Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,761 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா?

ரொம்ப பிஸியான வேலை நேரம்!

“சார், அவரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கிறார்…. ஏதோ பெர்ஸனலா பேசனுமாம் ” என்றார் உதவியாளர்.

பெர்ஸனல் விசயம் என்பதால் கிளினிக்குக்குள் வர வைத்துப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது.

“ஒரு பத்து நிமிஷம் ஹால்ல இருக்கச் சொல்லு…. இந்தக் கேஸைப் பாத்துட்டு நானே ஹாலுக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.

அதே போல கொஞ்ச நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேஸை முடித்துவிட்டு அவரிடம் சென்றேன். அவர் என் ஊர்க்காரர்தான்…… உறவுக்காரரும் கூட! என்றாலும் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. குறிப்பாகத் தொழில் ரீதியான சந்திப்பு அறவே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

சலாம் சொல்லிவிட்டு … மரியாதை நிமித்தம் குடும்ப நலம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, வந்த விசயத்தைக் கேட்டேன். அவருக்கு டவுனில் ஒரு முக்கிய அரசு அதிகாரியிடம் ஒரு காரியம் நடக்க வேண்டியிருந்தது. அவர் எனது நண்பர் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்… அவருக்கு ஒரு சிபாரிசுக்கடிதம் கேட்டு அவர் வந்திருந்தார்.

சமுதாய நலம் சார்ந்த பல பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால் பல அரசு அதிகாரிகளுடன் அணுக்கமான தொடர்பிருந்த காலம். வெளிநாட்டு – நகர்ப்புற வேலை வாய்ப்புக்களைத் தவிர்த்துவிட்டு சொந்த ஊரில் – கிராமத்தில் தொழில் செய்ய முன்வந்ததை ஒரு நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு பல அதிகாரிகளும் என்னுடன் இயல்பான நட்புக் கொண்டிருந்த காலம் அது. அந்த நட்பைத் தவறுதலாகவோ அல்லது சுயலாபங்களுக்கோ பயன் படுத்தக் கூடியவன் அல்ல என்ற நம்பிக்கை அவர்களது நெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம்.

இந்த நபர் உறவினர் என்றாலும்; அவர் நாடி வந்த காரியம் கொஞ்சம் சிக்கலானது… அந்த அதிகாரி சில நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியே ‘ரிஸ்க்’ எடுத்து அதைச் செய்து கொடுக்க முடியும். அவரைப் பணத்தால் சரிக்கட்ட முடியாது என்பதால்தான் இவர் என் பரிந்துரைக்கு வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டேன். 

சரி என்றோ முடியாது என்றோ ஒரு வார்த்தையில் சொல்லிவிடக் கூடிய விசயம் அல்ல இது! அப்படிப் பேசி அனுப்புவதும் இங்கிதமாகாது அல்லவா?

கொஞ்சம் விரிவாக விசாரிக்க வேண்டும்…. தர்மசங்கடத்தை விளக்கிக் காட்ட வேண்டும்… முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“இப்ப ரொம்ப பிஸியாய் இருக்கிறேன் … மத்தியானம் ரெண்டு மணிக்கு வாங்க .. அமைதியாப் பேசுவோம் ” என்று சொல்லி அனுப்பிவிட்டு பணிக்குத் திரும்பினேன்.

விடை பெறும்போது அவரது முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகளை என்னால் வாசிக்க முடிந்தது. கட்டாயம் அவர் நாடி வந்த காரியத்துக்கு நான் உதவ மாட்டேன் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்!

அவர் மத்தியானம் வருவாரா மாட்டாரா என்பது கூட சந்தேகம்தான் என்று நினைத்துக் கொண்டே பணியில் மூழ்கினேன்.

நான் நினைத்த படியே அவர் இரண்டு மணிக்கு வரவில்லை.

ஆனால் அவர் எந்த அதிகாரியின் உதவியை நாடினாரோ அந்த அதிகாரி அதே இரண்டு மணிக்கு கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் என் வீட்டுக்கு வந்தார் …  பக்கத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு பணிக்காக வந்ததாகவும் அப்படியே ‘நம்ம டாக்டரையும் பார்த்துட்டுப் போகலாமே’ என்று வந்ததாகவும் சொன்னார்.

பேச்சோடு பேச்சாக , காலையில் என்னை வந்து சந்தித்த நபர் பற்றி வெகு ஜாக்கிரதையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

அவர் சிரித்தார். “அவர் உங்களிடம் வந்திருப்பார் என்று தெரிந்துதானே நான் வந்திருக்கிறேன்” என்று கூறி ஆச்சரியப் படுத்தினார். அவரே விளக்கமாகவும் விவரித்தார்.

“டாக்டர், இந்த ஆளுக்கு எங்க ஆஃபீஸ்ல கிளார்க்குகளுக்கு மத்தியில ரொம்ப மரியாதை … அப்படிக் கவனிச்சு வச்சிருக்காரு…! அடிக்கடி வருவாரு.. போவாரு… இந்த விசயம் ஒன்னும் பெரிசில்லே… முடிச்சுக் கொடுத்திடலாம் … இருந்தாலும் இவருக்கு ஒங்கமேல அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லே… ஒங்க பேச்ச எடுத்தாலே கொஞ்சம் நெற்றியைச் சுழிப்பார்… பொழைக்கத் தெரியாம வெளிநாட்டு வாய்ப்புக்களையெல்லாம் விட்டுட்டு கிராமத்துல தொழில் செய்யிறதெல்லாம் கமெண்ட் அடிப்பார் …  உங்களோட நல்ல நோக்கம் புரியாம…! அவருக்கு உரைக்கட்டுமேன்னுதான் தட்டிக் கழிச்சி வச்சேன்… அவருகிட்ட எங்க ஆஃபீஸ் ஆளுக ஒங்களச் சந்திக்கச் சொல்லியிருக்கனும்…  அதுதான் வந்திருக்காரு ” என்றார் அதிகாரி சிரித்துக் கொண்டே.

நானும் சிரித்துக் கொண்டேன். “எல்லோருக்கும் நம்ம நோக்கம் புரியணும்னு தேவையில்லீங்களே… அதுவும் இது என் சொந்த ஊர் … கொஞ்சம் இளக்காரமாப் பாக்குறது சகஜந்தானே… அதெல்லாம் தெரிஞ்சுதானே இங்கே செட்டில் ஆனேன்…. அப்ப அவர இங்கே வரச் சொல்லவா? ” என்றேன்.

“இங்கே வேணாம்… நாளைக்கு ஆஃபீஸுக்கு வரச் சொல்லுங்க … முடிச்சுக் கொடுக்கிறேன்” என்று சொல்லி விடை பெற்றார். அவருக்குத் தகவல் அனுப்ப….. அந்த வேலை முடிய…  அவர் ஆபீஸிலிருந்து நேரடியாக ஓட்டமும் நடையுமாக என்னிடம் வந்து நன்றி சொல்ல … ஆஹா .. ஓஹோ என்று புகழ… அது தேவையற்ற கதை!

விடை பெற்றுச் சென்ற அவரை நான் கூர்ந்து பார்த்தேன்.

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் மனதில் ஊற்றுக் கண்ணெடுத்தது.

எங்கள் வாப்பா (அப்பா) எனக்குப் பதினொரு வயதிருக்கும்போதே வஃபாத்து (மரணம்). குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே சம்பாத்தியத்துக்காக அண்ணன்மார் மலேசியாவில். இருந்தாலும் தம்பியை எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற உந்துதல் எங்கள் அண்ணன்மாருக்கு. ஊரில் 8 -வது வகுப்பு முடிந்ததும் 9-ம் வகுப்பில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் சேர்த்து விட்டார்கள் எங்கள் மச்சான் வரிசைக் களஞ்சியம் அவர்கள்.

பொதுவாக எங்கள் பகுதிக்காரர்களுக்கு அந்தப் பள்ளி பற்றி அதிகம் தெரியாது. அது மாநில அளவில் புகழ் பெற்ற ரெஸிடென்சியல் பள்ளி / ஹாஸ்டல். கட்டணங்கள் எல்லாம் பிற பள்ளிகளுடன் ஒப்பிடும்போது சில மடங்கு அதிகம். அப்போது ஒரு முறை நான் ஊர் வந்திருந்த சமயம் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு சாமான் வாங்கிக் கொடுப்பதற்காக கடைத்தெருவுக்குச் சென்றபோது இந்த நபர் அக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

அவர் என்னை நோக்கி திடீரென “ஏண்டா…எவ்வளவோ பள்ளிகள் பக்கத்துல இருக்கயில இவ்வளவு தூரத்துல போயிப் படிக்கிறயே, அங்கே எல்லாம் ஓசியா? ” என்று கேட்டார்.

எனக்கு சுருக்கென்றது … என்றாலும் அந்த இங்கிதம் தெரியாத – நாகரிகமற்ற மனிதரிடம் பேச்சை வளர்க்காமல் “ஆமாங்க… எல்லாமே ஓசிதான்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

“அதானே பாத்தேன்” என்றார் ஒரு ஏளனப் புன்னகையுடன்.

கடையில் கல்லாவில் இத்ரீஸ் என்ற ஒருவர்; அவர் அருகில் மலேசியாவில் தொழில் செய்யும் அம்பலம் அப்துல் ஹமீது ராவுத்தர்! நான் நகர்ந்த சில விநாடிகளில் பேசிய அம்பலம் அப்துல் ஹமீது அவர்களின் குரல் இன்னும் கூட என் காதில் கணீரென்று கேட்டுக் கொண்டே இருக்கிறது:

தம்பி… ரொம்பச் சிரிக்காதே… ஒரு பதிமூனு வயசுப் பையன் ஒன்ன முட்டாளாக்கிட்டுப் போறான்… அவன் ஓசியில படிக்கலப்பா …. நம்ம ஜில்லாவுலயே ரொம்ப பணக்காரப் பள்ளியில அவன் படிக்கிறான்… தெரியுமா ஒனக்கு? யாரையும் லேசா மதிச்சிடப்படாது தம்பி… பய அவங்க வாப்பா மாதிரியே இருக்கான்…. நீ வேணுன்னாப் பாரு … இவன் பெரிய ஆளா வருவான்