- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தாயின் காலடியில்

இன்று அன்று
மாலிக் ஸ¤புஹான்
மலேசியத் தொழிலதிபர்
மாடி வீடுகள்
மனிசேஞ்ச் பிஸினஸ்
ப்ரொவிசன் டிப்போக்கள்
புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள்!
ஏவிய பணிசெய்ய
ஏராளம் பணியாட்கள்!
அவரது அம்மா
ஆயிஷா பீவிக்கு
அவர் ஒருவர்தான்
ஆண்பிள்ளை; வேறில்லை
ஒரேவொரு பெண்பிள்ளை
அவளும் வெளியூரில்!
மாலிக் ஸ¤புஹானின்
மாளிகை வீட்டினிலே
ஆயிஷா மட்டும்தான்!
அவருக்குத் துணையாக
முனியாயி என்ற
முதிய பெண்ணொருத்தி !
வயது முதிர்ச்சி;
வாட்டும் நோய்கள்!
ஆயிஷா வுக்கு
அலுத்தது வாழ்க்கை!
அன்பு மகனை
அருமை மருமகளை
அவர்கள் பிள்ளைகளை
அரவணைக்க ஆசை!
“மாளிகை வாசமும்
மணக்கும் உணவும்
எனக்கினி எதற்கு?
என்னரு மகனே?
உன்னரு கிருந்து
ஓட்டிட்டு நாட்களை
வல்லவன் அழைக்கையில்
விரைவேன் மகனே!”
என்றவள் எழுதினாள்;
எத்தனை கடிதங்கள்!
“ஏலாத உன்னை
இங்கே கொணர்ந்து
என்னநான் செய்ய?
ஏலாது எனக்கு!
அங்கேயே கெட
அதுவே போதும்”
என்றவர் எழுதினார்
என்னே பாசம்!
பாசத்துக் கேங்கி
பலவாறாய் உழன்று
ஆயிஷா ஒருநாள்
அல்லாஹ்விடம் மீண்டாள்!
பறந்து வந்தார்
பாசத்தைக் காட்ட!
ஊரைத் திரட்டி
விருந்து படைத்தார்!
வியந்தது உலகம்
மகிழ்ந்தார் மாலிக்!
பாயஸீத் பிஸ்தாமி
பார்போற்றும் அறிஞர்!
பாரசீகம் முதல்
பாரதம் வரைக்கும்
ஆன்மீகம் தழைக்க
அரும்பாடு பட்டவர்!
சீடர்கள் கோடி
சிறப்புக்கோ அளவில்லை!
பெற்ற அன்னையின்
பேராசி யோடு
கற்ற கல்வியை
காசினிக் களித்தவர்!
அன்னையார் முதுமையில்
அல்லல் படுகையில்
அனைத்தையும் விட்டு
அவரிடம் மீண்டார்!
பார்வை தெரியாத
பாச அன்னையின்
ஆயுள் முழுக்க அங்கேயே இருந்தார்!
பெற்ற அன்னைக்குப்
பணிவிடை செய்தலே
சொர்க்க வாசலைச்
சேரும் மார்க்கம்
என்பதை உணர்த்தினார்;
என்னே பாசம்!
அந்த பாயஸீத் பிஸ்தாமியும்
இந்த மாலிக்ஸ¤ப்ஹானும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்
என்ன செய்வது?
சொல்லுங்கள்…
என்ன செய்வது?