1965 – ஆம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியர் அவர்களிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான கல்லூரி. கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடுகள்! லொயோலா மாணவர்களை “லொயோலோவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆஃப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது வெகு அசதாரண விசயம்! பயத்துடன் முதல்வர் அறைக்குள் சென்றேன்.
அறையில் பிரின்ஸிபால் ஃபாதர் ஃபிரான் ஸிஸ், வார்டன் ஃபாதர் தம்பி, டெபுடி வார்டன் ஃபாதர் ஜார்ஜ் இவர்களுடன் ஏழெட்டுப்பேர் இருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் பிரின்ஸிபால் அந்த வெளி நபர்களில் ஒருவரைப் பார்த்து ஆங்கிலத்தில் “நீங்கள் கேட்ட பையன் இவன் தான்” என்றார்.
அந்த நபர் வாட்ட சாட்டமாக இருந்தார். அவர் என்னைப் பார்த்தும் ஆச்சரியத்துடன் பெயரை விசாரித்தார். சொன்னேன்.
“நீ பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவது உண்டா?” என்று கேட்டார்.
“ஆம் ” என்றேன்.
“எந்தப் பத்திரிக்கை?”
“மறுமலர்ச்சி போன்ற பத்திரிக்கைகள்” என்றேன்.
உடனே அங்கு ஆழ்ந்த மௌனம்! ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கண்களால் பேசிக்கொண்டனர்.
அந்த மௌனமும் இறுக்கமும் என்னுள் மிரட்சியை ஏற்படுத்தியது.
பிரின்ஸிபாலின் முகத்திலும் கடுமை படர்ந்தது.
நான் கடுமையான சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து கொண்டேன். அதற்குக் காரணம் இருந்தது.
அப்போது திரு பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். பழுத்த அரசியல்வாதி. அப்போதுதான் தமிழகத்தையும் நாட்டையும் உலுக்கியெடுத்த “இந்தி எதிர்ப்புப் போராட்டம்” நடை பெற்று ஓய்ந்திருந்த நேரம். அதில் அவர் காட்டிய கடின அணுகுமுறை பின்னால் அவரது ஆட்சிக்கே – ஏன்? தமிழகத்தில் இதுவரை நிரந்தரமாக காங்கிரஸ் ஆட்சிக்கே முற்றுப் புள்ளி வைத்தது என்பது பிந்தைய வரலாறு!
சமுதாயத்த்தின் ஜீவ மூச்சாக “மறுமலர்ச்சி” வார இதழ் சங்க நாதம் முழக்கிக் கொண்டிருந்த பொற்காலம் அது!
நான் அடிக்கடி மறுமலர்ச்சியில் கவிதைகள் எழுதுவேன்.
காங்கிரஸ் அரசை மறுமலர்ச்சி மிகக் கடுமையாக விமரிசிக்கும். ஆசிரியர் நாவலர் யூசுஃப் அண்ணன் அவர்களை, அது பொறுக்காத முதல்வர் “பாக்கிஸ்தான் ரேடியோ கேட்டார்” என்ற குற்றச்சாட்டில், அப்போது நாட்டில் அமலில் இருந்த கடுமையான “இந்திய பாதுகாப்புச் சட்டத்தில்” (டிஃபென்ஸ் ஆஃப் இந்தியா ஆக்ட்)கைது செய்து சிறையில் போட்டது.
இன்று பிரபலமாயிருந்து – இப்போதுள்ள மத்திய அரசால் நீக்கப் பட்ட “போட்டா” சட்டத்தின் மூலமே இந்தச் சட்டம்தான்! அதுதான் பின்னாளில் மிசா, தடா என்றெல்லாம் உருவமெடுத்தது. எந்த விசாரணையும் கிடையாது.
உதவி ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப் மறுமலர்ச்சியை அதே காட்டத்துடன் வெளிட்டார்! அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்!
அதைத் தொடர்ந்து குளச்சல் ஷாஹுல் ஹமீத் பத்திரிக்கையை எடிட் செய்தார். அவரும் கைதானார்!
இருந்தும் பத்திக்கை வாரா வாரம் விற்பனைக்கு வந்துகொண்டிருந்தது!
‘பத்ரகாளி’ யானார் முதல்வர் பக்தவத்சலம்!
அந்த நேரத்தில்தான் சிறையிலிருந்து அண்ணன் யூசுஃப் அவர்கள் எனக்கு ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
சுருக்கமாகச் சொன்னால், மறுமலர்ச்சியை வாரா வாரம் வெளியிட கவிதை, கட்டுரைகள், அரசியல் விமரிசனங்கள் அத்தனையையும் நானே எழுதி நான் தரப்பட்டுள்ள ஒரு இடத்துக்கு அனுப்பிவிடவேண்டும்; அது பல கைகள் மாறி, பிரிண்ட் ஆகி, வெளிவரும் என்பதே அந்தச் செய்தி!
“புரட்சி பாஷா” என்ற பத்திரிக்கைத் துறை ஜம்பவான் அதன் பின்னணியில்!
நான் ஆக்கங்களை எழுதி, லொயோலா இருக்கும் நுங்கம்பாக்கத்தில் போஸ்ட் செய்யாமல், சைதாப் பேட்டை வரை சென்று அங்கு போஸ்ட் செய்வேன்.
பத்திரிகை வாராவாரம் ஸ்டேண்டில்!
தமிழக அரசுக்கு மிகப் பெரிய சவால்!
இப்படி 6 வாரங்கள் தொடர்ந்தன.
தமிழக அரசின் திறமை மிக்க ஸி.ஐ.டி. கள் சும்மா இருப்பார்களா?
அவர்கள் தூண்டித்துருவி அடையாளம் கண்டு கல்லூரிக்குள் நுழைந்துவிட்டார்கள்!
வந்திருந்த அதிகாரிகள் அனைவரும் பெரிய போலிஸ் அதிகாரிகள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அநேகமாக கல்லூரி நிர்வாகம் என்னைக் கல்லூரியிலிருந்து நீக்கிவிடலாம் என்ற பயம் சூழ்ந்துகொண்டது.
அப்போதைய என் குடும்பச் சூழ்நிலை?
வாப்பா இல்லை!
அண்ணன் கஷ்டப்பட்டு வெளிநாட்டில் சம்பாதித்துப் படிக்க வைக்கிறார்!
சமுதாய விசயங்களில் அதீத ஈடுபாடு காட்டி வம்பில் மாட்டிக் கொண்டாகிவிட்டது!
ஏதும் செய்யத் தோன்றாமல் மௌனமாக நின்றேன். அங்கு ஏக இறுக்கம்!
அந்த தலைமைப் போலீஸ் அதிகாரி கேட்டார்!
“உனக்கு யார் கட்டுரைகளை எழுதிக் கொடுப்பது?” – அவர் குரல் மிகக் கடுமையாக இருந்தது.
“நான் தான் சார் எழுதினேன்”
அவர் நம்புவதாக இல்லை.
“இந்தா பாருப்பா….. நாங்க போலிஸ்!…. உண்மையைச் சொல்லலேன்னா போலிஸ் என்ன செய்யும் தெரியுமா? ” அவர் மேலும் குரலை உயர்த்தி அதட்டினார்! கண்கள் பயமுறுத்தின.
நான் தான் எழுதினேன் என்று சாதித்தேன்.
பிரின்ஸிபால் அவரை சமாதானம் செய்தார்!
அவரே என்னை விசாரிக்கத் தொடங்கினார்.
யார் அக்கட்டுரையை எழுதிக் கொடுத்தது என்ற உண்மையைச் சொல்லிவிட்டால் அவர்கள் என்னைத் தண்டிகாமல் விட்டுவிடுவார்கள் என்று தைரியமூட்டினார்!
நான் கண்ணீர் மல்க நான் தான் எழுதினேன் என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னேன்.
உடனே அந்த அதிகாரி முதல்வருக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னார்.
அவரிடம் முதல்வர் பின்னணியில் இருக்கும் நபரைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.
கடைசியில் என் அறை சோதனை செய்யப் பட்டது. (லொயோலோவில் அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அறை).
என் கட்டுரைகள் – கவிதைகளின் மூலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நான் தான் எழுதினேன் என்பது உறுதி செய்யப்பட்டது.
பிரிஸிபல் முதல்வரிடம் வாதாடினார்.
தாம் கண்டித்துக் கொள்வதாகவும்; இனிமேல் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார்!
அந்த அதிகாரிகள் முன் பிரின்ஸிபாலும் வார்டனும் கடுமையாக என்னைக் கண்டிக்கவும் செய்தார்கள்.
கல்லூரியை விட்டே நீக்கிவிடுவதாகவும் எச்சரித்தார்கள்.
அதிகாரிகளும் அவர்கள் பங்குக்கு எச்சரித்து விட்டுச் சென்றனர்.
நான் அறையில் கலக்கத்துடம் நின்றேன்.
பிரின்ஸிபால் சேரில் இருந்து எழுந்து என்னை நோக்கி வந்தார்.
அவர் கையில் என் கவிதை, கட்டுரைகளின் பிரதிகள்!
என்னை உற்றுப் பார்த்தார்!
அவரது முகத்தில் இப்போது கடுமை மறைந்திருந்தது.
கனிவு பளிச்சிட்டது.
“உன் சமுதாயத்துக்காக உணர்ச்சிப் பூர்வமாக செயல் பட்டிருக்கிறாய்! இந்தச் சிறு வயதில் ……….. இவ்வளவு திறமையோடு ! குட்… பாராட்டுகிறேன். வெல்டன் மை பாய்! ஆனால்…… இனிமேல் இதைச் செய்யாதே! படித்து முடிக்கும் வரை செய்யாதே! வாழ்வில் செட்டில் ஆகும் வரை இப்படி ஆபத்தான எழுத்துக்களை எழுதாதே…. அது உன்னை …. உன் குடும்பத்தை… தகர்த்துவிடும் ..” என்று சொன்னார் – முதுகில் தட்டிக்கொடுத்தார் அன்பாக!
ஃபாதர் ஃபிரான்ஸிஸ் அவர்களை ஒரு சமுதாய எழுத்தாளனாய் நிலைப்பட்டு நிற்கின்ற இந்த நேரத்தில் மிக்க நன்றியறிதலுடன் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்