வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!
கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!
இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
- உங்கள் உரையில் தெரிந்த நட்புசார்ந்த இயல்பான அணுகுமுறை எங்களை மிகவும் கவர்ந்தது.
- ஏழு முக்கியப் பிரச்சினைகளைத் தொட்டீர்கள்; முதலில் அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிரானதல்ல என்பதை உறுதி செய்தீர்கள். தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் முடிச்சிடுவதை உடனே உலகம் நிறுத்த வேண்டும் என்று உரத்து முழங்கினீர்கள். இதை உங்களுக்கு முன் அதிபராக இருந்தவரும் சொன்னார்தான். என்றாலும் இதில் அவரிடம் காணப்பட்ட அருவருப்பான ஆணவம் இல்லை.
- இஸ்ரேல்/பாலஸ்தீனம் இரண்டும் முழு உரிமையுடன் பக்கத்து நாடுகளாக அமைதியுடன் வாழ வேண்டும் என்றீர்கள். புஷ் உட்பட எல்லோரும் கூறிவந்ததுதான் இது. ஆனால் பாலஸ்தீனத்தில் தொடரும் யூதக் குடியிருப்பு முழுமையாக நிறுத்தப்படவேண்டும் என்று சொன்னதில் தெரிவித்த அழுத்தம் வலிமையானது என்பதை சில யூதப் பிரதிபலிப்புகளிலிருந்து நாங்கள் உள்வாங்க முடிகிறது.
- மற்றெந்த நாட்டினையும் போல ஈரான் தனது நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியான முறையில் அணுமின் செயல்பாடுகளை மேற்கொள்ள உரிமை உண்டு என்று அழுத்திச் சொன்னீர்கள்.
- முஸ்லிம் உடையழுக்கத்துக்கும் (குறிப்பாக பெண்களின் ஹிஜாப்) கல்விச் சிறப்புக்கும் முடிச்சிடுபவர்களின் முட்டாள் தனத்தை மிக நாகரிகமாகக் கண்டித்தீர்கள்.
- இஸ்லாம் இந்த உலகத்துக்கு அளித்த அதீத அறிவியல் பெருங்கொடைகளை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தீர்கள்.
- வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் அனைத்தும் செயலுக்கு வரவேண்டும்; அதற்கு அமெரிக்கா தயார் என்றீர்கள்.
…. இப்படி இயல்பான ஆனால் கண்டிப்பான தொனியில் அமைந்த உங்கள் உரை பல வகையில் உலக மக்களை ஈர்த்தது …. நாங்களும் ஈர்க்கப் பட்டோம்.
எந்த அராஜகமும் ஒரு முடிவுக்கு வரவேண்டும்; வந்தே ஆக வேண்டும்; வந்தே தீரும்!அதுதான் இறை நியதி !
அதனைச் செய்து முடிக்க தக்க தருணத்தில் ஒருவரை அல்லாஹ் அனுப்புவான் !அவர் அதனைச் செய்து முடிப்பார்!
அப்படித்தான் இந்த உலகத்தின் அனைத்து வரலாற்றுப் பதிவுகளும் அறைந்து கூறுகின்றன.
அந்த வரலாற்று நாயகர் நீங்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை; குறிப்பாக உங்களது இந்த உரையைக் கேட்டபிறகு! அதற்குக் காரணம், நீங்களே கூறியபடி, மூன்று கண்டங்களில் இஸ்லாத்தைப் பார்த்த – நுகர்ந்த அனுபவமுடையவர் நீங்கள். அதிலும் உங்கள் ரத்தத்தில் ஒருபகுதி எங்களோடு நேரடியாகவே தொடர்புடையதுதானே?
இருந்தாலும், உங்களைப் பொறுத்தவரை ‘நான் ஒரு கிறித்துவன்” என்று உரையில் ஓங்கி உரைத்து விட்டீர்கள்; அதனால் ஒன்றும் வருத்தமில்லை எங்களுக்கு!
அது அல்லாஹ்வின் இப்போதைய நாட்டம்!
அது தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம் இல்லையா?
நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – ஜூலை 2009