்கள் சொல்லி வந்ததாச்சே” – முத்தவல்லி காட்டமாகக் கேட்டார்.

“சின்னப்பசங்க வெளையாட்டுத்தனமா நடந்துப்பாங்களேன்னு அப்படி ஒரு ஏற்பாடு. இந்தப் பையனுக்கு அது பொருந்தாது. அது போக பள்ளயில் சிறுநீர் கழித்த காட்டரபியையே அவன் சிறுநீர் கழிச்சு முடிச்சப்புறந்தான் பக்குவமா எடுத்துச் சொல்லனுண்ணு நம்ம நாயகம் சொல்லியிருக்காக – அதுதான் இஸ்லாம். நீங்க பையன் தொழுது முடிச்சப்புறந்தான் விவரமா சொல்லிக் காட்டியிருக்கனும் முத்தவல்லிசாப்” ஆலிம் முன்பைவிட உறுதியாகச் சொன்னார். காசிமின் முகத்தில் மலர்ச்சி என்றால் அப்படி ஒரு மலர்ச்சி.

சூரா = குர்ஆன் அத்தியாயம் ஆலிம்ஸா = மார்க்க அறிஞர் பர்ள் = கடமை
மதரஸா = மார்க்க கல்விக்கூடம் ஃபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் =  தொழுகை நேரங்கள் ஸஹர் = அதிகாலை உணவு (நோன்பிற்காக)
அல்லாஹ் அக்பர் = அல்லாஹ் பெரியவன் அதான் – பாங்கு = தொழுகை அழைப்பு ஒளு = சுத்தம் செய்தல்
ரகஅத் = தொழுகையில் உள்ள எண்ணிக்கை இகாமத் = தொழுகை தொடக்கம் கிராஅத் = குர்ஆன் ஓதுதல்
தஸ்பீஹ், துஆ = பிராத்தனை முறைகள் கபுராளி = இறந்தவர் ஸஃப் = வரிசை
நாயகம் = முகம்ம நபி(ஸல்) காட்டரபி = படிக்காத கிரமத்து அரபி