- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வியாபாரத்தினால் விபரிதமான கல்வி

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்’ “வெள்ளையனே வெளியேறு’ போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.

இத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் தட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணம்? அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்காது என்று எண்ணி மெட்ரிக் பள்ளியிலும், சிபிஎஸ்இ பள்ளியிலும் படிக்க வைக்கின்றனர். தங்கள் மீதே இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் கல்வித் துறையையும், அரசு ஆசிரியர்களையும் மக்கள் எப்படி நம்புவார்கள்?

தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் தனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பெயரிலோ பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்? கிராமங்களில் உள்ள பள்ளிகளில், சில ஆசிரியர்களை தவிர, காலையில் வந்து பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு தங்களது சொந்தத் தொழிலைக் கவனிக்க எத்தனை ஆசிரியர்கள் செல்கின்றனர்? இதை எல்லாம் விசாரணை செய்து பார்த்தால் அதிர்ச்சித் தகவல்தான் மிஞ்சும்.

அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?

ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா?

சரி, தரமான கல்வி இல்லை என்று கூறினால், அதற்கு ஆசிரியர்கள்தானே காரணம். மேலும், இன்றைய தொழில்நுட்ப உலகில் அடிப்படைத் தேவையான கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். இதைக் கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும், இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்தது மட்டும் இல்லாமல், தனது குழந்தைக்கு மதிய சத்துணவும், அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார். இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால், இந்தக் குழந்தையை பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியுமா?

ஏனென்றால், ஆட்சியரின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த மறுநாள் முதலே பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மதிய உணவுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். சத்துணவில் காய்கறிகளை அதிகப்படுத்துதல், சத்துணவு சமைக்கும் சமையல் ஆள்களை கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று பல கோணங்களில் அரசு கல்வித் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், மேலே குறிப்பிட்ட அனைத்தும் அப்பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் கிடைக்கிறது. ஆகையால் ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவரைப்போன்று அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். விழிப்புணர்வு பேரணியோ அல்லது துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிலையோ ஏற்படாது.

இதற்கு அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். இச்சட்டத்தைக் கொண்டுவந்தால் கல்வித் துறையில் ஏற்படும் பல பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.

சமச்சீர் கல்வி புத்தகம் உடனடியாக அளிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்ற கூறிய பிறகும் அரசு அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பின்னால் எத்தனை முதலைகள் எவ்வளவு பணம் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.  என்பதை அனைவரும் அறிந்ததே. அத்தனையும் இந்த பாவப்பட்ட பள்ளி மாணவர்களிடம் வசூல் செய்து விடாலம் என்று அவர்களுக்குதான தெரியாது.
அரசாங்கமே அரசு பள்ளிகளை இழுத்து மூடிவருவதும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது.
அமைச்சர், எம்எல்ஏ, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைவரது குழந்தைகளும் ஒன்றிணைந்து கைகோத்து அரசுப் பள்ளிக்குச் சென்றால்தான் சமத்துவம் பிறக்கும், தரமான கல்வி கிடைக்கும், நாடு செழிக்கும், புதுமை பிறக்கும்.
நன்றி: கிராமத்து காககை