- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சந்தூக் பிறந்த கதை

இன்று:

காதரும் மனைவியும்
கடைக்குச் சென்றனர்
காஸ்மடிக் வகைகள்
கலை நுணுக்க வளையல்கள்
வேண்டிய அளவுக்கு
விரும்பி வாங்கினர்!
மனைவியின் விருப்பம்
மதிப்பது கடனென
அமைதியாய் காதர்
அனுமதி வழங்கினான்!
பரீதா கேட்ட
பட்டு வகைகளும்
பக்குவ மாக
பார்த்து வாங்கினான்!
“மெல்லிய ஸார்ஜெட்
மினுக்கும் நைலெக்ஸ்
நல்ல தில்லையே”
நினைத்தான் காதர்!
உடலம் தெரிய
உடுத்துதல் தவறு
உண்மை முஸ்லிம்
உணர்வது கடமை!
“இதுவேண் டாமே”
என்றான் மெதுவாய்!
“ஏன் என விளித்தாள்
இறுக்கமாய் பரீதா!
“உடம்பு தெரியுமே
அதனால் வேண்டாம்
அடுத்துப் பார்ப்போம்
தடிப்பமாய்” என்றான்!
வந்ததே கோபம்
வானலி எண்ணெயாய்!
“அல்லா அல்லா
என்விதி இதுவா?
இந்த வயதில்
இது உடுத்தாமல்
எந்த வயதில்
உடுத்திக் களிப்பதாம்?
பத்தாம் பசலியாய்:
படித்தும் மடயனாய்
இருக்கும் கணவனை
எள்ளினாள்; இகழ்ந்தாள்!
கடையென்றும் பார்க்காமல்
கண்ணைக் கசக்கினாள்!
சுற்றி நின்றவர்
சுறுசுறுப் பாயினர்!
இலவச மாக
இங்கொரு நாடகம்
அரங்கேறுவதை
இழத்தலும் கூடுமோ?
பார்த்தான் காதர்
படக்கென மாறினான்!
“சும்மா சொன்னேன்
சோதிச்சுப் பார்த்தேன்!
உன்விருப் பம்போல்
உடுத்திக்கோ ” என்றான்!
கோபம் மறைந்தது
குதூகலம் பிறந்தது!
ஒன்றுக்கு இரண்டாய்
உருப்படி வாங்கினாள்!
அன்று

அண்ணலெம் பெருமானின்
அருமைப் புதல்வி!
சொர்க்கத்துப் பேரொளி
சுடர்மிகு பாத்திமா
அந்திமக் காலம்
அவரை அடைந்தது!
முகத்தில் சோகம்;
மூச்சும் சிரமம்!
கண்களில் கண்ணீர்;
காய்ச்சலோ நெருப்பு!
அருகில் இருந்த
அஸ்மாபிந்த் உமைஸ்
அன்புடன் பண்புடன்
அவருக்க் குதவினார்!
“நாயகச் செல்வமே
நற்குண நங்கையே!
கண்களில் பொங்கும்
கண்ணீர்த் துளிகளின்
காரணம் யாதோ?
கரைவீர்” என்றார்!
“மௌத்து என்பது
மகிழ்ச்சியின் மொத்தம்!
அதை எதிர்கொள்ள
ஆசைதான்; ஆனால்,
இறந்த பின்னால்
இவ்வுடல் தன்னை
ஒருதுணி மூடி
எடுத்துச் செல்லுவர்!
மெல்லிய துணியால்
மேனி முழுதையும்
மறைத்திட முடியுமா?
மாண்புரு தோழியே?
அங்க வளைவுகள்
அழகுகள் அனைத்தும்
அடுத்தவர் கண்பட
அனுமதிக் காத நான்
ஜனாஸா வானபின்
ஜனங்களின் பார்வையில்
படுவது நலமோ?
பதைக்கிறேன் தோழியே”
அஸ்மா நெகிழ்ந்தார்;
அவர்கண் பனித்தது!
குரைஷியர் கொடுமை
கூடிய போது
அபிஸீனி யாவில்
அடைக்கலம் தேடிய
அனுபவம் அப்போது
அவருளம் வந்தது!
ஈச்சமட்டையை
வில்போல் வளைத்து
இருபது முப்பதை
இழுத்துக் கட்டி;
கூடையின் மூடிபோல்
குவித்துக் கட்டி
அந்த மூடியால்
உடலை மூடி
அதற்கு மேலே
துணியைப் போர்த்தி
எடுத்துச் செல்லுவர்
ஏற்புடை முறை அது!
அப்படி உங்கள்
அருமை உடலை
அடக்கம் செய்ய
எடுத்துச் செல்லவா?”
என்றனர் அஸ்மா;
ஏற்றனர் பாத்திமா!
உயிருக்குப் பின்னரும்
ஒழுக்கம் பேணுதல்
சிறப்பென உணர்த்தும்
சீர்மிகு கதை இது!
‘சந்தூக்’ பிறந்த
சரித்திரம் இதுவே!
அந்த பாத்திமாவும்..
இந்த பரீதாவும்…
சொந்த பந்தம்தான்…
சோதர முஸ்லிம்கள் தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்……
என்ன செய்வது?