Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2010
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,305 முறை படிக்கப்பட்டுள்ளது!

நஞ்சூட்டிகள்

காத்தூண் கதவைத் தட்டினாள். கொஞ்ச நேரத்தில் கதவை லேசாகத் திறந்து யாரென்று உற்றுப் பார்த்தாள் ரக்கீபா! “அட, காத்தூண் மச்சியா? வா, வா! என்னடியம்மா ஆச்சரியமா இருக்கு?” என்று வரவேற்றாள் ரக்கீபா!

துப்பட்டியை கொடியில் போட்டு விட்டு, முற்ற விளிம்பில் ஆசுவாசமாக அவள் உட்கார்ந்து கொண்டது மேலும் ஆச்சரியப்படுத்தியது ரக்கீபாவை.

காத்தூண், தூரத்து உறவு. அவளது அத்தா இவளுக்கு ஒன்றுவிட்ட மாமா. நெருக்கமான தோழி என்று கூடச் சொல்ல முடியாது! எப்போதாவது ஒரு முறை உறவு முறை விசேஷங்களில் சந்தித்துக் கொண்டால் உண்டு என்ற அளவில் தான் நெருக்கம்!

அவள் திடீரென்று வீட்டுக்கு வந்தவுடன் ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருக்கலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் அவள் வந்ததும், முற்றத்திண்ணையில் உட்கார்ந்ததும் அவளது நோக்கம் வேறு என்பதைத் தெளிவாக்கின. ஆனால் அது என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை!

உபசரணைக்காக ஒருவாய்க் காப்பிப் போட்டுக் கொடுத்தாள் – பலகாரத்தட்டை எடுத்து முன் வைத்தாள்! சம்பந்தா சம்பந்தமில்லாத அவள் பேச்சு மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தியதே தவிர வந்த காரணத்தை யூகித்தறிய உதவவில்லை!

“தம்பி பயணத்திலிருந்து வந்துட்டாக போலிருக்கே போனியலா!” என்று கேட்டாள் காத்தூண!

“ஆமா, மச்சி! தம்பியும் வந்திச்சி! நானும் போயிட்டு வந்தேன்!”

“என்ன சாமான் கொண்டாந்தாக உங்களுக்கு?”

ஏதோ நெறைய சாமான் தந்துச்சி மச்சி! அது தராம எனக்கு வேற யாரு தர்ரது?” எதிர்க்கேள்வியால் அந்த பேச்சை முடிக்க நினைத்தாள் ரக்கீபா!

காத்தூண் விடுவதாக இல்லை! கொடியில் கிடந்த சிங்கப்பூர்ச் சேலையை அவள் கண் பார்த்துவிட்டது! எழுந்து சென்று அதைக் கையில் எடுத்துக் கொண்டாள்! “இதுவும் புதுசாத்தெரியுதே தம்பி தந்ததுதானா?” என்றாள்.

“ஆமா! மச்சி” என்று சுருக்கமாகச் சொன்னாள் ரக்கீபா! அந்த சேலையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள் – தடவிப்பார்த்தாள்! “இது ஒரு சேலை தானா, வேற ஏதாச்சுமா?”

இன்னொரு சேலையும் தந்துச்சி மச்சி!”

“எங்கே, அதைக் காட்டுங்க பார்க்கலாம்?”

ரக்கீபாவுக்கு சங்கடமாக போய்விட்டது என்ன இவள். விடாக்கண்டன் கொடாக்கண்டனாட்டம் கொஞ்சங்கூட இங்கிதமில்லாமல்!

அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்ட காத்தூண் “சும்மா கொண்டாந்து காட்டுங்க மச்சி! உங்க தம்பி கொண்டாந்து ஆசையா அக்காவுக்கு கொடுத்தத  நான் ஒன்னும் அள்ளிக்கிட்டுப் போயிடமாட்டேன்?” என்றாள்.

வேறு வழியில்லாமல் உள்ளே சென்று, தம்பி பஷீர் கொடுத்த மற்றொரு சேலையையும எடுத்து வந்து காண்பித்தாள்.

“ஆக, அக்காவுக்கு எட்டும் எட்டும் பதினாறு வெள்ளிக்குள்ள தம்பிக்காரரு காரியத்தை முடிச்சுபபுட்டாரு” என்றாள் நக்கலாக!

சுருக்கென்றது ரக்கீபாவுக்கு! ஒரே தம்பி பஷீர், அவளுக்கு! அதிகம் பாசம் கொண்டவன். அக்கா சிரமப்படும் சூழ்நிலை தெரிந்து உதவக்கூடியவன். அவனது மனைவி ரஷீதாவும் கூட மிக நல்லவள். வசதியான குடும்பத்தில் பிறந்தவள் என்றாலும், அலட்டல் கிடையாது. அலட்சியம் கிடையாது. குறிப்பறிந்து உதவுவாள். ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இதுவரை இல்லை! வருவதற்கு முகாந்திரங்களும் கிடையாது. நல்ல புரிந்துணர்வு, பரஸ்பரம்!

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவே விரும்பாத ரக்கீபாவின் மெளனத்தைத் தவறாக எடை போட்டு விட்ட காத்தூண் மேலும் ஒரு படி போனாள்! “அக்காதானே! மச்சனிமாரா ஒசத்திச் சாமான் வாங்கிக் கொடுக்கிறதுக்கு?”

ரக்கீபாஅவளையே பார்த்தாள்!

மெல்ல அவளது கவனத்தை தன்பால் ஈர்த்துக் கொண்டு விட்ட தைரியத்தில் காத்தூண் தொடர்ந்தாள் “ஆமா, மச்சி! உங்க தம்பியோட மூத்த மச்சினி ஷரீபா எங்கவூட்டுக்கு அடுத்தவூட்டுக்காரிதானே? அவளுக்கு மூனு சேலை! உசத்திச்சேலை. அவ தங்கச்சி ஆயிஷாவுக்கும் மூனு சேலைதானாம். அவங்க புள்ளகுட்டிகளுக்கும் ஒரு குத்துப்பெட்டி நெறைய சாமான்களாம். ஷரீபா பெருமையா எங்கிட்ட கொண்டாந்து காட்டினா. அப்புறம் டெய்லர் மைமூனா வீட்டுக்கு ஒரு வேலையாப் போனேன்! அங்கேயும் ஒங்க தம்பி கொண்டாந்து ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த சாமான்கதான் தைக்க வந்து கெடந்துச்சி! அதான் உங்ககிட்ட வந்து அவரு உங்களுக்கு என்ன தந்தார்னு விசாரிக்கலாம்னு வந்தேன்” என்று தன் வருகையின் காரணத்தை உணர்த்தினாள் காத்தூண்.

ரக்கீபா தன் தம்பி அவளது மச்சினிகளுக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் உயர்வான சாமானகளாகக் கொடுத்துவிட்டு, தனக்கு மிகச் சாதாரணமானவற்றைக் கொடுத்து விட்டான் என்று அறிந்த மாத்திரத்தில் கோபப்டுவாள் என நினைத்த காத்தூணின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது!

விரக்தியாகச் சிரித்துக் கொண்ட ரக்கீபா அவளை நோக்கி சொன்னாள்! “மச்சி! எந்தம்பி, யார் யாருக்கு என்ன கொண்டாந்தாங்கிற விஷயத்தை நீங்க சொல்லித் தெரிய வேண்டிய அவசியமே இல்லே!

காரணம்! இன்னமும் அவன் கொண்டு வர்ர சாமான நான்தான் பிரிக்கிறேன். யார் யாருக்கு என்னென்ன சாமான்னு தீர்மானிக்கிறதும் நான்தான்! இப்பவும் அப்படித் தான் பிரிச்சிக் கொடுத்துட்டு எனக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு வந்தேன்!

நீ சொல்றது மாதிரி இந்தச்சேலை சீப்பானது தான். ஒத்துக்கிறேன். ஷரீபாவுக்கும் அவ தங்கச்சிக்கும் கொடுத்ததும் உசத்திச் சேலைதான்! மறுக்கல. அவங்களுக்கு நல்லா கொடுத்தாத்தான் எந்தம்பிக்கு மரியாதை! பணக்கார சூழல்ல வாழுற அவங்களும் எந்தம்பியையும், எந்தம்பி பொண்டாட்டியையும் மதிப்பாளுங்க! எங்கஷ்டம் என்னோட! எனக்கு இது போதும்! எந்தம்பி எனக்கு எந்த குறையும் வைக்கல இதுவரை – இனியும் வைக்க மாட்டாங்கற நம்பிக்கை எனக்கு!

எல்லா அக்காமாருங்களும் சராசரியாகத்தான் இருக்கணுண்ட அவசியம் இல்லை மச்சி! நான் வித்தியாசமானவ. எந்தம்பி நல்லாயிருக்கறதும், அவன எல்லோரும் மதிச்சி ஒசத்தியா பேசறதும்தான் எனக்குப் பெருமையிண்டு நெனைச்சிருக்கிறவ நான்!”

ரக்கீபாவின் அந்த வார்த்தைச் சாட்டையில் துவண்டு போன அந்த நச்சுப்பாம்பு கொடியில் தொங்கிய துப்பாட்டியை அவசரமாக அள்ளிக்கொண்டு சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறியது.