Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,704 முறை படிக்கப்பட்டுள்ளது!

மங்கையருள் மாணிக்கம்

“அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜியார் பணம் தரச் சொன்னாக”
மென்மையான ஒரு குரல்  … தொலைபேசியில்!
“சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்”
நான் பதில் சொல்வேன்.

இராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்!

இப்படி எத்தனை முறை நிகழ்ந்திருக்கும்?
எத்தனை ஆண்டுகள் நிகழ்ந்திருக்கும்?
நினைத்துப் பார்க்கிறேன்! கண்கள் குளம் கட்டுகின்றன!
தொண்டை அடைத்துக் கொள்கிறது!
அந்த மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் தங்கை ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்கள்!
தேரிருவேலி தந்த மூத்த பொறியாளர், சமூகத்தைப் பற்றியே சதா சிந்தித்து -கவலைப் பட்டு- இயங்கிக் கொண்டிருக்கும் H.Q. நஜ்முதீன் ஹாஜியார்அவர்களின் அன்புத் துணைவியார்!

அக்டோபர் 24-ம் தேதி காலையில் தொடர்ந்து போன் ஒலிப்புக்கள்! ஈமெயில்கள்! உலகின் பல முனைகளிலுமிருந்தும்!
அந்தச் செய்தி….  சகோதரி செய்யதுபாத்திமா அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் என்ற தகவல்தான்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

என் மகன் திருமண சமயத்தில் குவைத் – உம்ரா பயணத்தில் இருந்த ஹாஜியார் தம்பதிகள், வாழ்த்துச் சொல்வதற்காக ஜூன் இறுதியில் என் இல்லம் வந்தபோது சந்தித்தித்துக் கொண்டதுதான் கடைசிச் சந்திப்பாகிவிட்டது!

நர்கிஸுக்கும் – ஹாஜியார் தம்பதியருக்கும் இடையிலான தொடர்பு வாசகநெஞ்சங்களுக்கு நன்கு தெரிந்ததாகும்.

சமுதாயப் பெண் கண்மணிகளின் உயர் கல்விக் கண்ணைத் திறப்பதற்காக நர்கிஸ் தொடங்கிய பரிசுத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பு ஓர் உன்னத வரலாறாகும்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நர்கிஸ் இதழைத் தொடர்ந்து நேசித்து வாசித்து வந்த சகோதரி தமது இறுதிமூச்சுவரை நர்கிஸ் படித்தார் என்பதை ஹாஜியார் சொன்னதும் நெகிழ்ந்து போனோம்.

திருக்குர்ஆன், மார்க்க நூல்கள், சமுதாய இதழ்கள் தவிர வேறு எந்த வகை நூல்களையும் அவர் படித்ததில்லை என்பதும், தொலைக்காட்சியை அவர் பார்ப்பதே இல்லை என்பதும் அவர் வித்தியாசமான ஓர் இம்மை வாழ்வைத்  தேர்ந்தெடுத்த அதிசய தீன்தாரிப் பெண்ணரசி என்று நம்மை நினைக்க வைக்கிறது.

அல்லாஹ் தன்னுடைய அடியானை, தன்னளவில் அழைத்துக் கொள்ள ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். அதில்  ஒரு விநாடியில் மில்லியன் பங்கு நேரம் கூட சுணக்கத்துக்கு வழியில்லை. ஏதோ ஒரு வியாதியைக் காரணமாக்கி,  படைத்த ரப்பு, தன் வல்லமையைக் காட்டிவிடுகிறான். என்றாலும் பலகீனமாகப் படைக்கப்பட்ட நம்மை சில  மரணங்கள் பெரிதாக பாதித்துவிடுகின்றன! அவரது பிரிவிலிருந்து நாம் மீள, சிறிது காலம் பிடிக்கும் என்பது  நிச்சயம்!

சகோதரி ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற தடயங்கள் சந்தேகமின்றி அசாதாரணமானதாகும்!

ஒரு முஸ்லிம் பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தலையாயது அந்தக் கணவன்  செய்கின்ற மார்க்கம் சார்ந்த பணிகளுக்கு அளிக்கின்ற பூரணமான ஒத்துழைப்பாகும். கணவன் அள்ளி அள்ளி  தர்மம் கொடுக்கும் போது ஒரு சிறிதேனும் முகம் சுளிக்காது  அதனை ஏற்றுக் கொள்வதுடன், ‘இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே” என்று பரிந்துரைக்கிற பக்குவம் எத்தனை மனைவியருக்கு  இருந்திருக்கிறது? …  இருக்கிறது?

ஹஜ்ஜா அவர்களிடம் இருந்த பல அரிய பண்புகளில் இது பிரதானமானதாகும் என்பதற்கு என்னைப் போன்ற பல நண்பர்களை அல்லாஹ் சாட்சிகளாக்கியிருக்கிறான்!

நஜ்முதீன் ஹாஜியார் பார்ப்பதற்கு எளிமையானவர்; அமைதியானவர். ஆனால், மார்க்கத்துக்கோ, சமுதாயத்துக்கோ  யாருடைய செயல்பாடும் ஏற்பற்றதாக அமைந்துவிட்டால், தாட்சண்யமில்லாமல் பொங்கியெழும் இயல்புடையவர் என்பதை அவருடன் பழகியவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறோம்!

அவரது துணைவியாரான சகோதரி, ஹாஜியார் தம் மனதில் நினைத்த மாத்திரத்தில் செயலில் முடித்துக் காட்டிவிடும் தாம்பத்தியப் புரிந்துணர்வுடன் வாழ்ந்த வாழ்க்கை ஓர் அரிய இஸ்லாமிய வாழ்க்கையாகும்!

அர்த்தம் பொதிந்த அந்த தாம்பத்தியத்தின் இந்த அகால முடிவு ஹாஜியாரை – அவர்களது குழந்தைகள் -உற்றார் சுற்றத்தாரை  எந்த அளவுக்கு உலுக்கியிருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை அளித்து போஷிப்பானாக’ என்று துஆ செய்வதுடன் நர்கிஸ் உடன்பிறப்புக்கள் அனைவரும் தங்களுடைய பிராத்தனைகளின் நம் சகோதரி ஹஜ்ஜா அவர்களை நினைவுகூருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மர்ஹுமா ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்களுடைய பிழைகளைப் பொறுத்து, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் !  தன்னுடைய நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள் புரிவானாக, ஆமீன்!

நன்றி: நர்கிஸ்  – துணைத்தலையங்கம் – டிசம்பர் -2010