ஊற்றுக்கண் – முன்னுரை

முன்னுரை: சமுதாயத்தின் பத்திரிகை வரலாற்றில் சிந்தனைச்சரம் ஒரு தனித்துவமான இதழாய்த் தடம் பதித்திருக்கிறது. புதிய எண்ணங்களின் எழுச்சியில் அதன் தொடக்கம்! உணர்ச்சிபூர்வமான பல விசயங்களை அது தைரியமாகத் தொட்டது.

பல விவாதங்களை எல்லா மட்டங்களிலும் அது தோற்றுவித்து. வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அதன் நோக்கிலும் போக்கிலும் இருப்பதை எளிதில் யாரும் விளங்கிக்கொள்ள முடிகிற அளவுக்கு அதன் வள்ர்ச்சி இருப்பதுடன், தன் எல்லையை நோக்கி விரைந்து முன்னேறியும் வருகிறது. ஏற்கனவே எட்டியிருக்கிற வாசகப்பரப்பின் ஆழமும் அகலமும் அதிகரித்து வருகின்றன. இங்கே நான் ஆழம் என்று குறிப்பிடுவது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அது வேரூன்றியிருக்கும் தன்மையை. அகலம் என்று சுட்டிக் காட்டுவது, சகோதர சமுதாய வாசகர்களிடையே அது பெற்றுவரும் அங்கீகாரத்தை. பத்திரிக்கையின் தொடக்க காலம் முதல், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் – குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் இப்பத்திரிக்கையின் சிறப்புக்கள் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லிவரும் ஒரு சமுதாயக் களப்பணி ஊழியன் என்ற முறையில் ஒரு நல்ல இதழை அறிமுகம் செய்வித்த மன நிறைவு எனக்கு உண்டு.

பொதுவாக வாசகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது. அது இன்னும் நிறைய எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கும் என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும்! அவ்வப்போது சிந்தனைச்சரம் என் கட்டுரைகளை, கதைகளைப் பிரசுரித்துள்ளது. அவை நூல்களாகவும் வெளிவந்து நல்ல அங்கீகாரங்களைப் பெற்றுத்தந்துள்ளன. ஆக்கங்களை, அவ்வப்போதைய தேவை, சுவைகளுக்கேற்ப தக்காரிடம் கோரிப்பெற்றுப் பிரசுரித்தல் என்ற சிந்தனை ஆசிரியர் குழுவின் வித்தியாசமான அணுகுமுறை அவ்விதழின் கனமும் தரமும் கூடுவதற்கு அடிப்படையாக இருந்தது என்பது என் கருத்து. அதுவே சமுதாயத்தின் கவனத்தை விரைவாகப் பெற்றுத்தரவும் உதவியது எனலாம்.

ஆலிம்களுக்கு அரசியல் தெரியாது; தேவையுமில்லை! ஆலிம்களுக்கு அறிவியல் தெரியாது; – ஆன்மீகம் மட்டுமே பரிச்சியம்! ஆலிம்களுக்கு சமுதாய நடப்பு பற்றிய அக்கறை குறைவு; அது பற்றிய கவலையே கிடையாது! ஆலிம்களுக்கு இஸ்லாமிய வாழ்வியலின் தனித்தன்மைகளை பிறருக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லத் தெரியாது; தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை! ஆலிம்களுக்கு இலக்கியத்தின் பன்முகத்தன்மையும், அதன் மென்மையும் தெரியாது; ஏன்? தமிழைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாது என்று பலர் பல காலமாகக் கதைத்து வந்த கற்பனைச் சித்திரங்கள் இப்போது சிதறடிக்கப்பட்டுள்ளன.

ஆலிம்களும், அறிவியல் படித்த முஸ்லிம்களும் தங்களுக்குத் தாங்களே கட்டிக்கொண்ட அக்ரஹாரங்கள் இப்போது சிதறுண்டு போய் விட்டன. இவர்களுக்கிடையிலான இடைவெளிகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன. சமுதாயம் முதல் முறையாக இதன் பலனை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. கவிக்கோ பேசும் குர்-ஆன் அறிவியல் பற்றி அறிவியல் நிபுணத்துவப் பின்னணியோடு ஓர் ஆலிம் கேள்வி தொடுக்கும் காலம் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக் காலம் அல்லவா? சிந்தனைச்சரம் மேலே நாம் குறிப்பிட்ட வரலாற்றுப் பதிவுகளிலும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறது.

“ஊற்றுக்கண்” ஒரு நடப்பியல் சார்ந்த தொடர் தான்! நம்மைச் சுற்றி எவ்வளவோ நடக்கின்றன. நம்மைப் பற்றி யார் யாரோ என்னென்னமோ பேசுகிறார்கள். நமக்குப் பிறரால் வரும் துன்பங்களை விட, நம்மாலேயே விழையும் இடர்பாடுகள் தான் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் என் சொந்த அனுபவப் பின்னணியில் நாம் சிந்திக்கப் போகிறோம், இன்ஷா அல்லாஹ்!